வீட்டு கடனை எளிதாக செலுத்த உதவும் நிதி நடவடிக்கைகள்


வீட்டு  கடனை  எளிதாக  செலுத்த  உதவும்  நிதி  நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:00 AM IST (Updated: 7 Sept 2018 4:07 PM IST)
t-max-icont-min-icon

சொந்த வீடு என்ற கனவை நிஜமாக்க உதவும் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை ஒவ்வொரு மாதமும் கட்டி முடிக்கும்போது ஏற்படும் நிம்மதியை நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

சொந்த வீடு என்ற கனவை நிஜமாக்க உதவும் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை ஒவ்வொரு மாதமும் கட்டி முடிக்கும்போது ஏற்படும் நிம்மதியை நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். குடும்ப ரீதியாக அவ்வப்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளுக்கு மத்தியில் வீட்டு கடன் மாதாந்திர தவணையை எவ்வாறு  நிர்வகிப்பது என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே கவனிக்கலாம்.

தவணைக்கான கால அவகாசம்

வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வீட்டு கடன் பெறும் சமயங்களில் அதற்கான மாதாந்திர தவணையை, வருட வருமானத்தை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் நீண்டதாக தேர்ந்தெடுத்தால், கட்ட வேண்டிய மாத தவணை குறைவாக இருக்கும். 

அதனால், மாத செலவுகளில் பட்ஜெட் பெரிதாக பாதிக்காது. அதே சமயம் எதிர்காலத்தில் கிடைக்கலாம் என்று எதிர்நோக்கும் வருமான உயர்வை கணக்கில் கொண்டு அதிக இ.எம்.ஐ கட்ட இயலும் என்ற நிலையில் தவணை காலத்தை குறைத்து நிர்ணயம் செய்தால், வட்டிக்கான தொகை கணிசமாக குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

தவறாத மாதாந்திர தவணை

கடனுக்கான மாத தவணைகளை இடையிடையே கட்டாமல் தவற விடும் காரணத்தால் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் மீது கொண்ட நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது. அது கிரெடிட் புள்ளிகளை பாதிப்பதால் எதிர்காலத்தில் மற்ற வகை கடன்களை பெற முயற்சிக்கும்போது தடைதாமதங்கள் ஏற்படலாம். அதனால், கடன் தவணைகள் சரியாக திரும்ப செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’

மாத தவணைகளை முறையாக செலுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் நிலையில் மொத்த வீட்டு கடன் தொகையை, குறைவான வட்டி விகிதம் கொண்ட மற்றொரு வங்கி அல்லது கடன் வழங்கும் நிதி நிறுவனத்துக்கு ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்ற முறையில் மாற்றம் செய்து கொள்ளலாம். வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் பல்வேறு கால இடைவெளிகளில் வட்டி விகிதத்தை மாற்றலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் வட்டி விகிதம் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இன்னொரு வங்கி அல்லது நிறுவனத்துக்கு கடனை மாற்றுவது கூடுதல் செலவு மற்றும் நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தற்போதைய வங்கியிலேயே வட்டி விகிதத்தை குறைக்கும்படி கோரிக்கை அளிப்பதும் நல்ல அணுகுமுறை. 

முன்கூட்டியே செலுத்தும் முறை பல்வேறு சமயங்களில் கைகளில்  கூடுதலான பணம் இருக்கும்போது,  கடன் தொகையில் குறிப்பிட்ட அளவை  முன்கூட்டியே செலுத்தி விட்டால், வீட்டு கடன் மாதாந்திர தவணை குறைவதுடன், நிதிச்சுமையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

‘பிரி பேமெண்ட்’ முறை

கடனுக்கான வட்டி தொகை மற்றும் மாத தவணையின் கால அவகாசத்தை குறைக்கும் விதமாக, குறிப்பிட்ட அளவு தொகையை மொத்தமாக ‘பிரி பேமென்ட்’ என்ற முறையில் திருப்பி செலுத்தலாம். பொதுவாக, மாறுபடும் வட்டி முறையில் பெற்ற கடன்களுக்கு பகுதி கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த, வங்கிகள் உள்ளிட்ட வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் எந்தவித கட்டணத்தையும் விதிப்பதில்லை. ‘பிரி பேமென்ட்’ தொகை சில ஆயிரங்களில் கூட இருக்கலாம். 

மேலும், முதலீடு செய்துள்ள பங்குகள் மற்றும் பண்டுகள், பத்திரங்கள், சொத்து விற்பனை, போனஸ், வைப்பு நிதி திட்டம், வரி சேமிப்பு முதலீடுகள் முதிர்வு ஆகியவற்றில் கிடைக்கும் தொகை மூலம் வீட்டு கடனை முழுமையாக அல்லது பகுதியாக செலுத்துவதும் பாதுகாப்பானது.

நிதி மேலாண்மை

வாடிக்கையாளரின் பி.எப், பி.பி.எப், தபால் நிலைய வைப்பு நிதி போன்ற சேமிப்புகள் உள்ளிட்ட முதலீடு ஆகியவற்றை பட்டியலிட்டு அவற்றில் குறைவான வருமானம் கொண்டவற்றை நீக்குவதன் மூலம் நிதி நிலையை மேம்படுத்தலாம். அதன் மூலம் கிடைத்த முதலீடு அல்லது சேமிப்புகளின் மூலம் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதும் சிறப்பான நிதி நடவடிக்கையாக அமையும்.

Next Story