பதிவுகள் முடிக்கப்பட்ட பத்திரங்கள் குறித்து தொலைபேசி தகவல்


பதிவுகள்  முடிக்கப்பட்ட  பத்திரங்கள்  குறித்து  தொலைபேசி  தகவல்
x
தினத்தந்தி 7 Sep 2018 9:00 PM GMT (Updated: 7 Sep 2018 12:19 PM GMT)

வீட்டுமனை, வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் உள்ளிட்ட சொத்துக்களின் உரிமையை குறிப்பிடும் ஆவணங்கள் சார்–பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம்.

வீட்டுமனை, வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் உள்ளிட்ட சொத்துக்களின் உரிமையை குறிப்பிடும் ஆவணங்கள் சார்–பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பொதுவாக, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட நாளிலேயே அனைத்து அலுவலக நடைமுறைகளும் முடிந்து விடுவதில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை பெற்றுக்கொள்வது வழக்கம். 

எஸ்.எம்.எஸ் வசதி

பத்திரப்பதிவு துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி பதிவுப்பணிகள் முடிந்தவுடன் ஆவணங்களை திரும்ப பெற்று செல்வதற்கான தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில குறுஞ்செய்தியாக அதாவது எஸ்.எம்.எஸ் மூலம் ஆவணதாரருக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், சந்தை மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்ட விவரங்கள், செலுத்த வேண்டிய குறைவு முத்திரை தீர்வை, குறைவு பதிவு கட்டணம் போன்ற தகவல்களும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படும். 

நிலுவையில் உள்ள ஆவணங்கள்

பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படுவதுடன், நிலுவையில் இருக்கும் பத்திரங்களின் நிலை குறித்தும் ஆவணதாரருக்கு செய்தி தெரிவிக்கப்படும். 

பத்திரம் தயாரிப்பு

மேலும், வீடு, மனை உள்ளிட்ட இதர சொத்துக்களுக்கான ஆவணங்களை பதிவுத்துறையின் ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் மூலம் https://tnreginet.gov.in என்ற இணைய தளம் மூலம் அவரவர்களே தயார் செய்து கொள்ள இயலும். அவ்வாறு தயார் செய்த ஆவணங்களின் சுருக்கத்தை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதில் புதிதாக பத்திரம் பதிவு செய்பவர்கள் செல்போன் எண்ணை சேர்க்கும் பட்சத்தில் அதனை சரிபார்த்து பதிவுத்துறை ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் ஆவணதாரர்கள் பல்வேறு வசதிகளை பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story