கட்டுமான துறையில் செயல்படும் தொழில்நுட்ப ஆலோசகர்கள்


கட்டுமான துறையில் செயல்படும்  தொழில்நுட்ப ஆலோசகர்கள்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:30 AM IST (Updated: 14 Sept 2018 5:07 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான துறை என்பது அதில் ஈடுபடும் பணியாளர்கள் முதல் திட்டமிட்டு கண்காணிக்கும் பொறியாளர்கள் வரை ஒரே நோக்கமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய துறையாகும்.

பொதுவாக, ஒரு கட்டமைப்பின் தலைமை பொறியாளர் கட்டுமான பணிகளின் பல்வேறு நிலைகளை நிர்ணயித்து, அதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் தேர்வு மற்றும் இதர தொழில்நுட்ப ஆலோசகர்களை நியமித்து அவர்களது ஆலோசனைகளுக்கேற்ப பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

சிறப்பு ஆலோசகர்கள்

இன்றைய சூழலில் கட்டுமானத்துறை பல பிரிவுகளாக அமைந்து அதற்கான சிறப்பு ஆலோசகர்களும் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கட்டிட வடிவமைப்பு கலையில் ((Architecture)  பல விதமான ஆலோசகர்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, கட்டுமான பொறியாளர்கள் (Civil Engineers) மனை உரிமையாளரது விருப்பம் மற்றும் கட்டிடங்களின் அமைப்பு ஆகியவற்றிற்கேற்ப பலதரப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள்.

பல்வேறு பிரிவுகள்


கட்டிட கலையானது,

1) தற்கால கட்டிடக்கலை (Comtemporary)

2) நவீன கட்டிடக்கலை (Modern)

3) பாரம்பரிய கட்டிடக்கலை  (Traditional)

4) எதிர்கால கட்டிடக்கலை (Post Modern)

5) மக்கள் வழக்கங்களுக்கேற்ற கட்டிடக்கலை (Vernacular)

6) நில வடிவமைப்புக்கலை (Landscape)

ஆகிய நிலைகளில் பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களில் மேற்கண்ட துறை வல்லுனர்கள் பங்கு பெற்று ஆலோசனைகளை அளிக்கின்றனர்.

அடித்தள அமைப்பு பொறியாளர்

மேலும், அடித்தள தொழில் நுட்ப பொறியாளர்கள் (Foundation Engineers)) ஒரு கட்டிடத்தின் அமைப்பிற்கு ஏற்றதாக, கட்டிடம் அமைய உள்ள இடத்தின் மண் அமைப்புகள், நிலத்தடிநீர், மண்ணில் நீர் ஊடுருவும் தன்மை போன்றவற்றிற்கு தக்க அடித்தள வரை படத்தை அளிப்பார்கள். அதற்கேற்ப மனையை பல வகையான கருவிகளை பயன்படுத்தி மண்ணின் பளு தாங்கும் திறனை அறிந்து, எந்த ஆழத்தில் எப்படிப்பட்ட அடித்தளம் அமைக்க வேண்டுமென்று வழிகாட்டுவார்கள்.

கட்டமைப்பு பொறியாளர்

கட்டமைப்பு பொறியாளர்கள் (Structural Engineers)  மொத்த கட்டிட பரப்பிற்கேற்ப செங்கல், சிமெண்டு, மணல், ஜல்லி போன்ற மூலப்பொருள்கள், இரும்பு கம்பிகளின் அமைப்பு முறைகள் ஆகியவற்றை கணக்கிட்டு கான்கிரீட்டின் திறனுக்கேற்ப வடிவமைப்பு சார்ந்த வரைபடங்களை அளிப்பார்கள்.

மின்சாரம்–நீர் மேலாண்மை  நிபுணர்கள்

கட்டுமான பணிகளில் மேற்கொள்ளப்படும் இதர வேலைகளான மின் இணைப்பு, வடிகால் மற்றும் குடிநீர் அமைப்பு போன்றவற்றை அதற்கான வல்லுனர்கள்

(Electrical sanitation And Water Supply  Consultants) கட்டிடத்தின் தேவைகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வழிகாட்டுவார்கள்.

கட்டுமான மேலாண்மை

மேலும், கட்டுமான மேலாண்மை வல்லுனர்கள் (Project Management Consultants) பணியில் ஈடுபடும் அனைத்து நிபுணர்களையும் ஒருங்கிணைத்து, பணிகளில் பொருட்கள் விரயம் மற்றும் கூடுதல் பட்ஜெட் ஆகிய சிக்கல்கள் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் கட்டுமான பணிகளை முடிக்க துணையாக இருப்பார்கள். 

Next Story