வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும் குடியிருப்பு திட்டங்கள்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும்  குடியிருப்பு திட்டங்கள்
x
தினத்தந்தி 15 Sept 2018 6:00 AM IST (Updated: 14 Sept 2018 5:55 PM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் துறையில் சென்ற ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறை சட்டம் மூலம், கட்டுமானத் திட்டங்களின் உள்ள வெளிப்படை தன்மைகளால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் பெரு நகரங்களில் அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்புகளை வாங்க விரும்புவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வீட்டு மனைகள், இடம் மற்றும் குடியிருப்புகள் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. நிலம் மற்றும் வீடுகளின் சந்தை மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளை விடவும் தற்போது சுமார் 15 முதல் 20 சதவிகித அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

சொந்த ஊரில் வீடு

முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது, இன்றைய நிலையில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் சொந்த ஊரில் சொந்தவீடு என்ற அடிப்படையில் அல்லது எதிர்கால நலன்களுக்கான முதலீடு என்ற அடிப்படையில் வீடுகளை வாங்க முன் வந்துள்ளனர். அதன் அடிப்படையில் பெங்களூரு, புனே போன்ற பெரு நகரங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் ஆடம்பர குடியிருப்புகள் கொண்ட கட்டுமான திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரியல் எஸ்டேட்  விதிமுறைகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களால் பணி ஓய்விற்கு பிறகு தாய்நாட்டில் வசிக்க வீடு அல்லது குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், முதலீடுகளுக்கான ஒழுங்குமுறை விதிகளை ரிசர்வ் வங்கி

எளிமையாக்கி உள்ளது. வெளிநாட்டு பரிமாற்ற மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act-FEMA)  வெளிநாடுவாழ் இந்தியர்களின் ரியஸ் எஸ்டேட் பரிவர்த்தனைகள் பற்றி வகுத்துள்ள விதிகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

கட்டுப்பாடுகள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வர்த்தகம் அல்லது குடியிருப்பு ஆகியவை தொடர்பான சொத்துக்களில் மட்டும் முதலீடு செய்யலாம். குடும்ப ரீதியாகவோ அல்லது பரிசாகவோ கிடைக்காத பண்ணை வீடு மற்றும் தோட்டம் உள்ளிட்ட விவசாய சொத்துக்களை இங்கே பதிவு செய்ய முடியாது. மேலும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் யாரும் இந்தியாவில் அசையா சொத்துக்களை வாங்க முடியாது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத கால அளவுக்கு உட்பட்டு ஒரு சொத்தை குத்தகைக்கு எடுக்கலாம்.

பணப்பரிவர்த்தனை

சொத்துக்களுக்கான பணப் பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் நடைபெற வேண்டும். அதாவது, வெளிநாடு வாழ் இந்தியர்களால் பராமரிக்கப்படும் என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ அல்லது எப்.சி.என்.ஆர் ஆகிய கணக்குகள் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தியாவில் உள்ள சொத்துகளை விற்பதன் மூலம் அல்லது அதன் மூலம் கிடைக்கும் வாடகை மூலம் பெறப்படும் வருவாய்க்கு உரிய வரிகளையும் செலுத்த வேண்டும்.  

வருவாய்க்கான வரிகள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்த சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பில் 20 சதவிகித வரி விதிக்கப்படும். அவை, குடும்ப வழியில் பெறப்பட்ட சொத்துக்களாக இருந்தால் அவை வாங்கப்பட்ட தேதியில் இருந்து கால அளவு கணக்கிடப்படும். அல்லது அதன் முந்தைய உரிமையாளரிடமிருந்து பெற்ற மதிப்பின் அடிப்படையில் வரி கணக்கில் கொள்ளப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாடகை வருவாய் மற்றும் அதன் வரிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு கணக்கிடும் முறையில் மேற்கொள்ளப்பட்டு, வருமானவரி சட்டத்தின்படி வரி விலக்குகளும் அளிக்கப்படும்.     

வீட்டு கடன் வசதிகள்

இந்தியாவில் வசிப்பவர்களுக்கான வீட்டு கடன்கள் போல வெளிநாடு வாழ் இந்தியர்களும் வீட்டு கடன் பெற்று, அதை அவர்களது என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ அல்லது எப்.சி.என்.ஆர் கணக்குகள் மூலம் திரும்ப செலுத்தலாம். அல்லது அவர்களது குடும்ப உறவினர் வங்கி கணக்கு மூலமாகவும் திரும்ப செலுத்த இயலும்.

Next Story