சொந்த வீட்டை கட்டமைக்க முறையான திட்டம் அவசியம்


சொந்த வீட்டை கட்டமைக்க முறையான திட்டம் அவசியம்
x
தினத்தந்தி 29 Sep 2018 5:36 AM GMT (Updated: 29 Sep 2018 5:36 AM GMT)

முதன்முதலாக வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ள இருப்பவர்கள் அதை எவ்வாறு தொடங்கி செய்வது என்ற யோசித்தவாறே இருப்பதுண்டு.

நீண்ட நாள் கனவாக மனதில் இருந்து வந்த சொந்த வீட்டை கட்டுவதற்கான பட்ஜெட், அதற்கான இடம் ஆகிய அடிப்படை விஷயங்கள் தயாராக இருக்கும் நிலையில், முதன்முதலாக வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ள இருப்பவர்கள் அதை எவ்வாறு தொடங்கி செய்வது என்ற யோசித்தவாறே இருப்பதுண்டு.

அவர்களுக்கான ஆலோசனையாக பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள கட்டுனர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கே காணலாம்.

* வீடு என்பது குடியிருப்புக்கான அடிப்படை தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்யவேண்டும் என்ற நிலையில், இதற்கு முன்னதாக குடியிருந்த வீடுகள் அல்லது பார்வையிட்ட மற்ற வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் எந்தெந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு முடிவெடுப்பது அவசியம்.

* கையில் உள்ள சேமிப்பு மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட இதர பொருளாதார நிலைகளின் அடிப்படையில் வீட்டுக்கான மொத்த பட்ஜெட் பற்றி தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு ஏற்ப பெட்ரூம்கள் உள்ளிட்ட வசதிகள், இரண்டு அடுக்கு மாடியா..? அல்லது ‘டியூப்ளெக்ஸ் டைப்’ வீடா..? என்று முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் குடும்ப அங்கத்தினர்கள் விருப்பத்தை மனதில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

* வீட்டுக்கான வரைபடத்தில் தேவையான கட்டமைப்புகள் அனைத்தையும் தக்க அளவுகளுடன் வரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த பிளானை எத்தனை தடவை வேண்டுமானாலும் வெவ்வேறு முடிவுகளுக்கேற்ப அறைகள் மற்றும் வாசல்கள் ஆகியவற்றை மாற்றி வரைந்து கொண்டு தெளிவான இறுதியான முடிவுக்கு வரவேண்டும். அதன் பின்னர்தான் சரியான பட்ஜெட்டை முடிவு செய்ய இயலும்.

* அதன் பின்னர் தற்போதைய சந்தை நிலவரப்படி தோராயமாக ஒரு சதுரடி கட்டுமான பணிக்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்று கணக்கிட்டு, வரைந்துள்ள பிளான்படி வீட்டுக்கு எவ்வளவு பட்ஜெட் ஆகலாம் என்பதை தோராயமாக அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, வீட்டின் கட்டுமான பணிகளில் தற்பொழுது செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் என்று இரண்டு விதமாக பிரித்துக்கொண்டு பணிகளை செய்வது நல்லது.

* எதிர்கால பணிகள் என்பதில் கட்டிட வேலைகள் முடிந்த பிறகு பிற்காலத்தில் செய்யக் கூடிய பணிகளுக்கேற்ப கட்டிட அஸ்திவாரத்தை அமைப்பது மற்றும் அத்தகைய பணிகளுக்கான ‘ஸ்ட்ரக்சுரல் எலிமெண்ட்’ என்ற கட்டுமான பாகங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஜி+2 என்ற அமைப்பில் கட்டிடம் கட்டுவதாக முடிவெடுத்த பின்னர், அதற்கான அஸ்திவார பணிகளை உரிய விதத்தில் செய்து கொண்டுதான் வீட்டின் கட்டுமான பணிகளை செய்ய வேண்டும்.

* கட்டிட பணிகளில் மேற்கூரை அமைத்த பின்னர் வீட்டின் உள் கட்டமைப்பு வசதிகள் பற்றி முடிவெடுக்க வேண்டும். அதாவது, மாடுலர் கிச்சன் அமைப்பு, ‘பால்ஸ் சீலிங்’ கட்டுமானம், தரைத்தளத்திற்கு விலை உயர்ந்த மார்பிள் போன்ற கற்கள் பதிப்பது போன்ற விஷயங்களை முடிவு செய்வது கொள்ள வேண்டும். வீடு அசையாமல் தின்னும் என்ற பழமொழியை எப்போதும் மனதில் கொண்டு கச்சிதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

* பொதுவாக, ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் 4 விதமான வரைபடங்கள் மற்றும் கட்டுமான ஆலோசனைகளை பெறுவது பல குழப்பங்களை தீர்ப்பதாக அமையும். மேலும், வீட்டின் கட்டுமான பணிகளை செய்வது காண்ட்ராக்டர் அல்லது கட்டுனர் ஆகிய யாராக இருந்தாலும் அனுபவம் பெற்றவர்களாக இருப்பது அவசியம். 

Next Story