பாரம்பரியமும், புதுமையும் இணைந்த கட்டுமான அமைப்புகள்


பாரம்பரியமும்,  புதுமையும்  இணைந்த  கட்டுமான  அமைப்புகள்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 5 Oct 2018 4:06 PM IST)
t-max-icont-min-icon

ராஜபுதன கட்டிடக்கலை மற்றும் முகலாயர் கட்டிடக்கலை ஆகிய இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்கள் ஒன்றிணைந்த கலாசார கலவையாக அமைந்த வரலாற்று பெருமை மிக்க நகரம் பதேபூர் சிக்ரி ஆகும்.

நாகரிகங்கள் இணைந்த கட்டிட கலை 

ராஜபுதன கட்டிடக்கலை மற்றும் முகலாயர் கட்டிடக்கலை ஆகிய இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்கள் ஒன்றிணைந்த கலாசார கலவையாக அமைந்த வரலாற்று பெருமை மிக்க நகரம் பதேபூர் சிக்ரி ஆகும். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள அந்த நகரத்தில் கண்கவர் அழகும், நுட்பமான கலைத்திறனுடன் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கும் மேலான காலகட்டத்தை கடந்தும் நிலைத்து நிற்கின்றன. இன்றைய நவீன யுகத்தின் புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களுக்கு சவால் விடும் வகையில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் பளபளப்பாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன. 

அந்த கட்டிட அமைப்புகளில் பொதுமக்களை மன்னர் சந்திப்பதற்கான திவான் ஐஆம் ஹால், பிரதிநிதிகளை சந்திப்பதற்கு திவான்ஐ காஸ் ஹால், பீர்பால் ஹவுஸ், மரியம் உல் ‌ஷமானி அரண்மனை, ஐந்து அடுக்குகள் கொண்ட மாளிகையான பஞ்ச் மஹால், ஜும்மா மசூதி, பிரகாசமான மார்பிள் கற்கள் மற்றும் சிவப்பு பாறைக்கற்கள் ஆகியவற்றால் அமைந்த டாம்ப் ஆப் சலீம் சிஷ்டி, புலந்த் தர்வாஸா போன்றவை குறிப்பிடத்தக்கவை.  அன்றைய காலகட்ட கட்டுமான தொழில்நுட்ப திறமைக்கு சான்றாக விளங்கும் பதேபூர் சிக்ரி 1986–ம் ஆண்டு உலக பண்பாட்டு சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலியியல் தத்துவத்தை வெளிப்படுத்தும் கட்டமைப்பு

ர்நாடகா மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்ட தலைநகர் பிஜப்பூர் நகரில் உள்ள அடக்கத்தல கட்டிடம் கோல் கும்பாஸ் (Gol Gumbaz) ஆகும். கி.பி.1656–ல் யாகூத் என்ற கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டது. வட்ட வடிவ குவி மாடம் என்று பொருள் கொண்ட கோல்கும்பாஸ் தென்னிந்திய சுல்தானக கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.


கனசதுர வடிவமான கட்டிடத்தின் ஒவ்வொரு பக்கமும் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை 47.5 மீட்டர் என்ற ஒரே அளவினை கொண்டவை. மேல்புற குவிமாடம் 44 மீட்டர் விட்டமும், எட்டு வளைவுகள் மற்றும் இரண்டு சதுர அமைப்புகள் குவி மாடத்தை தாங்குகின்றன. 

நான்கு மூலைகளிலும் மூடப்பட்ட எண்கோண குவி மாட கோபுரத்தின் உள்புறமாக படிக்கட்டுகள் உள்ளன. மேல் மாடியில் குவிமாடம் சூழப்பட்ட ஒரு சுற்று கேலரியில் திறக்கிறது. சமாதி மண்டபம் உள்ளே, ஒவ்வொரு பக்கத்திலும் சதுர மேடை உள்ளது. இக்கட்டிடத்தின் மையத்தில் இருந்து சாதாரணமாக பேசினாலும், அதன் அனைத்து பகுதிகளுக்கும் தெளிவாக கேட்கும் விதத்தில் கட்டிட அமைப்பானது ஒலிப்பரவல் விதி கச்சிதமாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ள விதம் கவனிக்கத்தக்கது.   

உலக பாரம்பரியங்கள் சங்கமித்த கட்டிடம்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் விக்டோரியா ராணி நினைவிட கட்டுமானம் அமைந்திருக்கிறது. 1906–ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 1921–ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. கட்டிடத்தின் வடிவமைப்பை பிரபல கட்டிடக் கலை நிபுணர் வில்லியம் எமர்சன் இங்கிலாந்து மற்றும் முகலாய கட்டிடக்கலை ஆகியவற்றின் கூட்டு கலவையாக அமைத்தாலும், வெனிஷியன், எகிப்து மற்றும் தென்னக கட்டிடக்கலை பாணிகளின் தாக்கத்தையும் அதில் காண இயலும்.

அதன் கட்டுமான பணிகளில் வெள்ளை பளிங்கு கற்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் உள்ள பெரிய மண்டபம் 338–க்கு 228 அடி அளவாகவும் அதன் உயரம் 184 அடியாகவும் உள்ளது. இந்த நினைவிடம் பிரமாண்டமான அளவில் 64 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மலர் தோட்டங்களுடன் இணைந்துள்ளது. 

மேலும், வெற்றி தேவதை ஒன்று கைகளில் குழலை வைத்திருக்கும் கருப்பு வெண்கல சிலை நினைவிடத்தின் மேல் உள்ள மாடத்தின் முகட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் உள்ள பந்து கோளந்தாங்கியுடன் அதன் பீடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்று வேகமாக வீசும்போது காற்றுத் திசைகாட்டியாகவும் அது செயல்படுகிறது.

இந்தியா 1947–ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, விக்டோரியா நினைவிடத்தில் கூடுதலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவை தேசியத் தலைவர்களை நினைவுபடுத்தும் காட்சிகளை கொண்டதாக இருக்கின்றன. சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் அங்கே உள்ளன.

மிதக்கும் அறைகள் கொண்ட அலுவலகம்

ட்டுமான தொழில்நுட்பத்தில் ‘கேண்டிலிவர்’ என்பது பொதுவாக பால்கனிகள் மற்றும் மாடிப்படிகள் போன்ற கட்டுமான அமைப்புகளை வடிவமைக்க பயன்படுகிறது. அதாவது, ஆதாரமாக உள்ள ஒரு தூணை மையமாக கொண்டு அதிலிருந்து வெளிப்புறமாக குறிப்பிட்ட அளவுக்கு முன் தள்ளியவாறு மற்ற ஆதாரங்களால் தாங்கப்படாமல் அமைக்கப்படும் கான்கிரீட் தளம் அல்லது இதர உலோக தளங்கள் கொண்ட பயன்பாடு சார்ந்த கட்டுமான வடிவம் கேண்டிலிவர் ஆகும்.

அருகில் உள்ள மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூருக்கு பக்கத்தில் இருக்கும் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கட்டுமானம் கேண்டிலிவர் அமைப்புக்கு உதாரணமாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுரடி பரப்புக்கும் அதிகமான அளவில் 1500 பேர்கள் தங்கக்கூடிய வகையில் அந்த அடுக்கு மாடி அலுவலகம் அமைந்துள்ளது. 

கட்டுமான அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை காரணமாக இயற்கையான வெளிச்சம் போதுமான அளவில் கிடைப்பதால், குறிப்பிட்ட அளவு மின்சக்தி அங்கு சேமிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ‘மேட் இன் இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உலக ஒற்றுமையை வலியுறுத்தும் அதிசய கட்டமைப்பு

மாத்ரு மந்திர் என்ற இந்த கட்டமைப்பு அமைந்துள்ள ஆரோவில் (Auroville) விழுப்புரம் மாவட்டத்தில், யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது. 

பாதிப்புக்கு உள்ளான பழங்கால கட்டிடங்களை பாதுகாத்தல், அவற்றை மரபு மாறாமல் புதுப்பித்தல், இயற்கையோடு இசைந்த வண்ணம் கட்டிடங்களை எளிமையாக அமைத்தல் உள்ளிட்ட பல நிலைகளில் ஆரோவில் தன் பணிகளை செய்து வருகிறது. வறண்ட பகுதியாக உள்ள அப்பகுதியை ஆன்மிக நகரமாக உருவாக்குவதற்கு 40 நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளூர் மக்களின் துணையோடு உழைத்திருக்கிறார்கள். 



மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி மகேஸ்வரி ஆகிய வடிவங்களை உணர்த்தும் வகையில் இந்த அமைப்பை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இது சிறிது தட்டையான கோள வடிவ ஆலயமாகும். தரை மட்டத்திலிருந்து 29 மீட்டர் உயரமும், 36 மீட்டர் விட்டமும் கொண்டது. முக்கோண வடிவ சட்டங்களால் ஆன இக்கோளத்தின் வெளிப்பகுதி வட்ட வடிவமான தங்க முலாம் பூசப்பட்ட தட்டுகளால் அமைந்துள்ளது. 

அதன் உட்புறத்தின் மேற்பகுதியில் பெரிய ஹால் மற்றும் பனிரெண்டு பக்கங்களை கொண்ட அதன் தளப்பகுதி மற்றும் சுவர்கள் அனைத்தும் வெண்மை நிற சலவை கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. பனிரெண்டு தூண்கள் கொண்ட அந்த ஹாலில் நுழையவும், வெளியேறவும் இரு வாசல்கள் மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

ஹாலின் மத்தியில் உள்ள மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய தங்க முலாம் பூசிய படிகம் அமைந்துள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள கண்ணாடி வழியாக சூரிய ஒளி உள் புகுந்து படிகத்தில்பட்டு அழகாக பிரதிபலிக்கும். உலக அளவில் பெரிதாக உள்ள செயற்கை படிகமாக அது உள்ளது.

Next Story