அமைதியான உறக்கத்துக்கு ஏற்ற படுக்கை அறை
வீடுகளில் உள்ள படுக்கையறை நிம்மதியான உறக்கத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
வீடுகளில் உள்ள படுக்கையறை நிம்மதியான உறக்கத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொதுவாக, பெரியவர்களுக்கான படுக்கையறை அதிகப்படியான வெளிச்சம் கொண்டதாக இல்லாமல், ‘மிதமான லைட் செட்டிங்’ செய்யப்பட்டிருப்பது அமைதியான சூழலை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில், உள் கட்டமைப்பு நிபுணர்கள் அளிக்கும் குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
இயற்கை வெளிச்சம்
பகல் வெளிச்சமும், சூரிய வெப்பமும் படுக்கை அறைக்குள் வருவது ஆரோக்கியமான சூழலை உண்டாக்கும் என் அறியப்பட்டுள்ளது. வீட்டின் ‘கார்னர்’ பகுதிகளில் படுக்கையறை அமையும் பட்சத்தில் இரண்டு பக்கங்களில் ஜன்னல் இருப்பது பல நன்மைகளை அளிக்கும். அதாவது, ‘கிராஸ் வெண்டிலேஷன்’ என்ற அமைப்பில் பகல் நேரங்களில் வெளிச்சமும், காற்றும் அறைக்குள் எளிதாக உள் நுழைந்து சுகாதாரமான சூழலை ஏற்படுத்தும்.
அறையின் அளவு
இடத்திற்கேற்ப சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ படுக்கையறை அமைக்கப்படும் நிலையில் அதன் இட வசதியை பாதிக்காதவாறு ‘லாப்ட்’ கட்டுமானத்தை வடிவமைப்பது அவசியம். அறையின் ஒரு பக்கத்தில் மட்டும் இருப்பது நல்லது.
அதற்கும் மேற்பட்டு இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் ‘லாப்ட்’ அமைந்திருந்து, அவற்றில் பொருட்களை போட்டு வைக்கும் பட்சத்தில் படுக்கையறைக்கான சூழல் பாதிக்கப்படுவதுடன், அறையும் சிறியதாக தோற்றமளிக்கும். அதாவது, படுக்கையறையில் அதிகப்படியான பொருட்கள் இருக்கக்கூடாது.
குளிர்சாதன வசதி
படுக்கையறையில் ‘ஏர்–கண்டிஷன்’ வசதியை செய்து கொள்ள விரும்புவது வழக்கமான ஒன்றாகும். பொதுவாக, படுக்கையறைக்கு ‘ஸ்பிளிட் ஏசி’ வகை பொருத்தமாக இருக்கும் என்பது உள் அலங்கார நிபுணர்கள் கருத்தாகும். மேலும், ஏசி பொருத்தப்பட்ட சுவரில் மின்சார விளக்குகளை அமைப்பது கூடாது. அறையின் அளவுக்கேற்ப கொள்திறம் (Tonnege) கொண்ட ஏசி–யை பயன்படுத்துவதுடன், அது இயங்கும்போது அலமாரிகள் மூடப்பட்டிருப்பதை கவனித்துக்கொள்ள வேண்டும்.
மின்விசிறி அமைப்பு
படுக்கைக்கு நேர் மேலாக மின்விசிறி இருக்குமாறு பொருத்தப்படுவது அவசியம். அப்போதுதான் காற்று சரியாக கீழ் நோக்கி வரும். அதன் அடிப்படையில் மின் விசிறிக்கான பாயிண்டு உள்ளிட்ட இதர மின்சார அமைப்புகளுக்கான ‘ஸ்விட்ச்’ போன்றவற்றை கச்சிதமாக கணக்கிட்டு அமைத்துக்கொள்ள வேண்டும்.
‘லைட் செட்டிங்’
‘பெட்ரூம் சீலிங்’ உயரம் அதிகபட்சம் 11 அடி இருப்பது பல விதங்களில் வசதியாக இருக்கும். அந்த நிலையில் பகலில் வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைப்பதுடன், ‘பால்ஸ் சீலிங்’ அமைத்து அதற்குள் நவீன மின் விளக்குகளை பொருத்திக்கொள்ளலாம். படிப்பதற்கென ஒரு வகை ‘லைட்டிங்’, உறங்கும்போது ஒரு வகை ‘லைட்டிங்’ என்ற அமைப்பில் வெவ்வேறு வண்ண மின் விளக்குகளை ஒருவருக்கு ஏற்ற நிலையில் பயன்படுத்திக்கொள்ள இயலும்.
Related Tags :
Next Story