தெரிந்து கொள்வோம்.. -பளு தாங்கும் சுவர்
கட்டுமான அமைப்புகளில் பளு தாங்கும் சுவர் (Load Bearing Wall) என்பது நாகரிகம் வளரத் துவங்கிய கால கட்டத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஒரு கட்டிடத்தின் மொத்த எடையானது அஸ்திவாரம் மூலம் பூமிக்குள் நிலை நிறுத்தப்படுகிறது. அதற்கேற்ப அஸ்திவாரத்தின் ஆழம், அகலம் மற்றும் அமைப்பு ஆகியவை கச்சிதமாக கணக்கிடப்படுகின்றன.
அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்படும் சுவர்கள் மேற்கூரை அல்லது மேல்தளம் ஆகியவற்றின் எடையை தாங்குவதுடன், அதை அஸ்திவாரத்திற்கு கச்சிதமாக பகிர்ந்து அளிக்கின்றன. பொதுவாக, கட்டிடத்தின் வெளிப்புற சுவர்கள் ‘லோடு பேரிங் வால்’ அமைப்பாக இருக்கும். அவை, செங்கல், கான்கிரீட் கல் அல்லது கான்கிரீட் சுவர் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டப்படுகின்றன.
கட்டிடம் ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’-ஆக இருக்கும் பட்சத்தில், அதன் எடை தூண்கள் மூலம் அஸ்திவாரத்திற்கு சென்று, பூமிக்குள் கச்சிதமாக செலுத்தும்படி அமைக்கப்படும். இவ்வகை கட்டுமானங்களில் அஸ்திவாரமும் தூண்களின் தொகுப்பாக இருக்கும்.
ஒரு கட்டமைப்பின் பளு தாங்கும் சுவர்கள் வெப்பம், காற்று மற்றும் ஈரப்பதம் ஆகிய இயற்கை பாதிப்புகளிலிருந்து கட்டிடத்தை பாதுகாப்பதிலும் பங்கு வகிக்கின்றன. மேலும், மேற்கூரை அளவு மற்றும் அமைப்புக்கேற்ப அதன் அகலம் மற்றும் உயரம் ஆகியவை கணக்கிடப்படுகின்றன. அறைகளுக்கு இடையில் உள்ள சுவர்கள் பளு தாங்கக்கூடியதாக இல்லாததால் குறைவான அகலத்தில் அமைக்கப்படும்.
பொதுவாக, இரண்டு மாடிகள் வரை உள்ள கட்டிடங்கள் பளு தாங்கும் சுவர் கொண்டவையாக இருக்கும். அதற்கு மேற்பட்டவை ‘காலம்’ (Column) மற்றும் ‘பீம்’ (Beam) ஆகிய பகுதிகளை கொண்டிருப்பதோடு, சுவர்கள் பளு தாங்க வேண்டிய அவசியமில்லாமல் இடைவெளியை நிரப்புவதாக (Curtain Wall) கட்டமைக்கப்படும்.
Related Tags :
Next Story