உள் கட்டமைப்புக்கு ஏற்ற நவீன தொழில் நுட்பம்


உள் கட்டமைப்புக்கு ஏற்ற நவீன தொழில் நுட்பம்
x
தினத்தந்தி 13 Oct 2018 7:34 AM GMT (Updated: 13 Oct 2018 7:34 AM GMT)

கட்டுமான பொருள்களில் முக்கியமான இடம் பெற்ற இரும்பு கம்பிகள் போன்ற தன்மை கொண்ட நவீன கட்டுமான பொருள் ஜியோசிந்தெடிக்ஸ் (Geo Synthetics) ஆகும்.

 சிவில் என்ஜினியரிங் துறையின் உட்பிரிவுகளான ஹை-வேஸ், பேவ்மென்ட்ஸ், மண் சரிவை தாங்கும் கட்டுமானங்கள், கடற்கரை பாதுகாப்பு. நீர் பாசன புராஜெக்டு, சுற்றுச்சூழல் பொறியியல், மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல நிலைகளில் அது பயன்படுகிறது.

குடியிருப்பு கட்டுமானங்கள், பார்க்கிங் ஏரியாக்கள், கார்டனிங், நடைபாதை, பேவர் கற்கள் தரை பரப்பு போன்றவற்றிலும் ஜியோசிந்தெடிக்ஸ் பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்க தொழில் நுட்பமாக உள்ளது.

வெவ்வேறு பயன்பாடுகள்

இந்திய அளவில் கடந்த 12 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஜியோசிந்தடிக்ஸ் என்பது தட்டையான வடிவம் கொண்ட தொழிற்சாலை தயாரிப்பு பொருளாகவும், பல்வேறு கட்டுமான அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த பாகமாகவும் செயல்படுகிறது.

முக்கியமாக, மண் அடுக்குகளை பலப்படுத்தவும், பக்கவாட்டு மண்ணின் நெகிழ்வு தன்மையை நிலை நிறுத்தவும், அஸ்திவார உறுதி, நீர்க்கசிவு பிரச்சினைக்கான தீர்வு ஆகிய நிலைகளிலும் கட்டமைப்புகளின் உறுதிக்கு இந்த முறை பயன்படுகிறது.

ஜியோ டெக்ஸ்டைல்

மண்ணை பலப்படுத்த இவ்வகை துணி போன்ற அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. சாலைகள் அல்லது கடற்கரை பகுதிகளில் உள்ள மண்ணை சரிவு மற்றும் காற்றின் அரிப்பு ஆகியவற்றிலிருந்து தடுத்து பாதுகாக்கிறது. குறிப்பாக மண்ணின் அடுக்குகளை பாதுகாக்கவும், வடிந்து வரும் மழை நீரை நிலத்தடியில் செலுத்தவும் பயன்படுகின்றன.

ஜியோ கிரிட்ஸ்

கம்பி வலை போன்ற அமைப்பில் உள்ள இவை ஜல்லி கற்களை குறிப்பிட்ட வடிவத்தில் அமைப்பதற்கு பயன்படுகின்றன. மேலும், இளகிய தன்மை கொண்ட மண் அடுக்குகள் கொண்ட பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கான தற்காலிகமான அல்லது நிரந்தர சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அஸ்திவாரம் எடுக்கப்பட்ட பகுதிகளில் பக்கவாட்டு மண்சரிவு ஏற்படாமலும் இவை தடுப்பாக அமைக்கப்படுகின்றன.

ஜியோ நெட்ஸ்

ஜியோ ஸ்பேசர்ஸ் என்றும் குறிப்பிடப்படும் இவ்வகை வலை அமைப்பு கழிவு நீர் செல்லும் அமைப்புகளிலும், வாயுக்களை எடுத்துச் செல்லும் குழாய்களிலும் அவற்றின் அரிமானத்தை தடுக்கும் வகையில் பயன்படுகின்றன.

ஜியோ மெம்ப்ரேன்

ஜியோ சிந்தெடிக் வகைகளில் அதிகமான பயன்பாட்டில் இருக்கும் ‘பாலிமரிக் மெட்டீரியல் ஷீட்’ இதுவாகும். ரசாயன திரவங்கள், வாயுக்கள் ஆகியவற்றால் கட்டுமான அமைப்புகள் பாதிக்கப்படாமல் தடுப்பாகவும், நீச்சல் குள நீர்க்கசிவு தடுப்பாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஜியோசிந்தடிக் கிளே லைனர்ஸ், ஜியோபோம், ஜியோசெல்ஸ், ஜியோகம்போசைட்ஸ் போன்ற வெவ்வேறு நிலைகளிலும் இவற்றின் பயன்பாடு விரிவடைகிறது.

பாதைகள் கட்டமைப்பு

சதுப்பு நிலங்கள், விரிவடையும் மண் கொண்ட பகுதி ஆகியவற்றில் தற்காலிக மற்றும் நிரந்தரமான சாலை, நடப்பதற்கான தடம் ஆகியவற்றிலும், உத்தேச சாலை கட்டுமானத்தில் அடித்தள மண் உறுதி போதுமான தாங்கும் சக்தி இல்லாத பட்சத்தில் மண்ணை உறுதியாக்கவும் ஜியோ சிந்தடிக்ஸ் பயன்படுகிறது. கட்டுமான பணியிடங்களில் இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளே சென்று வர தேவையான தற்காலிக பாதையினை உருவாக்கவும் ஜியோசிந்தடிக்ஸ் உதவுகிறது.

ஸ்டீல் மற்றும் கான்கிரீட் ஆகிய பொருட்களை போன்ற முக்கியத்துவம் பெற்ற கட்டுமான பொருளாக உள்ள ஜியோசிந்தடிக்ஸ் இன்றைய சூழலில் பெரிய அளவில் உபயோகம் கொண்ட கட்டுமான தொழில்நுட்பமாக மாற வாய்ப்புகள் உள்ளன என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

Next Story