வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் கட்டுமான வல்லுனர்கள்
கட்டிட கலையில் இன்றைய நவீன உலகம் வியக்கும் ஆச்சரியப்படும் விதத்தில் தொழில்நுட்ப முறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.
மனைகளை அளவீடு செய்வதற்கான அவர்களது வழிமுறைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளின் வாழ்வியல் நெறிகளை சார்ந்து அமைந்திருந்தன. வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு அளவு முறைகள் பயன்படுத்தப்பட்டாலும் அவை அனைத்துமே மனையின் அளவுகளை குறிப்பிடுவதில் ஒருவித சீரான ஒருங்கிணைப்பை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வாஸ்து குறிப்பிடும் வல்லுனர்கள்
சீரற்ற பூமி அமைப்பை சீரான வீட்டு மனைகளாக மாற்றி அவற்றில் பலவகை கட்டுமான அமைப்புகளை வடிவமைப்பதற்கு நமது முன்னோர்கள் வாஸ்து சாஸ்திர ரீதியாக தக்க தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அவர்களை நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்து அதற்குள் தக்க உட்பிரிவுகளையும் அமைத்து பணிகளில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
நான்கு பிரிவுகள்
1) ஸ்தபதி
2) சூத்ரகிரஹி
3) தக்ஷகன்
4) வர்த்தகி
ஆகிய பிரிவுகளாக உள்ள பண்டைய கால கட்டுமான தொழில் நுட்ப வல்லுனர்கள் மேற்கொண்ட பணிகள் பற்றி இங்கே பார்ப்போம்.
ஸ்தபதி
அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பகுதியான ஸ்தாபத்ய வேதத்தை அறிந்தவர்கள் ஸ்தபதி என்று குறிப்பிடப்பட்டார்கள். இன்றைய கட்டுமான துறையில் ஆர்க்கிடெக்ட் மற்றும் சிவில் என்ஜினீயர் ஆகியோர்களை போன்ற கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றை பெற்று அவர்கள் செயல்பட்டு வந்ததாக சொல்லலாம்.
ஆன்மிக கட்டமைப்புகளான கோவில்கள், தனிப்பட்ட வீடுகள் மற்றும் அரசு கட்டமைப்புகளான அரண்மனை, மாளிகை போன்றவற்றோடு பொது கட்டமைப்புகளான பாலங்கள், சாலைகள், குளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளையும் வடிவாக்கம் செய்து, அவற்றின் கட்டுமான பணிகளையும் அவர்கள் மேற்பார்வை செய்து வந்தனர்.
சூரியனின் பாதை, பூமியின் சலனம் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்திற்கான திசை அமைப்புகள் ஆகியவற்றை கச்சிதமாக கண்டறிவதுடன், மனைகளில் சங்கு ஸ்தாபனம் உள்ளிட்ட அனைத்து விதமான சீராய்வு பணிகளை மேற்கொள்வதிலும் வல்லவராக இருந்தனர்.
சூத்ரகிரஹி
சூத்ரம் என்பது கயிறு (நூல்) என்று பொருள் தரும். அதாவது, மனைகள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகளை தக்க வடிவத்தில் அமைப்பது மற்றும் இதர கட்டுமான பணிகளில் அதற்கேற்ற கயிறு வகைகளை தக்க விதத்தில் பயன்படுத்தி (பட்டு, பருத்தி, தர்ப்பை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கயிறுகள் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளுக்கேற்ப பயன்படுத்தப்பட்டன) கட்டிடங்களின் அனைத்து பகுதிகளுக்கான அளவீடுகளும் சரியாக இருக்குமாறு கவனித்துக்கொள்வதுடன், ஸ்தபதிக்கு துணையாகவும் இவர் செயல்படுவார்.
மேலும், கட்டுமான பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான வேலைகளை பிரித்து அளிப்பது, அவர்களை கண்காணிப்பது ஆகிய பொறுப்புகள் இவரை சேர்ந்தது. வாஸ்து சாஸ்திரம் குறித்த சகல விதிகளையும் அறிந்தவராக இருப்பவரே இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்ற நிலையில் இன்றைய சைட்-என்ஜினியர் போன்ற அந்தஸ்தில் பணி புரிபவராக இவரை கருதலாம்.
தக்ஷகன்
கட்டிடங்களுக்கு தேவையான பர்னிச்சர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தக்க விதத்தில் தயார் செய்வதில் திறம் பெற்றவராகவும். அந்த பொருட்களை சம்பந்தப்பட்ட அறைகள் உள்ளிட்ட இதர பகுதிகளில் அமைப்பவரும் தக்ஷகன் ஆவார்.
இவர் சூத்ரதாரியின் கீழ் தனது பணிகளை வகுத்துக்கொண்டு தனது குழுவினர் மூலம் செயல்படும் நிலையில் இருப்பார். இன்றைய சூழலில் கார்பெண்டர் போன்று செயல்படுபவராக இவரை கணக்கில் கொள்ளலாம்.
வர்த்தகி
சுண்ணாம்பு, மண் மற்றும் மார்பிள், கிரானைட் போன்ற மூலப்பொருட்களை கட்டுமான பணிகளில் தக்க விதத்தில் பயன்படுத்தி அஸ்திவாரம், சுவர் மற்றும் கூரை ஆகியவற்றை கட்டமைப்பதில் தக்க அனுபவமும், பயிற்சியும் பெற்றவர்கள் வர்த்தகி என்று அழைக்கப்பட்டனர்.
தங்கள் குழுவுடன் சூத்ரகிரஹி அளிக்கும் கட்டளைகளை தக்க விதத்தில் செய்து முடிப்பது இவர்களது அன்றாட பணியாகும். இன்றைய காலகட்டத்தில் கட்டிட மேஸ்திரி என்ற கொத்தனார் என்பவர்களை போன்று செயல்பட்டவர்களாக இவர்களை குறிப்பிடலாம்.
Related Tags :
Next Story