சிறிய சமையலறையின் இட வசதிக்கான குறிப்புகள்


சிறிய சமையலறையின் இட வசதிக்கான குறிப்புகள்
x
தினத்தந்தி 20 Oct 2018 8:14 AM GMT (Updated: 20 Oct 2018 8:14 AM GMT)

சமையலறை என்பது இல்லத்தரசிகள் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடமாக உள்ளது.

இன்றைய அடுக்குமாடி நாகரிகத்தில் எல்லா இடங்களிலும் போதுமான இட வசதியுடன் கிச்சன் அமைந்திருப்பதில்லை. எளிய முறைகளில் சமையலறையின் உள் கட்டமைப்பை வசதியாக அமைத்துக்கொள்ள நிபுணர்கள் தரும் சில குறிப்புகளை பார்க்கலாம்.

* குடும்பத்தினர்களின் ஆரோக்கியத்தை சமையலறை பிரதிபலிக்கிறது என்ற அடிப்படையில் சிறிய அறையாக இருந்தாலும் சுத்தமாக பராமரிப்பது அவசியம்.

* பொதுவாக, சமையலறையின் ‘சிங்க்‘ அமைப்பை அறையின் ஒரு ‘கார்னர்’ பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். குளிர் சாதனப்பெட்டி திறந்து மூடுவதற்கு வசதியாக இடையூறு இல்லாதபடி அடுப்புக்கு எதிர்ப்புற சுவரை ஒட்டியவாறு வைக்கலாம்.

* சமையல் மேடையான ‘பிளாட்பார்ம்’ மீது பல்வேறு பொருட்களையும் போட்டு வைத்திருக்காமல் தேவையான பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், சமையலறை சுவர்களை வெவ்வேறு விதங்களில் உபயோகிக்கும் முறையை அறிந்து செயல்பட்டால் இடவசதி கூடுதலாகும்.

* சமையல் பணிகளில் பயன்படுத்தப்படும் துணிகள், ஸ்பூன்கள், காய்கறி நறுக்கும் பலகை, ‘பான்’, கத்திகள் மற்றும் லைட்டர் ஆகியவற்றை சுவரில் மாட்டி வைக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.

* எல்லா பொருட்களும் கச்சிதமாக இருப்பதை அவ்வப்போது கவனித்துக்கொள்வதுடன், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அதற்குரிய இடங்களில் வைத்திருக்க வேண்டும்.

* கழுவும் அமைப்பான சிங்-கிற்கு கீழே உள்ள இடத்தில் சிறிய அளவில் ஒரு ‘கேபினட்’ அமைப்பை பொருத்தி அதில் சுத்தம் செய்ய உதவும் ‘பிரஷ்’ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைக்கலாம்.

* சிறிய சமையலறையில் அனைத்து பொருட்களையும் கீழ்ப்பகுதிகளில் வைக்க இயலாத நிலையில், சுவரின் மேற்புறத்தில் ‘கேபினட்’ அமைப்புகளை பொருத்தி, பொருட்களை சவுகரியமாக வைத்துக் கொள்ளலாம்.

* அலமாரி அல்லது கேபினட்களில் கொக்கிகள் பொருத்தி சிறிய அளவிலான ஸ்டீல் கூடைகளை மாட்டி, சிறிய பொருட்களை அதில் வைத்துக்கொள்ளலாம். அலமாரியின் இருபக்க கதவுகளிலும் இவற்றை பொருத்தி இடத்திற்கேற்ற வகையில் பொருட்களை வைக்கலாம்.

* சிறிய சமையலறைகளில் ‘டைனிங்’ அல்லது சிற்றுண்டி மேஜை வைக்க வேண்டிய நிலையில், மடித்து வைத்து கொள்ளக்கூடிய மேஜை மற்றும் நாற்காலிகளை பயன்படுத்தும் பட்சத்தில், உபயோகப்படுத்தி விட்டு மற்ற சமயங்களில் மடித்து வைத்துக்கொள்ள இயலும்.

Next Story