இணையதளம் மூலம் அடுக்குமாடி நிர்வாக பணிகள்


இணையதளம் மூலம் அடுக்குமாடி நிர்வாக பணிகள்
x
தினத்தந்தி 20 Oct 2018 8:16 AM GMT (Updated: 20 Oct 2018 8:16 AM GMT)

இன்றைய காலகட்ட நகர்ப்புற வீடு என்பது அடுக்குமாடி குடியிருப்பாகத்தான் கவனிக்கப்படுகிறது.

பெருநகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் கனவு இல்லத்தை கட்டுவது என்பதை விடவும், சமூக கட்டமைப்புகள் ஒருங்கிணைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க பலரும் விரும்புவதாக அறியப்பட்டுள்ளது.

குடியிருப்போர் சங்கம்

பெருநகர அபார்ட்மெண்டு வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில், வீடுகளில் செய்யப்படும் சிறிய அளவிலான ‘ரிப்பேர்’ வேலைகள் உள்ளிட்ட வெவ்வேறு பராமரிப்பு பணிகளை அடுக்குமாடி குடியிருப்பு சங்க பணியாளர்கள் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம் என்பதையும் பலரும் கவனத்தில் கொள்கிறார்கள்.

நிர்வாக மேலாண்மை

திட க்கழிவு மேலாண்மை, கழிவு நீர் அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவானதாக கிடைப்பதுடன், மின்சார தடை ஏற்படும் நேரங்களில் ஜெனரேட்டர் வசதி, குழந்தைகள் விளையாடும் பூங்கா, வயதானவர்களுக்கான நடைமேடை, உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற பல்வேறு வசதிகளும் அபார்ட்மெண்டுகளில் இருப்பதும் பெரும்பாலானோரை கவர்ந்திருக்கின்றன.

இணைய தளம்

மேற்கண்ட வசதிகளை சரியாக பராமரிக்க ‘அபார்ட்மெண்டு அசோசியேஷன்’ அமைத்து கவனித்துக்கொள்வது பொதுவான விஷயம். அதன் அன்றாட நடைமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதை பலரும் அனுபவத்தில் கண்டுள்ளனர்.

இந்த நிலையில் அடுக்குமாடி நிர்வாக நடைமுறை மற்றும் குடியிருப்போர் நலன் ஆகிய விஷயங்களை ஒன்றிணைத்து அதனை எளிதாக ஆன்லைனில் செய்து முடிக்கவும் சில இணைய தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் apartmentadda.com என்ற இணையதளம் பல்வேறு வகைகளில் உதவுவதாக பலரும் குறிப் பிட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் குடியிருப்பு சங்கம் ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் அந்த தளமானது அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினருடன் தொடர்பு, நிர்வாக பணிகள், பராமரிப்புகள், பில்லிங், கணக்கு வழக்குகள், பணம் செலுத்தும் வசதி என பல்வேறு வசதிகளை அந்த இணையதளம் அளிக்கிறது.

தகவல் பலகை

குறிப்பாக, அடுக்குமாடியில் குடியிருப்பவர்களது ஆலோசனை மற்றும் புகார்களை தெரிவித்து, விவாதிப்பதற்கும், கருத்துகளை தெரிவிப்பதற்கும் வசதிகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனிப்பட்ட ஆன்லைன் தகவல் பலகை இருப்பதால், சம்பந்தப்பட்ட பகுதியில் நடக்கும் கொண்டாட்டங்கள், சந்திப்புகள், காலியாக உள்ள பிளாட், பார்க்கிங் இடங்கள், குடியிருப்புகளில் நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் என பல்வேறு தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் வசதி

அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர்களுக்கு உதவும் வகையில் ‘கேட்கீப்பர் ஆப்ஸ்‘ வசதி, பார்வையாளர்கள் வருகை பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் தகவல், கேட்-கீப்பர் ஆப்ஸ் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் இயங்கும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை என்ற நிலையில் அது பற்றி மற்றவர்களது கருத்து என்ன என்பது பற்றி வாக்கெடுப்பை ஆன்லைனில் நடத்தி பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும்.

ஆலோசனைகள்

மேலும், நீச்சல் குளங்கள் பராமரிப்பு, மாடித்தோட்டம் அமைப்பு போன்ற பல்வேறு ஆலோசனைகளை அளிக்கும் பயிற்சி வகுப்புகளையும் இந்த தளத்தின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள இயலும். சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான நிர்வாக நடைமுறைகள் மேற்கண்ட இணைய தளம் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

Next Story