தேசிய கட்டிட விதிகளில் இடம் பெற்ற எளிய கட்டுமான முறைகள்


தேசிய கட்டிட விதிகளில் இடம் பெற்ற எளிய கட்டுமான முறைகள்
x
தினத்தந்தி 27 Oct 2018 12:30 AM GMT (Updated: 26 Oct 2018 12:19 PM GMT)

கட்டிடக்கலை தொழில் நுட்பங்களில் உள்ள பல்வேறு முறைகளில் ‘ரேட் டிராப் பாண்ட்’ (Rat Trap Bond) மற்றும் ‘பில்லர் ஸ்லாப்’ (Filler Slab) ஆகிய இரண்டு வகைகள் குறிப்பிடத்தக்கவை.

அந்த இரண்டு கட்டுமான முறைகளையும் கண்டறிந்து வடிவமைத்த லாரி பேக்கர் (மார்ச்–02, 1917 – ஏப்ரல்–01, 2007) என்ற இந்தியாவில் குடியேறிய இங்கிலாந்து கட்டிட கலைஞர் அவற்றை பயன்படுத்தி நமது நாட்டில் பல கட்டுமானங்களை உருவாக்கி இருக்கிறார். 

போக்குவரத்து செலவு

கட்டுமான பொருள்களுக்கான மொத்த பட்ஜெட்டில் அவற்றிற்கான போக்குவரத்து செலவு குறிப்பிட்ட அளவாக இருக்கும் நிலையில் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் கட்டுமான பொருள்கள் மற்றும் கட்டுமான யுக்திகள் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைப்பது அவரது பிரதான வழிமுறையாக இருந்தது. 

அதன் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சம்பந்தப்பட்ட இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகள் உள்ளிட்ட இதர கட்டுமானங்களை அமைத்ததுடன், அவற்றின் உள் அறைகளை எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் உருவாக்கினார்.

சுவர் கட்டமைப்பு

இன்றைய சூழலில் கட்டுமான பணிகளில் பொதுவாக ‘இங்கிலீஷ் பாண்டு’ அல்லது ‘பிளெமிஷ் பாண்டு’ என்ற தொழில் நுட்ப முறையில் அமைக்கப்படும் சுவர்களில் செங்கல் கிடைமட்டமாக இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்டு சுவர் அமைக்கப்படுகிறது. 

ஆனால், மேற்கண்ட ‘ரேட் டிராப்’ முறையில் செங்கல் செங்குத்தாக நிற்க வைத்து, வெற்றிடங்கள் கொண்ட சுவர்கள் கட்டப்படுவதால் செங்கல் எண்ணிக்கை மற்றும் வேலை நேரம் ஆகியவை மிச்சம் ஆகிறது. அதாவது, பழைய முறைப்படி ஒரு சுவர் கட்ட ஆகும் நேரத்தில், இந்த முறைப்படி இரண்டு சுவர்கள் அமைக்கப்படுவதுடன் செலவிலும் சிக்கனம் ஏற்படுவது அறியப்பட்டது. 

மேற்கூரை அமைப்பு

‘பில்லர் ஸ்லாப்’ என்ற மேற்கூரை அமைப்பு முறையில் கூரைகளின் அழுத்தம் தாங்கும் தன்மைக்கான ‘பினிட் எலிமென்ட் அனாலிசிஸ்’ (Finite Element Analysis) பரிசோதனை மூலம் வழக்கமான கூரை அமைப்பை விடவும் வலிமையாக இருப்பது அறியப்பட்டது. 

இந்த முறையில் கான்கிரீட்டுக்கு பதிலாக மங்களூர் ஓடுகள் வைக்கப்பட்டு அதன் மேல் மேற்கூரைக்கான கான்கிரீட் அமைக்கப்படுகிறது. 

மேற்கண்ட இரு யுக்திகளை பயன்படுத்தி 2004–ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட நமது பகுதிகளில் உள்ள வீடுகளை கட்டுமான நிபுணர் குழு மறுகட்டமைப்பு செய்தது. 

தேசிய கட்டிட விதிகள்

மேற்கண்ட இரண்டு யுக்திகளும், இந்திய தரச் சான்றிதழ் அமைப்பு வெளியிட்டுள்ள ‘நே‌ஷனல் பில்டிங் கோட்–2016’ எனும் தேசிய கட்டிட விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்றதாக உள்ள அந்த முறைகள் தற்போது சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story