வீட்டுமனை பட்டாவில் கவனிக்க வேண்டிய விவரங்கள்


வீட்டுமனை பட்டாவில் கவனிக்க வேண்டிய  விவரங்கள்
x
தினத்தந்தி 27 Oct 2018 6:15 AM IST (Updated: 26 Oct 2018 5:53 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில் வீட்டுமனை அல்லது நிலங்கள் வாங்கும்போது அவற்றின் பத்திரங்களை மட்டும் வைத்து சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமை விற்பவருக்கு முழுமையாக உள்ளது என்ற முடிவுக்கு வருவது பல சிக்கல்களுக்கு வழிவகுத்து விடலாம் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பட்டா விவரங்கள்

வாங்க விரும்பும் நிலம் அல்லது மனையின் பட்டாவானது யு.டி.ஆர் பட்டா, நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா, ஏ.டி கண்டிசன் பட்டா, தனி பட்டா, டி.எஸ்.எல்.ஆர் பட்டா, கூட்டு பட்டா, நில ஒப்படை பட்டா ஆகியவற்றில் எந்த வகையை சார்ந்தது என்று கவனிக்க வேண்டும்.

அவ்வாறு பட்டாவின் நிலை பற்றி கவனமாக பரிசீலித்த பின்னர் மற்ற ஆவணங்களின் நம்பக தன்மையின் அடிப்படையில் அந்த இடம் அல்லது மனையை வாங்க வேண்டும் என்றும் சட்ட ஆலோசகர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இதுபற்றி மேலும் அவர்கள் அளித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

 கிராம பகுதிகள் அல்லது நகர்ப்புறங்கள் ஆகிய பகுதிகளுக்கான பிரதான சாலைகள் மற்றும் உள்புறமாக உள்ள சாலைகள் அமைந்துள்ள பகுதிக்கு இரண்டு பக்கமும் அரசுக்குக்கு சொந்தமாக உள்ள குறிப்பிட்ட அளவு நிலப்பகுதிகள் புறம்போக்கு நிலம் என்று சொல்லப்படும். 

புல எண்கள்

மேற்கண்ட அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் ஆறு, ஏரி, கால்வாய், அணை, மலை, குன்று ஆகியவற்றுக்கு பக்கத்திலும் அத்தகைய நிலப்பகுதிகள் அமைந்திருக்கும். அவை தக்க முறையில் அளவீடு செய்யப்பட்டு அவற்றிற்குரிய புல எண்களும் அளிக்கப்பட்டு அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய பதிவுகளாக பராமரிக்கப்படுகின்றன. 

அரசு துறைகள்

அத்தகைய நிலங்களில் ஆறு, ஏரி, கால்வாய், அணைகள் ஆகியவற்றின் அருகே உள்ள புறம்போக்கு நிலங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. மலைகள், குன்றுகள் ஆகியவற்றின் அருகேயுள்ள புறம்போக்கு நிலங்கள் வருவாய் துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. 

இரண்டு வகைகள்

அரசு புறம்போக்கு நிலத்திற்கு பெறப்படும் தற்காலிக பட்டாவான 2–சி பட்டா (கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணமான கிராம கணக்கு எண்–2 சி–யில் பதியப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் தூசி பட்டா, மரப்பட்டா, மரவரி என்றும் நடைமுறையில் சொல்லப்படுகிறது) மற்றும் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அரசின் பொறுப்பிலுள்ள நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து அபராதமாக தண்டத் தீர்வை வசூலிக்கும் அறிவிப்பான பி–மெமோ (B-Memo) (பீமா பட்டா என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது) ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நிலத்துக்கு வரி செலுத்தியதுபோல, தற்காலிக பட்டா மற்றும் தண்ட தீர்வை செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை அனுபவ சான்றாக கொண்டு நிலங்களை விற்க முயற்சி செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. 

 அரசின் நடவடிக்கைகள்

மேற்கண்ட நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்ற அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களுக்கு அந்த நிலங்கள் தேவை என்ற நிலை ஏற்படும்போது அவை கையகப்படுத்தப்படும். அவர்களை அகற்ற அரசு விரும்பினால் உரிய அறிவிப்பு கொடுத்து சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து வெளியேற்றப்படலாம்.

வீட்டு மனைகள் அல்லது நிலங்களை வாங்குபவர்கள் மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலப்பகுதிக்கான பட்டாவின் அடிப்படைகளை அறிந்து கொண்டு அவற்றை வாங்குவதுதான் பாதுகாப்பானது என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1 More update

Next Story