வாஸ்து சாஸ்திரம் கூறும் மனை சீரமைப்பு முறைகள்
வீடுகள் அல்லது அடுக்குமாடிகள் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அல்லது மனைகளை அவை இருக்கும் நிலையிலேயே பயன்படுத்துவது பல இடங்களில் சாத்தியமானதாக இருப்பதில்லை.
வீடுகள் அல்லது அடுக்குமாடிகள் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அல்லது மனைகளை அவை இருக்கும் நிலையிலேயே பயன்படுத்துவது பல இடங்களில் சாத்தியமானதாக இருப்பதில்லை. இன்றைய நகர்ப்புற வாழ்வின் தேவைகளுக்கேற்ப வீட்டுமனை வாங்குபவர்கள் கட்டுமான பொறியாளர்களின் உதவியுடன் தகுந்த சீரமைப்பு பணிகளை செய்த பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள இயலும்.
மனையின் சீரமைப்பு
வீட்டு மனையின் சீரமைப்பு பற்றி வாஸ்து சாஸ்திரம் ‘பூமி தோஷ நிவாரணம்’ என்ற தலைப்பில் பல்வேறு விதிகளை குறிப்பிட்டிருக்கிறது. அவற்றை பயன்படுத்தி நமது முன்னோர்கள் வீட்டு மனைகளை சீரமைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டார்கள் என்று அறியப்பட்டுள்ளது.
அதாவது, கணனம், ஹரணம், தாஹம், பூரணம், கோநிவாஸம், விப்ரோஸிஷ்டம் மற்றும் கவ்யம் ஆகிய ஏழு விதமான விதிகளை கடைபிடித்து மனையை சீர்படுத்தினார்கள். அவை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
கணனம்
மொத்த மனை அமைப்பில் உள்ள மண்ணை குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு தோண்டி எடுத்து விட்டு, சுத்தமான புதிய மண்ணை நிரப்புவதன் மூலம் ‘சல்லிய தோஷம்’ போன்ற நிலத்தடியில் உள்ள வாஸ்து பாதிப்புகள் அகற்றப்படுகின்றன.
குறிப்பாக, மயானம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் அமைப்பதை வாஸ்து ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அந்த மண்ணில் கலந்துள்ள மனித எலும்புகளின் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களால் மன உணர்வுகள் பாதிக்கப்படுவதை முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.
வேறு வழியில்லை என்ற நிலையில் ‘கணனம்’ முறையை அனுசரித்து அந்த இடத்தில் உள்ள மண் முற்றிலும் அகற்றப்பட்டு, சுத்தமான புது மண்ணை நிரப்பி வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
ஹரணம்
மனையின் எல்லைகளை சரியாக கண்டறிந்து தக்க அடையாளங்களை நட்டு, அதற்கேற்ப தக்க விதத்தில் மேடு பள்ளங்கள் இல்லாமல் மனையை சமம் செய்வது ‘ஹரணம்’ என்று குறிப்பிடப்பட்டது.
தாஹம்
வாஸ்து சாஸ்திரம் மனைப்பகுதிகளில் குறிப்பிட்ட மரங்கள் மற்றும் குறுவகை செடி, கொடிகள் ஆகியவை வளர்ந்திருப்பதை ஏற்பதில்லை. அந்த நிலையில் அவற்றை வேருடன் அகற்றி, நெருப்பை இட்டு சாம்பலாக மாற்றி அகற்றிவிட்டு மனை சீரமைப்பு பணிகள் செய்யப்படும்.
பூரணம்
கட்டுமான பணியிடத்தில் தோண்டப்பட்ட அஸ்திவாரம் உள்ளிட்ட இதர குழிகளை சுத்தமான மண் கொண்டு நிரப்பப்படுவது ‘பூரணம்’ என்று குறிப்பிடப்பட்டது.
கோநிவாஸம்
பழைய காலங்களில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள நேர்மறை சக்திகளை கண்டறிய ‘கோநிவாஸம்’ என்ற முறையில் பசு மாடுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அதாவது, பசுமாடுகளின் நுண்ணுணர்வு காரணமாக எல்லா இடங்களிலும் அவை படுப்பதோ அல்லது நிற்பதோ இல்லை. அவை அமைதி குறைவாக நிற்கும் இடங்களில் நேர்மறை சக்திகள் போதிய அளவில் இல்லை என்ற அடிப்படையில், பசுமாடுகள் 21 நாட்கள் அமைதியாக தங்கிய இடங்கள் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை அமைக்க தேர்வு செய்யப்பட்டன.
சாதாரண புல், பூண்டுகள் கூட வளர்ந்திராத மனைகளில் சில வகை விதைகள் தூவப்படும். அங்கு பசுக்களை கட்டி வைத்து, மாட்டின் சாணம் காரணமாக விதைகள் வளர்வதை கவனித்தும் மனைக்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
விப்ரோஸிஷ்டம்
கட்டுமான பணி நடைபெறும் மனை அமைந்துள்ள இடத்தில் ஆன்மிக குரு, சுமங்கலிகள் உள்ளிட்ட மனை உரிமையாளரது நலனை விரும்பும் உறவினர்கள் மூலம் பூஜைகள் செய்து, நவ தானியங்கள் பரவலாக விதைக்கப்பட்டு, பசுவின் சாணம் மற்றும் கோமிய நீர் தெளிக்கப்படும். 3 வாரங்களுக்கு பிறகு அந்த விதைகள் வளர்ந்துள்ளதன் அடிப்படையில் உயிரோட்டம் உள்ள மனையா..? என்று முடிவு செய்யப்படுவது ‘விப்ரோஸிஷ்டம்’ ஆகும்.
கவ்யம்
பசுவின் பால், நெய், தயிர், சாணம் மற்றும் கோமியம் ஆகிய ஐந்தும் கலக்கப்பட்ட பஞ்சகவ்ய கலவையை மனையின் எட்டு திக்குகள் மற்றும் பிரம்மஸ்தானத்திலும் தெளித்து, குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் முறை ‘கவ்யம்’ என்று சொல்லப்பட்டது.
Related Tags :
Next Story