‘பட்டா’ பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகள்


‘பட்டா’ பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகள்
x
தினத்தந்தி 10 Nov 2018 12:52 PM IST (Updated: 10 Nov 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

ஒருவருக்கு சொந்தமான நிலம் அல்லது வீட்டு மனையின் மீது அவருக்கு உள்ள உரிமையை குறிப்பிடும் அரசின் பதிவேடாக உள்ள பட்டா கீழ்க்கண்ட நிலைகளில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

1) உரிமையாளர்கள் தாங்களாகவே உரிமையை இன்னொருவருக்கு மாற்றுதல்

2) நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் வருவாய் துறையினர் மேற்கொள்ளும் மாறுதல்

3) வாரிசுதாரருக்கு சட்டப்படி மாற்றம் செய்யப் படுதல்

என மூன்று வகைகளில் உள்ளன.

கீழ்கண்ட நிலைகளில் உரிமையாளரால் பட்டா மாற்றம் செய்யப்படுகிறது

* குறிப்பிட்ட இடத்தின் பட்டாதாரர் அந்த இடத்தை மற்றொருவருக்கு விற்பனை அல்லது தானம் செய்வது

* மற்றொருவர் நிலத்துடன் தனது நிலத்தை பரிவர்த்தனை செய்தல்

* தனிநபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு அளிப்பது

* நிலங்களை பாக பிரிவினை செய்வது

* குடும்ப அங்கத்தினர்களின் பங்கிற்கு ஏற்ப நிலங்களை உட்பிரிவு செய்தல்

* தனியாருக்கு உரிய நிலங்களின் நன்செய் மற்றும் புன்செய் வகைகளை மாற்றுதல்

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் வருவாய் துறையால் செய்யப்படும் மாற்றங்கள்

* நில உரிமை நீதி மன்ற தீர்ப்பால் மாறுவது

* நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுவது

* வரி பாக்கிக்காக தனியார் நிலங்களை அரசு ஏலம் விட்டு வாங்குவது அல்லது அதனை தனி நபருக்கு ஏலம் விடுவது

* நிலமெடுப்பு மூலமாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படுதல்

* வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்ற சொத்துகள்

கீழ்கண்ட நிலைகளில் பட்டா சட்டப்படி வாரிசுதாரருக்கு மாற்றம் அடைகிறது

* வாரிசுதாரர்களுக்கு பதிவு மாற்றம் செய்தல்

* பட்டாதாரர் காணாமல் போகும் நிலையில் வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றம் செய்தல்

* கைப்பற்று நிலம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு நபர்களின் அனுபோகத்தில் இருந்து பட்டா மாறுதல் செய்தல்

கிராம கணக்குகளில் தகவல் பதிவு


* நிலத்தின் பட்டாதாரர் தனது நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தல், தானம் செய்தல், மற்றொருவர் நிலத்தினை தன் நிலத்திற்கு பதிலாக மாற்றி கொள்ளுதல் போன்ற நிலைகளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு பெற்று படிவம்-13 வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

* படிவம்-13 வரப் பெற்றவுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கு எண் 61-ல் பதியப்பட்டு கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கைக்காக அனுப்பப்படும்.

* அவரது அறிக்கையை பெற்று மண்டல துணை வட்டாட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த விவரங்கள் கிராம கணக்கு எண் 3, பிரிவு 3-ன் கலம் 8, 9, 10-ல் பதிவு செய்யப்படுவதோடு, கிராம கணக்கு எண்-2, (101) சிட்டா ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்படும். 

Next Story