உலக நாடுகளில் பரவி வரும் மர கட்டுமானங்கள்


உலக நாடுகளில் பரவி வரும் மர கட்டுமானங்கள்
x
தினத்தந்தி 10 Nov 2018 7:40 AM GMT (Updated: 10 Nov 2018 7:40 AM GMT)

கட்டுமான பொருட்களில் பயன்படும் சிமெண்டு மற்றும் இரும்பு ஆகியவற்றால் உலக அளவில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் அளவுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சூழலியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு மாற்றாக மரத்தை மூலப்பொருளாக கொண்டு அமைக்கப்படும் கட்டிடங்களால் ‘கார்பன்’ போன்ற வாயுக்களை வெளியேறுவதில்லை. மேலும், இன்றைய நிலையில் மர கட்டமைப்பில் உள்ள நவீன தொழில்நுட்பமான ‘கிராஸ் லேமினேட்டடு டிம்பர்’ (CLT) என்ற தொழில்நுட்ப முறையில், மர கட்டமைப்புகள் தீ பற்றாமல் பாதுகாப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

ஜப்பானிய மர கட்டமைப்பு

சுமிட்டோமோ என்ற ஜப்பானிய நிறுவனம் தனது 350-வது ஆண்டு தினத்தை கொண்டாடும் விதத்தில் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய மர கட்டிடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அந்த மர கட்டமைப்பானது 70 மாடிகள், 10 சதவிகிதம் இரும்பு மற்றும் 1,80,000 கன மீட்டர் மரங்கள் கொண்டதாக அமைய உள்ளது. அதன் அனைத்து தளங்களிலும் பசுமையான செடிகள் கொண்ட பால்கனியுடன் 8 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு மதிப்பீடு

70 மாடிகள் கொண்ட அந்த மரக்கட்டிடத்தை கட்டி முடிக்க கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 37 ஆயிரம் கோடி செலவு பிடிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, இதே அளவில் வழக்கமான முறையில் இரண்டு உயரமான கட்டிடங்களை அமைப்பதற்கான மொத்த செலவு என்ற நிலையில் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிகள் காரணமாக இந்த கட்டிடத்தை அமைக்கும் செலவுகள் பெருமளவுக்கு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜப்பானின் மொத்த நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு காடுகள் இருப்பதால், மூன்று தளங்களுக்கு குறைவாக அமைக்கப்படும் பொது கட்டிடங்களில் மரத்தை பிரதான மூலப்பொருளாக பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய மர கட்டமைப்புகள்

மர கட்டமைப்புகள் உலகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள நிலையில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள 18 மாடி மர அலுவலக கட்டிடம் மற்றும் கனடா நாட்டின் பெரிய நகரமான வான்கூவரில் அமைக்கப்பட்டுள்ள 53 மீட்டர் உயரமுடைய அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேலும், நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரத்துக்கு வடக்கில் கிட்டத்தட்ட 280 அடி உயரத்தில் 18 அடுக்குகள் கொண்ட ‘எம்ஜோஸ்’ டவர் (The Mjos Tower) என்று பெயர் கொண்ட மரக் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

அபார்ட்மெண்டுகள், நீச்சல் குளம் மற்றும் உணவகங்கள் ஆகிய வசதிகள் கொண்ட அந்த மர கட்டமைப்பு அடுத்த வருடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story
  • chat