கட்டுமான தொழிலாளருக்கு அரசு அளிக்கும் உதவிகள்


கட்டுமான தொழிலாளருக்கு அரசு அளிக்கும் உதவிகள்
x
தினத்தந்தி 10 Nov 2018 8:28 AM GMT (Updated: 10 Nov 2018 8:28 AM GMT)

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 24 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் நலத்திட்டங்கள் அட்டவணையின்படி கிட்டத்தட்ட 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கல் உடைப்பவர், கொத்தனார், தச்சர், பெயிண்டர், கம்பி வளைப்பவர், எலக்ட்ரிஷியன், கூலியாள், மொசைக் பாலீஸ் செய்பவர், சாலை பணியாளர், கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர், பொது பூங்கா நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைக்காட்சி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டுமான துறை சம்பந்தமான தொழில்களை மேற்கொள்ளும் வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன.

கட்டுமான பணியை மேற்கொள்ளும் சமயத்தில் அதில் ஈடுபடும் தொழிலாளர் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணமாக இறந்துவிடும் சூழலில் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், தொழிலாளர் நல நிதி செலுத்தி வரும் நிலையில் அவர் பணிக் காலத்தில் இறக்க நேர்ந்தால் அளிக்கப்படும் ஈமச்சடங்கு உதவி தொகை ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் 60 வயதை கடந்த நிலையில் ஓய்வூதியம் பெற இயலும். மேலும், வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் பணி புரிவதற்கேற்ற உடல் தகுதியை நோய் உள்ளிட்ட இதர காரணங்களால் இழக்கும்போது அவர்களுக்கு மாதாந்திர பென்ஷன் தொகையாக ரூ.1000 அளிக்கப்படுகிறது.

கட்டுமான தொழிலாளர் 60 வயது நிறைவடைந்து ஓய்வூதியம் பெற்றுவரும் நிலையில் இறந்து விடும் பட்சத்தில் அவரது கணவர் அல்லது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.500 அளிக்கப்படும் என்று கட்டுமான தொழிலாளர் நல வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Next Story