கச்சிதமான சுவர் அமைப்புக்கு ஏற்ற எளிய உபகரணம்


கச்சிதமான சுவர் அமைப்புக்கு ஏற்ற எளிய உபகரணம்
x
தினத்தந்தி 17 Nov 2018 9:51 AM GMT (Updated: 17 Nov 2018 9:51 AM GMT)

கச்சிதமான சுவர் அமைப்புக்கு ஏற்ற எளிமையான ஒரு உபகரணம் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளில் செங்கல் சுவர் அமைக்கும்போது வரிசையாக அடுக்கப்படும் ஒவ்வொரு செங்கலுக்கும் இடையில் சிமெண்டு கலவை பயன்படுத்தப்படும். அவ்வாறு கற்களுக்கு மேலாகவும், அவற்றின் இடைவெளியிலும் கலவை பயன்படுத்தப்படும்போது சுமாராக 30 சதவிகித அளவு சிமெண்டு கலவை விரயம் ஆவதாக அறியப்பட்டுள்ளது.

மேல்நாட்டு கண்டுபிடிப்பு

அவ்வாறு சிமெண்டு கலவை விரயம் ஆவதை தவிர்ப்பதற்காகவும், கச்சிதமான தோற்றத்தை தரும் வகையிலும் எளிமையான ஒரு உபகரணம் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலேயே பரவலான பயன்பாட்டில் இருந்து வந்த அந்த உபகரணம் இப்போது இந்தியாவிலும் கிடைப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேல்பூச்சு அவசியமில்லை

‘பிரிக்கி டூல்’ (Bricky Tool) என்ற பெயர் கொண்ட அந்த உபகரணத்தின் மூலம், ‘வால் பிளாஸ்டரிங்’ என்ற சுவருக்கான மேல் பூச்சு இல்லாமல் அமைக்கப்படும் வீட்டு சுவர்கள் உள்ளிட்ட குடியிருப்புகளின் சுவர்களை எளிதாக அமைக்க இயலும். (சுவருக்கான மேற்பூச்சு தேவை என்றாலும் செய்து கொள்ளலாம்) அதனால் சுவர்கள் கச்சிதமான வடிவமைப்பை பெறுவதாகவும் அறியப்பட்டுள்ளது.

மூன்று அளவுகள்

நீள் வட்ட வடிவத்தில் உள்ள அந்த உபகரணம் 4, 6 மற்றும் 9 அங்குலம் ஆகிய மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. எளிதான பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் ‘பிளாஸ்டிக் பிரேம்’ அமைப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுவர் கட்டுமானத்துக்கு ஏற்ற வகையில் செங்கலை அடுக்கி வைத்து, அதன் மீது உபகரணத்தை வைத்து சிமெண்டு கலவையை விரயம் ஆகாமல் பூச இயலும்.

சிமெண்டு கலவை சிக்கனம்

அதன் வடிவமைப்பு மற்றும் சுவரின் அளவுக்கேற்ப மாற்றி அமைக்கப்படத்தக்க அளவு ஆகியவற்றின் உதவியால் சிமெண்டு கலவை கச்சிதமான அளவில் செங்கல் மீது படியும். மாறாக வழக்கமான முறையை பயன்படுத்தும்போது கலவை கீழே சிதறுவது போன்ற சிக்கல்கள் இல்லை.

ஒற்றை மற்றும் இரட்டை சுவர்

இந்த உபகரணத்தை கொண்டு ஒற்றை செங்கல் சுவர், இரட்டை செங்கல் சுவர் ஆகியவற்றை அமைக்கலாம். அதற்கேற்ப மாற்றம் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அழகிய முறையில் ‘கான்கிரீட் பிளாக்’ மூலம் அமைக்கப்படும் சுவர் பணிகளையும் நேர்த்தியாக செய்ய இயலும்.

Next Story