வலிமையான கான்கிரீட் கட்டமைப்புகளுக்கான தொழில்நுட்பம்


வலிமையான கான்கிரீட் கட்டமைப்புகளுக்கான தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 AM GMT (Updated: 17 Nov 2018 10:30 AM GMT)

சிமெண்டு, மணல், ஜல்லி மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பது பொதுவான வரையறையாகும்.

நகர்ப்புற வளர்ச்சிகளுக்கேற்ப அவ்வப்போது ‘ஹோம் ரினோவேஷன்’ மற்றும் ‘எக்ஸ்டென்ஷன்’ ஆகியவற்றின் அடிப்படையில் குடியிருப்புகளில் அவ்வப்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கட்டமைப்புகளின் நீடித்து உழைக்கும் திறன் கூடுதலாக மாறுகிறது.

கட்டுமானத்துறை வளர்ச்சி

1980-களின் பிற்பகுதியில் தமிழக கட்டுமானத்துறை அடைந்த வளர்ச்சி இன்றுவரை பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கொண்டுள்ளது. அன்று முதல் இன்று வரை ஏராளமான கான்கிரீட் கட்டமைப்புகள் நகர்ப்புறங்கள் மற்றும் அவற்றின் புறநகர் பகுதி ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வழிகாட்டி நெறிகள்

‘ரீ-இன்போர்ஸ்டு கான்க்ரீட் ஸ்ட்ரக்சர்’ அமைப்பாக உள்ள அனைத்து கட்டுமானங்களுக்கும் 50 ஆண்டுகள் வயது என்று மத்திய பொதுப்பணித்துறை வழிகாட்டு நெறிமுறை குறிப்பிடுகிறது. அதாவது, கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் ஆகியவற்றிற்கு இந்த விதி பொருந்தும்.

துருவால் பாதிப்பு

பொதுவாக கட்டமைப்பின் ஆயுளை பாதிக்கும் காரணியாக கட்டுமான முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக அமைந்திருப்பதை வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதாவது, கான்கிரீட் பணிகளின்போது அதை சரியான விகிதத்தில் கலக்காதது, கச்சிதமாக ‘வைப்ரேஷன்’ செய்யப்படாதது ஆகிய நிலைகளில் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் காரணமாக இரும்பு கம்பிகளில் துரு ஏற்படுகிறது. அதன் காரணமாக, கம்பிகள் அவற்றின் இயல்பான குறுக்களவிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு மடங்கு பெரியதாக மாறிவிடுகிறது.

அதனால் கட்டமைப்பு படிப்படியாக உறுதி குறைந்து, 5 ஆண்டுகளில் விரிசல்கள் ஏற்படலாம். 10 ஆண்டுகளில் அந்த கட்டமைப்பு அதன் உறுதியை இழக்கும் நிலை உருவாகலாம். மேலும், பீம், காலம், கட்டுமான இணைப்புகளான ஜங்ஷன் பகுதிகளில் உள்ள ‘ஜாயிண்டு ரிங்’ அமைப்புகள் 10 எம்.எம் மற்றும் அதற்கும் அதிகமான கனம் கொண்ட கம்பிகளால் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிட வலிமை மற்றும் நீடித்த தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

தரமான கட்டுமான பொருட்கள்

பொதுவாக, அடுக்குமாடிகளின் உறுதியாக இருப்பது அதன் கட்டுமான பொருட்களின் தரத்தை பொறுத்தது. அதனால், தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் தயாரித்த பொருட்களை பயன்படுத்தி, அனுபவம் கொண்ட தொழில் நுட்ப பணியாளர்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது அவசியமானது.

கட்டுமான தரச்சான்று

தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிகளை அவற்றின் ‘ஹவுசிங் போர்டு’ அமைப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்கிறது. அதன் மூலம் கட்டுமான பழுதுகள் சரி செய்யப்பட்டு தரச்சான்று வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த தரச்சான்றின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டமைப்புகளின் வயதும் அவர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

பல்வேறு பரிசோதனைகள்

நமது பகுதிகளிலும் ‘வில்லா’ என்ற தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடிகளான ‘அபார்ட்மென்டுகள்’ ஆகியவற்றின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக ‘ஸ்ட்ரக்சுரல் டிசைன்’, மண் பரிசோதனை, தரமான கட்டிட பொருட்கள் மற்றும் கச்சிதமான கட்டுமான முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய புராஜெக்டுகள் உருவாக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் குறைந்த பட்சம் 50 ஆண்டு காலம் உறுதியாக இருக்கும் தன்மை பெற்றவையாக குறிப்பிடப்படுகின்றன.

Next Story