வீடுகளில் மரம் வளர்ப்பு பற்றிய வாஸ்து குறிப்புகள்


வீடுகளில் மரம் வளர்ப்பு பற்றிய வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 7:12 AM GMT (Updated: 8 Dec 2018 7:12 AM GMT)

வருடத்தின் பல மாதங்கள் வெப்பமான காலநிலை கொண்ட நமது பகுதிகளில் குளிர்ச்சியான காற்று வீசும் சூழலை ஏற்படுத்த வீடுகளை சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்பட்டன.

அத்தகைய மரங்கள் உள்ளிட்ட இதர செடிகள் வளர்ப்பு பற்றி பழமையான வாஸ்து வித்யா (சாஸ்திரம்) குறிப்பிடும் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நமது பண்பாடு அனைத்து உயிர்களையும் மதிக்கும் தன்மை கொண்டு செயல்படுகிறது. அதன் அடிப்படையில் மரங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டன. வாஸ்து ரீதியாக விருட்சங்கள் என்று சொல்லப்பட்ட மரங்களின் அமைப்பு மற்றும் உறுதியை கணக்கில் கொண்டு அந்தசாரம், பகிர்சாரம், சர்வசாரம் மற்றும் நிசாரம் என்று நான்கு விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தசாரம்

மேல்பகுதி சற்றே மென்மையானதாகவும், மையப்பகுதி வலிமையாகவும் அமைந்த மரங்கள் அந்தசாரம் என சொல்லப்பட்டன. பலா மரம், மாமரம் போன்றவை இந்த வகையில் வருகின்றன. வீட்டுக்கு மேற்கு பகுதியில் உள்ள தோட்டங்களில் இவற்றை வளர்க்க ஏற்றதாக வாஸ்து குறிப்பிட்டுள்ளது.

பகிர்சாரம்

வெளிப்புறம் கடினமான தன்மையும், உள்புற மையத்தில் மென்மையாக உள்ள மரங்கள் இவ்வகைப்படும். தென்னை மரம், பாக்கு மரம் போன்றவை இவ்வகையில் வருகின்றன. அவற்றை வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் உள்ள தோட்டங்களில் வைத்து பராமரிக்கலாம்.

சர்வசாரம்

மரத்தின் தண்டு பகுதி முழுவதும் உறுதியாக உள்ள மரங்கள் சர்வசாரம் என்று சொல்லப்பட்டன. தேக்கு, ஈட்டி மரம் போன்றவை இவ்வகையை சேர்ந்தவை. வீட்டுக்கு தெற்கில் உள்ள தோட்ட பகுதிகளில் இவற்றை வளர்க்கலாம்.

நிசாரம்

மரத்தின் தண்டு பகுதி மென்மையாக அமைந்த மரங்கள் நிசாரம் எனப்படும். இலவம் பஞ்சு மரம், கல்யாண முருங்கை ஆகியவை இந்த வகையை சேர்ந்தவை. வீடுகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள தோட்டங்களில் இவற்றை வளர்க்கலாம்.

பல்வேறு காரணங்கள்

மேற்கண்ட மரங்களின் இயற்கை தன்மைகள் மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவற்றை திசைகளுக்கு ஏற்றதாக வகைப்படுத்தி பயன்படுத்தப்பட்டன.

திசைகளுக்கு ஏற்ற மரங்கள்

குறிப்பாக, வீட்டுக்கு வெளிப்புறம் கிழக்கு பகுதியில் ஆலமரம், மகிழ மரம் ஆகியவற்றை வளர்த்து வரலாம். அத்தி மரம், புளிய மரம் ஆகியவற்றை வீட்டுக்கு தென் திசைக்கு வெளிப்புறத்தில் வைத்து பராமரிக்கலாம்.

ஏழிலைப்பாலை, அரசு ஆகிய மரங்களை வீட்டுக்கு வெளிப்புறம் மேற்கு திசையில் வளர்க்கலாம். புன்னை, எலுமிச்சை போன்ற மரங் களை வடக்கு திசையில் வைத்து பராமரித்து வரலாம்.

இந்த விவரங்களை பழமையான வாஸ்து வித்யா சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த மரங்களின் உயரத்தை போல் இருமடங்கு தூரம் வீட்டுக்கும், மரங்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் நெறிப்படுத்தி உள்ளன.

இன்றைய நடைமுறை

அன்றைய வாழ்வியல் நெறிகளுக்கு மரங்களை வளர்க்கும் மேற்கண்ட முறைகள் பொருத்தமாக இருந்தாலும், இன்றைய நகர்ப்புற சூழலில் அவை பொருத்தமாக அமையவில்லை. இன்றைய சூழலில் பழமையான வாஸ்து சாஸ்திர விதிகள் பல அறிஞர்களால் எளிமையாக மாற்றப்பட்டுள்ளன.

அத்தகைய வழிமுறைகளின்படி மாமரம், தென்னை, பலா, எலுமிச்சை, மகிழம் மரம் உள்ளிட்ட மரங்களை தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் உள்ள தோட்டங்களில் வளர்ப்பது நன்மை தரும்.

மேலும், 12 அடிக்கும் குறைவான உயரத்தில் வளரும் செடி அல்லது மரங்களை கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் தோட்டம் அமைத்து வளர்ப்பது நன்மை தரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story