தெரிந்து கொள்வோம் - ‘ஸ்கைகிராப்பர்’


தெரிந்து கொள்வோம் - ‘ஸ்கைகிராப்பர்’
x
தினத்தந்தி 8 Dec 2018 7:19 AM GMT (Updated: 8 Dec 2018 7:19 AM GMT)

வழக்கத்தை விடவும் மிக அதிக உயரம் கொண்ட கட்டமைப்புகள் ‘ஸ்கைகிராப்பர்’ (Skyscraper) என்றும், தமிழில் ‘வானளாவி’ என்றும் சொல்லப்படுகின்றன. அதாவது, கிட்டத்தட்ட 150 மீட்டர் என்ற அளவை விடவும் அதிக உயரம் கொண்ட கட்டுமான அமைப்புகள் இந்த வகையில் அடங்குகின்றன.

குறிப்பாக 19-ம் நூற்றாண்டு காலகட்டம் வரை ஆறு மாடிக்கும் மேற்பட்ட உயரம் கொண்ட கட்டமைப்புகளை வடிவமைக்கும் தொழில்நுட்பம் அறியப்படாமல் இருந்தது. அதன் பின்னர் நாகரிகம், நகர விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் குடியிருப்புகள் விரைவாக அமைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது.

ஆரம்பம் முதலே இரும்பு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் சிமெண்டு என்ற கண்டுபிடிப்புக்கு பின்னர் அதை மணலுடன் கலந்து வலுவூட்டப்பட்ட கான்கிரீட் (Reinforced Concrete) என்ற செயல்முறை உருவாக்கப்பட்டது. அதன் மூலம் குடியிருப்புகள் எளிதாக அமைக்கப்பட்டன.

அஸ்திவார நுட்பங்கள் வளர்ச்சி பெற்ற நிலையில் கட்டமைப்புகளின் உயரமும் அதிகமானது. இன்றைய நிலையில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் உயரத்தை தொடும் கட்டுமான அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்தகைய அதி உயரமான கட்டிடங்களில் ஏறி இறங்க மாடிப்படிகள் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளுக்கேற்ப இருந்தாலும், ‘லிப்ட்’ என்ற மின் தூக்கிகள்தான் பரவலாக உபயோகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக மேல் தளங்களின் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீர் தக்க நீரேற்றிகள் அமைத்து கொண்டு செல்லப்படுகிறது.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் நியூயார்க் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் வானளாவிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. பத்து மாடிகள் கொண்ட ‘ஹோம் இன்சூரன்ஸ்’ என்ற முதலாவது அதி உயர கட்டிடம் சிகாகோவில் கட்டமைக்கப்பட்டது. கி.பி. 1885-ல் கட்டப்பட்டு பின்னர் இன்னொரு கட்டிடம் கட்டுவதற்காக 1931-ல் இடித்து மாற்றியமைக்கப்பட்டது.

பொதுவாக, 4 மாடிகள் வரை உயரம் கொண்ட கட்டிடங்களின் சுவர்களையே அவற்றின் எடையை தாங்கி நிற்பவையாக அமைக்கலாம். ஆனால், மேற்கண்ட அதி உயர கட்டமைப்புகளின் எடையை தாங்கும் அமைப்புகள் பிரத்தியேகமான ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’ முறையில் வடிவாக்கம் செய்யப்படுவது வழக்கம்.

அவற்றின் சுவர்கள் வழக்கத்தை விடவும் அளவு மற்றும் எடை ஆகியவை குறைவாக அமைக்கப்படும். குறிப்பாக, காற்றின் அழுத்த விசை மற்றும் நில அதிர்வுகள் ஆகியவற்றை தாங்கி நிற்கும் விதத்தில் 40 மாடிகளுக்கும் அதிக உயரம் கொண்ட கட்டமைப்புகள் சிறப்பு கவனத்துடன் டிசைன் செய்யப்படுகின்றன. மேலும், பல நிலைகளில் தொழில்நுட்ப சோதனைகளுக்கு பின்னரே அவற்றின் கட்டுமான பணிகள் தொடங்கப்படுகின்றன.

Next Story