கான்கிரீட் தரைப்பரப்பு விரிசல்களை சீரமைக்கும் தொழில் நுட்பம்


கான்கிரீட் தரைப்பரப்பு விரிசல்களை சீரமைக்கும் தொழில் நுட்பம்
x
தினத்தந்தி 15 Dec 2018 12:21 PM IST (Updated: 15 Dec 2018 12:21 PM IST)
t-max-icont-min-icon

தரைப்பரப்பில் உருவான விரிசல்ககளை சீரமைக்க கடைப்பிடிக்கப்படும் முறைகளில் ‘சிலாப் ஜாக்கிங்’ (Slab Jacking or Pressure Grouting ) என்ற தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்கது.

ல கட்டுமானங்களில் தரைப்பகுதி பல்வேறு அளவு கொண்ட கான்கிரீட் பரப்புகளாக அமைக்கப்பட்டிருக்கும். வெளிப்புற நடைபாதை, கார் ஷெட், தோட்டங்களில் உள்ள நடைபாதை உள்ளிட்ட பல இடங்கள் கான்கிரீட் தளங்களாக இருப்பதை பல இடங்களில் கவனித்திருப்போம்.

பல ஆண்டுகள் தட்பவெப்ப நிலைகளை தாங்கி நிற்கும் அத்தகைய கான்கிரீட் பரப்புகளில் விரிசல்கள் ஏற்படலாம். காலப்போக்கில் விரிசல் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் சில பகுதிகள் அதன் முந்தைய தரை மட்ட அளவிலிருந்து தாழ்ந்து விடும் நிலை ஏற்படலாம்.

அத்தகைய கான்கிரீட் தளத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு புதியதாக அமைப்பது சிரமமானதாகும். அதற்கான கால அவகாசம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை கணக்கிடும் பட்சத்தில் பலரும் அத்தகைய பணிகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக அறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிலையில் தரைப்பரப்பில் உருவான விரிசல்கள் மற்றும் அதன் காரணமாக தளம் தாழ்ந்திருப்பது ஆகிய பாதிப்புகளை சீரமைக்க கடைப்பிடிக்கப்படும் முறைகளில் ‘சிலாப் ஜாக்கிங்’ (Slab Jacking or Pressure Grouting ) என்ற தொழில் நுட்பம் குறிப்பிடத்தக்கது. மேலை நாடுகளில் பரவலாக உள்ள அந்த முறை பற்றி இங்கே காணலாம்.

சம்பந்தப்பட்ட கான்கிரீட் தள அமைப்பில் உருவான விரிசல்கள் மற்றும் அதன் காரணமாக தாழ்ந்த தரைப்பகுதியை சீரமைக்க பொறியாளர்கள் விரிசல்கள் உருவான பகுதியை தக்க முறையில் சுத்தம் செய்து, விரிசல்களின் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்வார்கள். அதன் மூலம் கான்கிரீட் தளத்தில் எவ்வளவு ஆழம் மற்றும் அகலத்தில் விரிசல் பரவியுள்ளது என்பதை கணக்கிட்டு, விரிசல் உருவானதற்கான அடிப்படை காரணங்கள் பற்றியும் கண்டறிந்து சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

இந்த தொழில்நுட்ப முறைப்படி விரிசல்கள் உருவான பகுதியில் பல்வேறு இடங்களில் துளைகள் இடப்பட்டு, அவற்றில் சிமெண்டு, மணல் மற்றும் சுண்ணாம்பு சாந்து கலந்த கலவையை தக்க இயந்திரங்கள் மூலம் அதிகப்படியான அழுத்தத்துடன் உள் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் கலவை விரிசலுக்குள் நுழைந்து அதன் இறுதி வரை பரவும்படி செய்யப்படும்.

இந்த முறையில் விரிசல்களால் உருவான இடைவெளியை மட்டும் நிரப்புவதாக இல்லாமல் அதன் சிறிய இடைவெளிகளிலும் நுழையும் வண்ணம் கலவை சீரான அழுத்தத்தில் தக்க எந்திரங்கள் மூலம் செலுத்தப்படுகிறது. அதிகப்படியான அழுத்தத்தில் செலுத்தப்படும் மேற்கண்ட கலவை மூலம் தாழ்ந்த தளம் மெல்ல உயரத்தொடங்கும். மேற்பரப்புக்கு இணையான அளவுக்கு வந்தவுடன் கலவை உள் செலுத்தப்படுவது நிறுத்தப்படும்.

மேற்கண்ட பணிகள் முடிக்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் விரிசல்கள் சரி செய்யப்பட்ட பகுதிகளின் மேற்பரப்பில் பூச்சு வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த முறையின் மூலம் தரைக்குள் புதைந்துவிட்ட ‘ரேம்ப்’ அமைப்புகள், வீட்டின் வெளிப்புற படிக்கட்டுகள் ஆகியவற்றையும் சீர் செய்துகொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story