வாஸ்து குறிப்பிடும் ‘காம்பவுண்டு’ சுவர் அமைப்பு


வாஸ்து குறிப்பிடும் ‘காம்பவுண்டு’ சுவர் அமைப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 7:10 AM GMT (Updated: 15 Dec 2018 7:10 AM GMT)

வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளுக்கும் காம்பவுண்டு சுவர் அமைப்பதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள வாஸ்து குறைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இயலும்.

வீடு-மனைகளுக்கு பக்கத்தில் உள்ள கிணறுகள், தெருக்குத்து அமைப்புகள், தவிர்க்க இயலாத பள்ளமான பூமி அமைப்பு ஆகிய காரணங்களால் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பாக அவை செயல்படுகின்றன என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுச்சுவர் அமைப்பு

பாதுகாப்பு வேலியாக அமையும் காம்பவுண்டு சுவர்கள் நாற்புறமும் தனிப்பட்ட அமைப்பாக இருப்பதே பாதுகாப்பானது. இரு வீடுகளுக்கும் பொதுவான சுவர் அமைப்பாக இருப்பதை தவிர்க்கும்படியாக வாஸ்து குறிப்பிடுகிறது. ஆனால், இன்றைய நகர்ப்புற வாழ்வில் உள்ள இட நெருக்கடிகளுக்கு மத்தியில் சில விதிவிலக்குகளை நடைமுறைப்படுத்த வேண்டியதை உணர்ந்த வாஸ்து வல்லுனர்கள் அதற்காக கீழ்க்கண்ட வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளனர்.

பேஸ்மட்ட அளவு

பூமி பூஜைக்கு பிறகு வீட்டின் கட்டுமான பணிகளில் அஸ்திவாரம் அல்லது பில்லர் ஆகியவற்றை அமைத்து, பேஸ் மட்ட அளவில் நிறுத்த வேண்டும். அதன் பின்னர், நான்கு மூலைகளிலும் காம்பவுண்டு சுவருக்கான அஸ்திவார சுவரை கட்டிட பேஸ்மட்டம் வரை கருங்கற்களால் அமைக்கவேண்டும். பிறகு காம்பவுண்டு சுவருக்கும் பேஸ் மட்டத்திற்கும் உள்ள இடைவெளியை தக்க விதத்தில் மண்ணால் நிரப்பவேண்டும். அதன் மூலம் சுற்றுப்புற பூமி தோஷங்களிலிருந்து கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

வடக்கு-கிழக்கு சுவர்கள்

கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு காம்பவுண்டு சுவரை செங்கல் அல்லது ஹாலோபிளாக் மூலம் தேவையான உயரத்திற்கு அமைத்துக்கொண்டால் வெளிப்புற வாஸ்து தோஷங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இரு வீடுகளுக்கும் பொதுவான காம்பவுண்டு சுவர் அமைக்கவேண்டிய நிலையில் குறிப்பிட்ட வீட்டிற்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியில் இருக்கலாம். வீட்டிற்கு வடக்கு திசையான குபேர திக்கு மற்றும் கிழக்கு திசையான இந்திர திக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பொது காம்பவுண்டு சுவர் அமைப்பு வாஸ்து ரீதியாக நல்ல பலன்களை அளிப்பதில்லை.

தெற்கு-மேற்கு சுவர்கள்

நான்கு திசைகளிலும் ஒரே உயரம் கொண்டதாக சுற்றுச்சுவர் இருக்கலாம். கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களை விடவும் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சற்றே கனமாகவும், உயரமாகவும் அமைக்கப்படுவது நற்பலன்களை ஏற்படுத்தும்.

இரண்டு-மூன்று பக்க சுவர்கள்

நான்கு பக்கங்களிலும் காம்பவுண்டு சுவர் அமைப்பது முறை என்ற நிலையில் ஒரு சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் மட்டும் சுவர் எழுப்ப வேண்டிய நிலை இருக்கலாம். அது போன்ற சூழலில் நான்கு பக்கமும் சுற்று சுவருக்கான அஸ்திவாரம் அமைத்து பேஸ்மட்டம் வரை எழுப்பி நிறுத்திக்கொள்ளலாம். பின்னர் தேவையான பகுதிகளில் சுவரை எழுப்பிக்கொள்வதும் ஒரு முறையாகும்.

விரிசல்கள் கூடாது

குறிப்பாக ‘காம்பவுண்டு வால்’ என்ற சுற்றுச்சுவரில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்பில்லாத கட்டுமானமாக அமைப்பது அவசியம். எதிர்பாராமல் விரிசல்கள் ஏற்பட்டால் தக்க தொழில்நுட்ப முறைகளை கையாண்டு அவற்றை சரி செய்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை சக்திகளால் பாதிப்பு ஏற்படலாம்.

ஒரு சில வீடுகளில் வாஸ்து ரீதியாக அனைத்து அமைப்புகளும் கடைப்பிடித்து நல்ல பலன்கள் ஏற்பட்டிருக்கும். சில காலம் கழிந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கு மேற்குறிப்பிட்ட காம்பவுண்டு சுவர் பாதிப்புகளும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story