பணியிடங்களுக்கு அவசியமான தீ தடுப்பு நடவடிக்கைகள்


பணியிடங்களுக்கு அவசியமான தீ தடுப்பு நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 15 Dec 2018 7:45 AM GMT (Updated: 15 Dec 2018 7:45 AM GMT)

வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் தீ விபத்து என்பது முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

மனிதர்களது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தலாக உள்ள தீயின் பாதிப்புகள் அலுவலகம் உள்ளிட்ட பணியிடங்களிலும் எதிர்பாராமல் ஏற்பட்டு விடுகின்றன. அத்தகைய சூழல் உருவாகும் நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் ஆகியவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

எந்திரங்கள் இயங்கும் தொழிற்சாலைகள் போன்றே பணி புரியும் அலுவலகங்களிலும் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய நவீன காலகட்ட அலுவலகங்களில் கம்ப்யூட்டர்கள், யூ.பி.எஸ்., ஏர்கண்டிசனர் உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

அந்த உபகரணங்களை கவன குறைவாக பயன்படுத்துவது அல்லது முறையாக பராமரிக்காமல் விடப்படுவது ஆகியவற்றால் தீ உருவாகி பாதிப்புகளை உண்டாக்கலாம். குறிப்பாக, பெரும்பாலான தீ விபத்துகள் அலுவலகம் இயங்கும் நேரங்களில் ஏற்படாமல், மூடப்பட்டுள்ள சூழலில்தான் அதிகப்படியான தீ விபத்துகள் ஏற்படுவது அறியப்பட்டுள்ளது. பணியிடங்களில் உருவாகும் தீ விபத்துகள் கீழ்க்கண்ட மூன்று காரணங்களின் அடிப்படையில் ஏற்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. அவை :

1) பணியாளர்கள் கவனக்குறைவு.

2) பயன்பாட்டில் உள்ள மின் சாதன பொருட்கள்.

3) சுற்றியுள்ள இதர கட்டிடங்கள்.

பணியிடங்களில் ஏற்படும் தீ விபத்துகள் இரண்டு வகையாக உள்ளன. அவை,

1) மின்சாரம் அல்லது மின் சாதனங்களால் உருவாவது,

2) இதர காரணங்களால் ஏற்படுவது.

பணி புரியும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் தீயினால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். குறிப்பாக, எளிதில் தீப்பற்றக்கூடிய காகிதம், குப்பைகூளங்கள், பயனற்ற துணிகள், காட்டன், மரத்துகள் மற்றும் சிறு குச்சிகள் போன்ற பொருட்கள் காரணமாக தீ உருவாகலாம்.

மேலும், பணியிடத்தில் உள்ள பொருட்கள் மற்றும் தரையை சுத்தம் செய்வதற்கு பயன்படும் கிளனிங் ஏஜெண்டுகள், பிரிண்டிங் இங்க் போன்றவை தரையில் சிதறி விழுவதனாலும் தீ பாதிப்புகள் ஏற்படலாம்.

பொதுவாக, தீ விபத்துக்கள் முற்றிலும் அணைக்காமல் கீழே போடப்படும் தீக்குச்சி அல்லது சிகரெட் துண்டுகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. எளிதில் தீ பற்றக்கூடிய காகிதம் போன்ற பொருட்கள் கீழே குப்பையாக கிடக்கும் நிலையில் தீ பிடிக்கிறது. மேலும், சரியாக கையாளப்படாத எரியும் தீபம், ஊதுபத்தி போன்றவையும் காரணமாக சொல்லப்படுகின்றன.

மின்சார ஒயர்கள், மின் இணைப்புகள், மெயின் சுவிட்ச் போர்டு உள்ளிட்ட சாதனங்களால் மின்சார தீ விபத்து ஏற்படலாம். மேலும், பணியிடங்களில் உள்ள மின் அடுப்பு, ஹீட்டர், காபி மேக்கர் போன்ற உபகரணங்களை அனுபவம் இல்லாத பணியாளர்கள் இயக்கும் நிலையிலும் தீ விபத்து உருவாகலாம்.

தரமில்லாத மின்சார உபகரணங்கள் மற்றும் மின் சாதனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், குறைந்த மின் அழுத்தத்தை தாங்கக்கூடிய மின் கம்பியில் அதிக மின்சார பயன்பாடு கொண்ட உபகரணத்தை இணைப்பதாலும் தீ விபத்துகள் ஏற்படலாம். மேலும், ஒரே சாக்கெட்டில், வெவ்வேறு உபகரணங்களை இணைத்து பயன்படுத்துவது அல்லது பழுதடைந்த உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலமும் தீ விபத்துக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

Next Story