இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் புதுமையான வீடு


இயற்கை  சீற்றங்களை  தாங்கி  நிற்கும்  புதுமையான  வீடு
x
தினத்தந்தி 28 Dec 2018 10:45 PM GMT (Updated: 28 Dec 2018 10:13 AM GMT)

பெருமழை மற்றும் புயல், நில அதிர்வு போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் சமயங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகள் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுகின்றன.

பெருமழை மற்றும் புயல், நில அதிர்வு போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் சமயங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகள் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுகின்றன. குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பொதுமக்களின் எளிமையான குடியிருப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டு அவர்களை வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது.

இயற்கை சீற்றங்கள்

சமீபத்தில் தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்களை பாதித்த கஜா புயல் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் சீர் செய்ய இயலாத அளவுக்கு பாதிப்படைந்து விட்டன. 2015–ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களது குடியிருப்புகளை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உருவானது. 

புதுமை கட்டமைப்பு

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத பல்வேறு கட்டுமான அமைப்புகள், வீடுகள் போன்றவை தொழில்நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை நடைமுறைக்கு எளிதாக அமைந்திருந்தாலும் சிக்கன செலவுக்குள் அமைந்திருப்பதில்லை. பயன்படுத்த எளிதாகவும், சிக்கன பட்ஜெட்டிலும் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் நவீன முறையிலான மடக்கு வீடு கட்டமைப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 

தேசிய அளவிலான பரிசு

சென்னை ஐ.ஐ.டி சிவில் என்ஜினியரிங் துறை மாணவர்கள் கோபிநாத், ஸ்ரீராம், அகிலேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் உள்ளிட்ட மாணவர்களின் குழு மேற்கண்ட நவீன மடக்கும் வீட்டை வடிவமைத்துள்ளனர். இந்த மடக்கு வீடு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்

கழகம் நடத்திய தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த மடக்கு வீடு அலுமினிய சட்டங்களை அடிப்படையாக வைத்து, டெலஸ்கோபிக் முறையையும் முன் மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தொலைநோக்கியை எவ்வாறு சிறியதாகவும், பெரியதாகவும் விரிக்க முடியுமோ அதுபோல இந்த வீட்டையும் மடிக்கவோ, விரித்து வைக்கவோ அல்லது வேண்டிய இடத்துக்கு எளிதாக நகர்த்திச் செல்லவோ முடியும். கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்குள் இந்த வீட்டை விரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

எளிதாக மடக்கி வைக்கலாம்

விரித்து வைக்கப்பட்ட நிலையில் இந்த வீடு இரண்டு தளங்கள் கொண்டதாக இருக்கும். 400 சதுர அடி பரப்பளவு மற்றும் சுமார் 700 கிலோ எடை கொண்ட இந்த கூடார அமைப்பு மடக்கு வீட்டை 5 அடி அகலம் கொண்ட ஒரு பெட்டிக்குள் எளிதாக மடித்து வைத்து விடலாம். இந்த வீட்டில் சுமாராக 20 பேர்கள் வரையில் தங்க முடியும். மின்சார வசதிக்கு சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், தண்ணீருக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள அறையை வேண்டியவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story