கான்கிரீட் நீராற்றல் செய்ய உதவும் ரசாயன கலவை
கான்கிரீட் நீராற்றல் என்ற ‘கியூரிங்’ கட்டுமான பணிகளில் பொறியாளர் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி செய்யும் வேலையாக இருந்து வருகிறது.
குறிப்பாக சுத்தமான தண்ணீர் கொண்டு கட்டமைப்புகளை தக்க இடைவெளிகளில் நீராற்றல் செய்து வரவேண்டிய சூழலில் தண்ணீர் இல்லாமல் அந்த பணிகளை செய்ய உதவும் ரசாயன பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
ரசாயன கலவை
அதாவது, கான்கிரீட் அமைப்புகளுக்கு வழக்கமான முறைகளில் நீராற்றும் வேலைகளை செய்யத் தேவையில்லாமல் ‘பாரபின்’ மற்றும் ‘பாலிமர்’ ஆகியவற்றை கொண்டு மேல்நாட்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் ரசாயன கலவைகளை பயன்படுத்தியும் பணிகளை செய்து முடிக்கலாம்.
புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் மேல் பரப்பில் அந்த ரசாயனத்தை ஒருமுறை பரவலான மேற்பூச்சாக பிரஷ் அல்லது ஸ்ப்ரே கொண்டு ‘கோட்டிங்’ கொடுக்க வேண்டும். அதன் மூலம் கான்கிரீட் மேற்பரப்பில் ‘அக்ரிலிக்’ அடிப்படையிலான படலம் ஒன்றை அது உருவாக்கி நீர் ஆவியாதலை தடுக்கிறது.
பயன்பாட்டு அளவு
ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 250 கிராம் என்ற அளவில் பூசப்பட்ட மேற்பூச்சு கான்கிரீட்டிலிருந்து தண்ணீர் ஆவியாகி வெளியே செல்லாமலும், விரைவில் உலர்ந்து போகாமலும் தடுக்கிறது. மேலும், வெடிப்புகள் உண்டாவதை தடுத்து, கான்கிரீட் ‘செட்டிங்’ ஆவதை உறுதிப்படுத்துகிறது.
மேற்கண்ட ரசாயனத்தை பெரிய அளவுள்ள கான்கிரீட் பரப்புகளில் தக்க ‘ஸ்ப்ரேயர்’ கொண்டு மேற்பூச்சு செய்ய வேண்டும். வழக்கமான சிமெண்டு ‘செட்டிங்’ காலம் எவ்விதத்திலும் மாறாமல் இருப்பதுடன், சுருக்கங்கள் மற்றும் வெடிப்புகள் ஆகிய பாதிப்புகளும் தடுக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
தண்ணீர் தேவையில்லை
குறிப்பாக, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு ஏற்ற ரசாயனமாக இருப்பதோடு கான்கிரீட் பணிகளை அடுத்து உடனடியாக மேற்பூச்சு வேலைகளையும் ஆரம்பிக்க இயலும் என்றும் இதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சூரிய வெப்பம் உறிஞ்சப்படாமல், எதிரொலிக்கப்படும் காரணத்தால் கான்கிரீட் குளிர்ச்சியாக இருக்கும். அந்த மேற்பூச்சை அகற்றாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர இயலும். நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், பிரிகேஸ்ட் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட கட்டிடங்களின் கான்கிரீட் அமைப்புகளுக்கு மேற்கண்ட ரசாயன கலவை மூலம் சுலபமாக நீராற்றல் பணிகளை செய்து முடிக்க இயலும்.
Related Tags :
Next Story