பிளாஸ்டிக் கழிவு மூலம் செயற்கை ஜல்லி


பிளாஸ்டிக் கழிவு மூலம் செயற்கை ஜல்லி
x
தினத்தந்தி 5 Jan 2019 7:15 AM GMT (Updated: 5 Jan 2019 7:15 AM GMT)

பிளாஸ்டிக் பைகள் மீதான தடை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கட்டுமான பணிகளில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கான்கிரீட் கலவையில் பயன்படும் ஜல்லிக்கு மாற்றாக உபயோகிக்க இயலும் என்பது உலக நாடுகளின் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது.

ஆற்று மணலுக்கு மாற்றாக எம்-சாண்ட் அறியப்பட்டதுபோல ஜல்லி பயன்பாட்டில் கருங்கல்லுக்கு மாற்றாக பிளாஸ்டிக் ஜல்லி உருவாக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாதிப்புகள்

இந்திய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன்னுக்கும் மேல் உண்டாக்கப்படுவதாக சென்ற ஆண்டு வெளியான மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் மக்கும் தன்மையற்ற காரணத்தால் பூமியின் மேற்பரப்பு மூடப்பட்டு, அந்தப்பகுதி மழைநீர் தரையில் இறங்க தடையாக அமைகிறது. அதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் ஜல்லியை தயாரிப்பது காலத்திற்கேற்ற அவசியமாகவும், மாற்று வழியாகவும் நிபுணர்களால் கவனிக்கப்படுகிறது.

‘பிளாஸ்டிக் கான்கிரீட்’

மேற்கண்ட முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை எந்திரங்கள் மூலம் துகள்களாக அரைக்கப்பட்டு அல்லது மறுசுழற்சி தொழிற்சாலைகளில் மண் துகள்போல் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமான கான்கிரீட் தயாரிப்பதுபோல மணல், தண்ணீர், சிமெண்டு ஆகியவற்றுடன் மேற்கண்ட துகளை சேர்த்து கலவை தயாரிக்கப்படுகிறது. அதில் 60 சதவிகிதம் பிளாஸ்டிக் துகள், 20 சதவிகிதம் சிமெண்டு, 20 சதவிகிதம் மணல் என்ற நிலையில் அந்த கான்கிரீட் கலவை அமையும்.

‘பிளாஸ்டிக் பிரிக்ஸ்’

மேற்கண்ட வழியை பின்பற்றி சுவர்களை அமைப்பதற்கான ‘கான்கிரீட் பிரிக்’ தயாரிக்கும் முயற்சிகளையும் சில உலக நாடுகள் முன்னரே தொடங்கிவிட்டன. குறிப்பாக, அர்ஜெண்டினா நாட்டு தனியார் நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் ‘பெட் பிரிக்ஸ்’ (PET BRICKS ) என்ற செங்கல் வகையை தயாரித்துள்ளது. அதிக சக்தியை எடுத்துக்கொண்டு தயாராகும் செங்கலுக்கு மாற்றாக அமைந்த இந்த செங்கல் வகையை ஐ.நா. அமைப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமான பொருளாக அங்கீகரித்திருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கும் செங்கல் வகைகளுக்கு உற்பத்தி செலவு குறைவாக இருப்பதுடன் உறுதியான கட்டமைப்புக்கு துணையாகவும் அமைகின்றன. குறிப்பாக, ரசாயனங்கள் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் எளிதில் சேதமடையாத தன்மை கொண்டதுடன், எடை குறைவாகவும் இருக்கும். அதனால் கட்டுமான பணிகளின்போது இவற்றை எளிதாக கையாள இயலும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

உலகளாவிய ஆய்வுகள்

சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறைந்த விலை வீட்டு குடியிருப்புகள் உருவாக்குவதில் மேற்கண்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனாவில் ‘பிளாஸ்டிக் ஜல்லி’ சந்தையில் கிடைப்பதாக அறியப்பட்டுள்ளது. (முன்னதாக கருங்கல் ஜல்லிக்கு மாற்றாக களிமண்ணை 1200 டிகிரி வெப்பத்தில் உருக்கி தயாரிக்கப்படும் ‘லேகா’ ( Lightweight expanded clay aggregate-LECA) என்ற ஜல்லி வகையும் பல நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது)

நமது பகுதியில் கோவை கல்லூரியை சேர்ந்த கட்டுமானத்துறை மாணவர்கள் ஆராய்ச்சி ரீதியாக பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சிமெண்டு கல் மற்றும் ‘பேவர் பிளாக்ஸ்’ என்ற நடைபாதைக்கான ‘இன்டர் லாக்கிங்’ கற்கள் தயாரித்து, அவற்றை பல்வேறு தாங்கு திறன் சோதனைகளுக்கு உட்படுத்தி அவற்றின் தரத்தை உறுதி செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

Next Story