வீட்டு வசதி திட்ட கடன் சலுகை காலம் நீட்டிப்பு


வீட்டு வசதி திட்ட கடன் சலுகை காலம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 1:07 PM IST (Updated: 5 Jan 2019 1:07 PM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த வருமான பிரிவினர் மற்றும் நடுத்தர வருமான பிரிவினை சேர்ந்தவர்கள் சொந்த வீடு கட்ட அல்லது வாங்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீட்டு கடன் திட்டம் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

குறைந்த, நடுத்தர, வருமான பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் சொந்த வீடு வாங்க உதவியாக 2017-ம் ஆண்டு வரை திட்டம் நீட்டிக்கப்பட்டது.

அரசு ஒவ்வொரு முறையும் இந்த திட்டத்தை மேம்படுத்தி வரும் நிலையில் மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பு பெற்று, இந்திய அளவில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, முதல் வீடு வாங்குபவர்களுக்கு இந்த திட்டம் நல்ல பயனை அளிப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வீட்டு கடன் அனுமதி 37 சதவிகிதமாகவும், குறைந்த வருமான பிரிவினருக்கு கடனுடன் இணைந்த மானியத் திட்டத்தின் (Credit Linked Subsidy Scheme ) வளர்ச்சி 18 சதவிகிதமாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு 6.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்பட்டது. ரூ.9 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 4 மற்றும் 3 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பெற்ற கடனை 20 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தலாம் என்ற நிலையில் கடன் பெற்றவர்களுக்கு ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.67 லட்சம் வரை வட்டி மானியம் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டம் தற்போது 2020 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இதன் மூலம் மேலும் ஒரு லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Next Story