பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறும் வசதி


பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறும் வசதி
x
தினத்தந்தி 12 Jan 2019 3:36 PM IST (Updated: 12 Jan 2019 3:36 PM IST)
t-max-icont-min-icon

பதிவு அலுவலகங்களில் ஆவண பதிவு முடிந்த ஒரு மணி நேரம் கழித்து அவற்றை உடனே வழங்கும் திட்டம் இந்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய நடைமுறை

வழக்கமாக ஆவண பதிவு முடிந்த ஒரு சில நாட்களில் அது ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் உரியவர்களுக்கு வழங்கப்படும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், பதிவு மேற்கொண்ட அதே நாளில் ஒரு மணி நேரத்துக்குள் ஆவணத்தை பெறக்கூடிய புதிய நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்ய உள்ளது. அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுடன் அதன் மூல ஆவணங்கள் சரி பார்ப்பு, வாங்குபவர், விற்பவரின் அடையாள ஆவணங்கள் ஆய்வு, அவர்களை புகைப்படம் எடுத்து, கைரேகை பதிவு பெற்று, ஆவணம் ஸ்கேன் செய்வது, அதன் எண்ணை எழுதி சீல் வைப்பது உள்ளிட்ட பணிகளை முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆவணம் உரியவர்களிடம் அளிக்கப்படும்.

பல வசதிகள்

ஆவண பதிவின் ஒவ்வொரு நிலையையும் எஸ்.எம்.எஸ் மூலம் அறிதல், வில்லங்க சான்று, பத்திர நகல் போன்றவற்றை இணைய தளம் மூலம் பெறும் வசதி, முன் பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் வரிசைப்படி ஆவண பதிவு செய்வது என பல்வேறு நவீன வசதிகளை பதிவுத்துறை அளித்து வருகிறது. மேலும், ஆவணங்களுக் கான பதிவு கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆவணங்களுக்கான ‘ஸ்கேன்’

மேற்கண்ட பணிகளை செய்வதற்கு தக்க தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் புதிய தகவல் தொகுப்பாளர்கள் மூலம் சார்பதிவாளர்களிடம் தகுந்த இடங்களில் கையொப்பம் பெற்று ஆவணங்கள் வரிசையாக ஸ்கேன் செய்யப்படும். அவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் அசல் ஆவணங்களை திரும்பப்பெறும் அதிகாரம் பெற்ற நபரின் கைவிரல் ரேகை பெற்று உடனுக்குடன் திரும்ப அளிக்கப்படும். இந்த திட்டம் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் அமலுக்கு வர இருக்கிறது. பதிவுத்துறையில் ஸ்டார் 2.0 திட்டம் தொடங்கப்பட்டு கடந்த டிசம்பர் பிற்பகுதி வரை சென்னையில் உள்ள 63 சார்பதிவாளர் அலுவலகங்களில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 670-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story