கட்டமைப்புகளை அழகு செய்யும் ஜன்னல் வகைகள்


கட்டமைப்புகளை  அழகு  செய்யும்  ஜன்னல் வகைகள்
x
தினத்தந்தி 19 Jan 2019 3:45 AM IST (Updated: 18 Jan 2019 3:53 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கண்களாக ஜன்னல்கள் செயல்படுகின்றன என்ற கருத்தை கட்டிட வடிவமைப்பாளர்கள் கவிதை நயமாக மட்டுமே கணக்கில் கொள்வதில்லை.

வீட்டின் கண்களாக ஜன்னல்கள் செயல்படுகின்றன என்ற கருத்தை கட்டிட வடிவமைப்பாளர்கள் கவிதை நயமாக மட்டுமே கணக்கில் கொள்வதில்லை. அவற்றின் அளவு, அமைப்பு மற்றும் பொருத்தப்படும் திசை ஆகியவற்றை கட்டமைப்பு அமைய உள்ள பகுதியின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறார்கள். 

ஜன்னல்கள் முக்கியத்துவம்

கட்டிடத்தை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அறையின் பர்னிச்சர்களை எங்கே வைப்பது என்று நிர்ணயம் செய்வது மற்றும் அறைகளுக்குள் நுழையும் ஒளி அளவை நிர்ணயம் செய்வதிலும் ஜன்னல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டின் பாதுகாப்பு, குடியிருப்பவர்களின் தனிப்பட்ட சூழல் ஆகிய நிலைகள் ஜன்னல்களை கச்சிதமாக அமைப்பதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.

வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையும் வெவ்வேறு தேவைகளை கொண்டது என்ற நிலையில் அறை எந்த உபயோகம் அல்லது யாருக்கானது என்பதை பொறுத்து அவற்றின் வடிவமைப்பை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, கட்டிடத்தில் ஒளி நுழையும் திசை, வெளிப்புற தோற்றம், குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு எட்டாத உயரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டும் ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் உள்ள முக்கியமான சில வகைகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

‘ஆவ்னிங் விண்டோ’

சுவரில் பொருத்தப்படும் ஜன்னலை இரண்டு பாகங்களாக அமைத்து வெளிப்புறம் தள்ளி திறக்கவோ அல்லது உள்ளிழுத்து மூடவோ ஏற்ற வகையில் இவை அமைக்கப்படுகின்றன. ஜன்னல் சட்டத்தின் மேற்புறத்தில் கீல்கள் அமைத்து, கீழ்ப்புற அமைப்பை மட்டும் தள்ளி வெளிப்புறமாக திறக்கப்படுவதால் ஜன நடமாட்டம் உள்ள பகுதிகளின் கீழ்த்தள கட்டிடங்களில் இவற்றை பயன்படுத்துவது சிரமம்.

‘சிங்கிள் அல்லது டபுள் ஹங்க் விண்டோ’

இவ்வகை ஜன்னல் அமைப்புகள் மேலே அல்லது கீழே உள்ள ஒரு பாகம் மட்டும் தனித்து உள்புறமாக திறக்கப்படும் வகையில் அமைக்கப்படுகின்றன. ஜன்னல் ஒரே திறப்பு கொண்டதாக இருந்தால் ‘சிங்கிள் ஹங்க்’ என்றும் இரு பிரிவாக அமைந்து அவற்றை தனித்தனியாக திறக்கும்படி இருந்தால் ‘டபுள் ஹங்க்’ என்றும் சொல்லப்படும். சமையலறை மற்றும் பூஜையறை ஆகிய பகுதிகளுக்கு இவ்வகை ஜன்னல்கள் அழகாக இருக்கும்.

‘பிக்சர் விண்டோ’

இவ்வகை ஜன்னல்களை திறந்து வைக்க இயலாதவாறு சுவருடன் பொருத்தப்பட்டிருக்கும். ஜன்னல் திரைகள் இல்லாத நிலையில் வெளிச்சம் அதிகமாக அறைக்குள் நுழைய ஏற்றதாகவும், வெளிப்புற காட்சிகளை காணும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். சுற்றுப்புற அழகை ரசிக்க வாய்ப்புள்ள அறைகளில் இவ்வகை ஜன்னல்களை அமைத்து இயற்கையை ரசிக்கலாம்.

‘சைடு ஸ்லைடு’ விண்டோ

ஜன்னல் ‘பீடிங்’ அமைப்பான தண்டவாளத்தின் பக்கவாட்டில் நகர்த்தும் வகையில் அமைந்தவை இந்த ஜன்னல்கள். இடத்தை அடைத்துக்கொள்ளாமல் பயன்படுத்த ஏற்ற வகையாக இருப்பதால் இன்றைய அடுக்கு மாடிகளில் பரவலான உபயோகத்தில் உள்ளது. தேவையான அளவுக்கு காற்று அல்லது வெளிச்சம் வரும்படி இவற்றை திறந்து வைத்துக்கொள்ள இயலும். 

‘பே விண்டோ’

அறைகளின் உள்புறத்தில் கூடுதலாக இடம் கிடைக்கும் வகையில் இவ்வகை ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது சுவரிலிருந்து வெளிப்புறமாக நீண்டுள்ளவாறு, வட்டம், அறுகோணம், சதுரம் ஆகிய வடிவங்கள் கொண்டதாக அமைக்கப்படுகின்றன. ஜன்னல் கதவுகள் ஸ்லைடிங் அல்லது ஹங்க் ஆகிய அமைப்புகளில் திறக்கப்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம்.

‘கேஸ்மெண்ட் விண்டோ’

அகலமாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஜன்னல் கதவுகள் கொண்டு பக்கவாட்டில் கீல்கள் பொருத்தி திறக்கப்படும் வழக்கமான ஜன்னல் இதுவாகும். ஒளி ஊடுருவும் கெட்டியான கண்ணாடி பேனல்கள் மூலம் வெளிச்சம் எளிதாக அறைக்குள் நுழையும். அதிக வெளிச்சம் தேவைப்படும் வீட்டின் அறைகளுக்கு இவ்வகை ஜன்னல் அமைப்பு பொருத்தமாக இருக்கும். வெளிப்புறம் திறக்கும் நிலையில் அமைக்கப்பட்டால் தரைத்தள அறைகளுக்கு இவை பொருத்தமாக இருக்காது.

‘ஜாலவ்ஸி விண்டோ’

ஜன்னலின் அகலத்துக்கேற்ப குறுக்குவாக்கில் அமைந்த பல பிரேம்களில் பொருத்தப்பட்டுள்ள அடுக்குகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள இவ்வகை அமைப்புகளில் வெளிப்புற காற்று சுலபமாக உள்ளே நுழைய ஏதுவாக இருக்கும். ஏ.சி உபயோகத்தை குறைக்கும் விதத்தில் செயல்படும் இவ்வகை வித்தியாசமான ஜன்னல்கள் அதிகப்படியான உபயோகத்தில் இல்லை. 
1 More update

Next Story