வீட்டு மனை எல்லைகளுக்கு வேலி அவசியம்


வீட்டு  மனை  எல்லைகளுக்கு  வேலி  அவசியம்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:00 PM GMT (Updated: 18 Jan 2019 10:33 AM GMT)

நகர்ப்புறங்கள் அல்லது புறநகர் பகுதிகளில் முதலீட்டு நோக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான தேவை என்ற அடிப்படையில் வீட்டு மனைகளை பலரும் வாங்குவது வழக்கம்.

கர்ப்புறங்கள் அல்லது புறநகர் பகுதிகளில் முதலீட்டு நோக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான தேவை என்ற அடிப்படையில் வீட்டு மனைகளை பலரும் வாங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கப்பட்ட மனைப்பிரிவுகளில் பல்வேறு அளவுள்ள வீட்டுமனைகளின் கார்னர் பகுதிகளில் தக்க எல்லை கற்கள் நடப்பட்டிருக்கும்.   

ஆரம்ப நிலை பாதுகாப்பு

அந்த எல்லை கற்கள் எப்போதுமே நிலையாக இருக்கும் என்று சொல்ல இயலாது. பல்வேறு காரணங்களால் அவை இல்லாமல் போகும் நிலையில் மனையின் எல்லைகளை அறிவது சிரமமானதாக மாறிவிடுகிறது. மேலும், அத்தகைய மனைக்கு பக்கத்தில் உள்ள மனையில் நடக்கும் கட்டுமான பணிகளின்போது எல்லைகள் அறிவதில் உள்ள குழப்பங்கள் காரணமாக அருகாமையில் உள்ள மனையிலும் சுவர்கள் அமைக்கப்பட்டு விடலாம். அதன் மூலம் இரு தரப்புகளுக்குள்ளும் ஏற்படும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது. அதற்காக ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் அளிக்கும் சில நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம். 

எல்லை கற்கள்

பெருநகர பகுதி எல்லைக்குட்பட்ட மனை பிரிவுகள் கச்சிதமாக பிரித்து, எல்லை கற்கள் நடப்பட்டு, சுற்று சுவர் அமைத்து ‘கேட்’ பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். ஆனால், பட்ஜெட் அடிப்படையில் தவணை முறையில் விற்கப்படும் மனை பிரிவுகளில் எல்லை கற்கள் நடப்பட்டு தனிப்பட்ட மனையாக காட்டப்பட்டிருக்கும்.

மனையிடத்தை அறிவதில் சிக்கல்

அத்தகைய மனை பிரிவுகளில் நாளடைவில் பராமரிப்பு இல்லாத நிலையில் பல்வேறு காரணங்களால் எல்லை கற்கள் உடைவது அல்லது காணாமல் போகும் நிலை ஏற்படலாம். சில காலம் கழித்து அத்தகைய மனையின் உரிமையாளர் வந்து பார்க்கும்போது இடத்தில் மனை பிரிவு உள்ள பகுதியை கண்டறிவது சிரமமாக இருக்கும்.

எல்லை பாதுகாப்பு

அத்தகைய மனைகளின் நான்கு ‘கார்னர்’ பகுதிகளிலும் செங்கல் அல்லது ‘ஹாலோ பிளாக்’ கொண்டு ஆங்கில ‘எல்’ வடிவத்தில் மூன்றடி சுவர் அமைக்க வேண்டும். அவற்றில் மஞ்சள் வண்ண பெயிண்டு பூசி, கருப்பு நிறத்தில் மனையின் உரிமையாளர் பெயர், மனை எண், மனையின் அளவு மற்றும் பத்திர எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இந்த வழிமுறையை விட மனையை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பை ஏற்படுத்தி விடுவது இன்னும் பாதுகாப்பான முறையாகும். 

இதர ஆக்கிரமிப்புகள்

மேற்கண்ட பாதுகாப்பு முறைகள் இல்லாத மனையிடங்களில் எதிர்பாராதவிதமாக அரை அடி முதல் 1 அடி வரை நீள வாக்கில் எல்லைகள் ஆக்கிரமிக்கப்படும் நிலை ஏற்படலாம். ஒரு சதுர அடி மதிப்பு ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில் அதன் மதிப்பு பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பக்கத்து மனைக்கான கட்டுமான பணிகளின்போது செங்கல், ஜல்லி, மணல் மற்றும் இதர பொருட்களை இன்னொருவர் மனையில் போட்டு வைக்கும் சூழலும் உருவாகலாம்.

மனைக்கான சர்வே

குறிப்பாக, மனைப்பிரிவை பல ஆண்டுகளாக சென்று பார்க்காமல் இருக்கும் நிலையில், எல்லை கற்கள் இல்லாத இடத்தில் உள்ள மனையை கண்டு பிடிப்பது சிரமம். அந்த நிலையில் சர்வேயர் மூலம் புதியதாக நிலத்தை அளந்து எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். மனைப்பிரிவுகளில் ஒருவரது மனைகளை ஒட்டி வீடுகள் அமைக்கப்படலாம் என்று அறியப்படும் பட்சத்தில் கம்பி வேலி அல்லது மேற்குறிப்பிட்ட ‘எல்’ வடிவ சுவர் அமைப்பு அவசியமானது.

Next Story