அழகிய கிராமத்தை விற்பனை செய்யும் வெளிநாடு
நமது ஊரில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதுபோல பல வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தீவுகளை அங்குள்ள தொழிலதிபர்கள் வாங்குவது வழக்கம்.
நமது ஊரில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதுபோல பல வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தீவுகளை அங்குள்ள தொழிலதிபர்கள் வாங்குவது வழக்கம். இதற்கு அத்தகைய மேலை நாடுகளின் பரப்பளவு அதிகமாகவும், மக்கள் தொகை குறைவாகவும் அமைந்திருப்பது முக்கியமான காரணம். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள ‘லேக் வைடாக்கி’
(Lake Waitaki Village) என்ற சிறிய ஊர் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் யாருமே இல்லாத நிலையில் நமது ஊர் மதிப்பில் ரூ. 20 கோடிக்கும் சற்று அதிகமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் அமைந்த அணையின் கட்டுமான பணியாளர்களுக்காக இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் குறைந்து கொண்டே வந்து, கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் யாரும் வசிக்காத பகுதியாக மாறிவிட்டது. நகர வாழ்க்கையை நாடியதாலும், அணையின் கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அதன் இயக்கங்கள் முற்றிலும் எந்திரமயமாக ஆனதாலும் மக்கள் வசிப்பதற்கான அவசியம் இல்லாமல் போனதாக அறியப்பட்டுள்ளது.
‘ஆல்ப்ஸ் டு ஓஸன்’ என்ற சைக்கிளிங் செல்லும் பாதை இந்த கிராமத்தை கடந்து செல்வதால், விடுமுறை தினங்களில் ஓய்வெடுக்க விரும்பும் மக்கள் பலர் இயற்கை எழில் கொண்ட இந்த கிராமத்தை தேர்வு செய்து வருகிறார்கள். மேலும், அதன் அருகில் அமைந்துள்ள குரோவ் என்ற கிராமத்தில் சுமார் 300 பேர் வசிக்கிறார்கள். இந்த கிராமத்திலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் குயின்ஸ்லாந்து மற்றும் டுனிடின் ஆகிய பெருநகரங்கள் உள்ளன.
ஆட்களே இல்லாத அந்த கிராமத்தில் பல்வேறு பர்னிச்சர் பொருட்கள் கொண்ட எட்டு வில்லாக்கள் என்ற தனி வீடுகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மூன்று அறைகள் கொண்டவை. அவற்றுடன் ஒரு உணவகம், தங்கும் விடுதி, அவற்றிற்கான சமையலறை, பில்லியர்ட்ஸ் ஆடுவதற்கான டேபிள், விசாலமான கார் பார்க்கிங் தளங்கள், தண்ணீர் வசதி, மின்சார வசதி போன்ற உள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கிராமத்தின் இயற்கை அமைப்பு மற்றும் அதன் தனிமை ஆகியவற்றின் காரணமாக தற்போது அந்த பகுதியை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். நியூசிலாந்து நாட்டின் பிரபல சினிமா இயக்குனர் தனது புதிய படத்துக்கான ‘செட்’ பணிகளை அங்கே மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.
நியூசிலாந்து நாட்டு சட்டப்படி மேற்கண்ட கிராமத்தை வெளியாட்கள் யாரும் வாங்க இயலாது. அதாவது அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே அங்கே சொத்துக்கள் வாங்க முடியும். வெளிநாட்டவர் யாரும் நியூஸிலாந்தில் இடம் வாங்குவதை தடை செய்யும் சட்ட திருத்தம் இந்த வருடம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஒரு வேளை வெளிநாட்டவர் நிலம் வாங்க அனுமதியளிக்கும் நிலையில் மொத்தமாக நிலத்தின் மதிப்பு அதிகமாகலாம். அதனால் பிறந்து, வளர்ந்த மண்ணில் வசிக்கும் நியூஸிலாந்து மக்கள் தங்கள் நாட்டில் நிலம் வாங்குவது சிரமமானதாகி விடக்கூடும். மக்களின் பிறப்புரிமையை பாதுகாப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டேவிட் பார்க்கர் கூறியுள்ளார். உலக அளவில் மனித வாழ்க்கை மற்றும் மன மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தரப்பட்டியலில் நியூஸிலாந்து முன்னணியில் உள்ளது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story