துரு பிடிக்காத கட்டுமானத்திற்கு ‘எரிமலை பாறை பைபர்’ கம்பிகள்


துரு  பிடிக்காத  கட்டுமானத்திற்கு ‘எரிமலை  பாறை  பைபர்’  கம்பிகள்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:00 PM GMT (Updated: 18 Jan 2019 11:01 AM GMT)

கான்கிரீட் கட்டிட பணிகளில் இரும்பு கம்பிகளை பயன்படுத்துவதன் காரணமாக காலப்போக்கில் அவற்றில் துரு ஏற்பட்டு, கட்டுமான அமைப்புகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கான்கிரீட் கட்டிட பணிகளில் இரும்பு கம்பிகளை பயன்படுத்துவதன் காரணமாக காலப்போக்கில் அவற்றில் துரு ஏற்பட்டு, கட்டுமான அமைப்புகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் புதிய கட்டுமான தொழில் நுட்பமாக எரிமலை பாறை பைபர் கம்பிகள்
(Basalt Rebar) (Basalt Fiber Reinforced Polymer &-BF-RP)
தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. அவை எரிமலையிலிருந்து வெளியாகும் லாவா பாறை துகள்களில் தக்க பைபர் வகைகளை கலந்து தயாரிக்கப்படுகின்றன. துரு போன்றவற்றால் அவை பாதிக்கப்படுவதில்லை என்ற அடிப்படையிலும், வழக்கமான இரும்பு கம்பிகளைவிட இரண்டு மடங்கு வலுவானதாகவும் அறியப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகளில் பலரும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் குறிப்பு

இது குறித்து ஆய்வு செய்த கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எரிமலை பாறை கம்பிகள் உவர் நீர், உவர் மண் ஆகியவற்றுடன் பயன்படுத்தினாலும் எந்த பாதிப்பும் அடைவதில்லை என்று அறிந்துள்ளனர். மேலும், இதுவரை பல கட்டிடங்கள் இவ்வகை கம்பிகள் மூலம் கட்டப்பட்டு உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பயன்படுத்துவது சுலபம்

சாதாரண இரும்பு கம்பிகளைவிட இவ்வகை கம்பிகள் கிட்டத்தட்ட 85 சதவிகிதத்துக்கும் மேல் எடை குறைவானது. 10 மில்லி மீட்டர் சுற்றளவும் 325 அடி நீளமும் கொண்ட இவ்வகை கம்பியை ஒரு நபர் சுலபமாக தூக்கி செல்ல இயலும். மேலும், தேவையான அளவுகளுக்கேற்ப வழக்கமான உபகரணங்கள் மூலம் எளிதாக துண்டித்து பயன்படுத்திக்கொள்ளலாம். கம்பிகள் தவிர பைபர் ஜியோ கிரிட் என்ற வலை, ஹீட் இன்சுலே‌ஷன் போர்டு மற்றும் பைபர் குழாய்கள் ஆகிய பல்வேறு வகைகளில் எரிமலை பாறை பைபர் தயாரிப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரசாயன பாதிப்புகள் இல்லை

அமிலம், துரு, அல்கலி போன்ற ரசாயனங்களால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லாததால், எந்தவிதமான சிறப்பு ரசாயன கோட்டிங்கும் பூச வேண்டிய அவசியம் இல்லை. இரும்பு கம்பிகளைவிட இவ்வகை எரிமலை பாறை கம்பிகள் கூடுதல் இழுவிசை கொண்டவை என்பதும் அறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

கூடுதல் பட்ஜெட் 

கட்டுமான தொழிலில் உயர்ந்தபட்ச தொழில்நுட்ப அம்சங்களுடன் அமைந்துள்ள இவ்வகை தயாரிப்பு, சாதாரண இரும்பு கம்பிகளைவிடவும் சில மடங்கு கூடுதல் விலையில் சந்தையில் கிடைக்கின்றன. வழக்கத்தை விட கூடுதல் பட்ஜெட்டில் இந்த கம்பிகளை அனைவரும் பயன்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால், கட்டிடத்தின் ஆயுட்காலத்தில் அதற்கு செய்யப்படும் பராமரிப்பு செலவுகளை கணக்கில் கொண்டு அதன் விலை வித்தியாசம் பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று மேற்கண்ட எரிமலை பாறை கம்பிகள் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story