ரியல் எஸ்டேட் சந்தையின் முக்கியமான ஆண்டு


ரியல் எஸ்டேட் சந்தையின் முக்கியமான ஆண்டு
x
தினத்தந்தி 25 Jan 2019 10:30 PM GMT (Updated: 25 Jan 2019 12:14 PM GMT)

ரியல் எஸ்டேட் வர்த்தக ரீதியாக கடந்த சில ஆண்டுகள் சிக்கலாக அமைந்த தருணத்தில் ‘ரெரா’ சட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக ரியல் எஸ்டேட் சந்தையில் வெளிப்படைத்தன்மை உருவானது. அதன் மூலம் End Users என்ற வீடு வாங்குபவர்களுக்கான நம்பிக்கை அந்த சட்டம் மூலம் கட்டமைக்கப்பட்டது.

நுகர்வோருக்கான சந்தை

சென்ற 2018–ம் ஆண்டு, கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது ரியல் எஸ்டேட் துறைக்கு சற்று ஆறுதலாக அமைந்தது என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, வீட்டு கடன் அளிக்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை பல தரப்பு வாடிக்கையாளர்களுக்கு அரசு வீட்டு வசதி திட்டங்களின்கீழ் கடன்களை அளித்தன. அதன் அடிப்படையில் வீடு வாங்குபவர்களுக்கு சென்ற ஆண்டு முக்கியமான ஒன்றாக அமைந்தது. கடனுக்கான வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் நுகர்வோருக்கான சந்தையாக 2018–ம் ஆண்டு அமைந்ததை வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். 

‘ரெரா’ இணைய தளம்

‘ரெரா’ இணைய தளம் மூலம் கட்டுமான திட்டங்களின் நிறைவு தேதி, டெவலப்பர் விவரங்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமங்கள், அனுமதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளமுடியும். முந்தைய காலங்களில் மேற்கண்ட தகவல்களை வீடு வாங்குவோர் அறிந்து கொள்வது எளிதான வி‌ஷயமல்ல. ஆனால், இப்போது வீடு வாங்க விரும்புவோர் தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக ‘டி.என். ரெரா’ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வீட்டு விலையில் மாற்றமில்லை

சென்ற 2018–ம் ஆண்டில் வீட்டு விலை நிலவரம் நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களில் பலரும் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனங்களின் புள்ளி விவரங்கள்படி அகமதாபாத், டெல்லி, மும்பை, புனே, பெங்களுரூ, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் சென்ற ஆண்டுக்கான நான்காவது காலாண்டில் வீடுகளின் சராசரி விலையில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அதே சமயம், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதன் அடிப்படையில் விற்பனை அந்த காலகட்டத்தில் 9 சதவிகிதம் உயர்ந்திருப்பதையும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Next Story