ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய இடம் பெற்ற சென்னை மேற்கு மண்டலம்


ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய இடம் பெற்ற சென்னை மேற்கு மண்டலம்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 5:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் நான்கு ரியல் எஸ்டேட் மண்டலங்களான மத்திய சென்னை, மேற்கு சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆகியவற்றில் கடந்த 2013–ம் ஆண்டிலிருந்து மேற்கு சென்னை மண்டலம் சென்னை பெருநகரின் குடியிருப்பு தேவைகளில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் என்ற அளவுக்கு நிறைவேற்றி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேற்கு சென்னை மண்டலத்தில் உள்ள முக்கியமான பகுதிகளின் ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றிய பொதுவான தகவல்களை இங்கே காணலாம்.

திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்

சென்னையிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் வட பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் ஆகும். சென்னைக்கு அருகில் இருப்பதால் தொழில் மற்றும் வியாபார முக்கியத்துவம் கொண்டதாகவும், பல்வேறு கல்வி நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கோயில்கள் என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்கள், 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கி உள்ளன. வில்லிவாக்கம், புழல், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி, கடம்பத்தூர் மற்றும் பள்ளிப்பட்டு, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய பகுதிகள் ரியல் எஸ்டேட் ரீதியாக முதலீடு செய்யப்படும் பகுதிகளாக உள்ளன.



சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் நகர்ப்புறமயமாக்கலின் வளர்ச்சி வீதம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகள் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளன. இந்த முதலீடுகளை வழிமுறைப்படுத்துவதும், நெறிப்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புக்கு எளிதானதாகும் என்ற அடிப்படையில் கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் நகராட்சிகள், சின்ன சேக்காடு, புழல், போரூர் பேரூராட்சிகள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய இடையஞ்சாவடி, புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம் ஆகிய பகுதிகளும் சென்னையுடன் இணையும்.

அம்பத்தூர் பகுதி

தொழில்துறை மையமான அம்பத்தூர் சென்னை ஆவடி சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை அரக்கோணம் அகல ரயில் பாதையில் அம்பத்தூர் ரயில் நிலையம் உள்ளது. சென்னை–திருவள்ளூர் இணைப்பு சாலை மற்றும் சென்னை–பெங்களூர் ஹைவே சாலை ஆகியவை இப்பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு உள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை ஆகும். தமிழகத்தின் பிற பகுதிகளுடன் பேருந்து மற்றும் ரயில் மூலம் அடையக்கூடிய வசதி கொண்டதாக உள்ளது. டன்லப் டயர்ஸ், டி.ஐ சைக்கிள்ஸ், அம்பத்தூர் ஐ.டி பார்க், இந்தியா புல்ஸ் ஐ.டி பார்க், எச்.சி.எல் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்பகுதிக்கு ரியல் எஸ்டேட் ரீதியாக நிலையான சந்தை மதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

வேலம்மாள் வித்யாலயா, ஆர்.எம்.கே பள்ளி, ஸ்ரீசைதன்யா பள்ளி, மகாலட்சுமி கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி அமைப்புகள் அம்பத்தூர் பகுதியை சுற்றிலும் அமைந்திருப்பதால் பலரும் வீடு–மனைகலை வாங்க விரும்புவதாக அறியப்பட்டுள்ளது. அப்போலோ, எம்.எம்.எம் போன்ற சிறப்பு மருத்துவமனைகள் இப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன. முகப்பேர் மேற்கு, அயப்பாக்கம், நொளம்பூர், வானகரம், திருவேற்காடு போன்ற வளர்ச்சி பெற்ற முக்கியமான பகுதிகள் அம்பத்தூருக்கு அருகாமையில் அமைந்திருக்கின்றன. 

சுற்றிலும் சிறிய பெரிய தொழிற்சாலைகள் இருந்தாலும் குடியிருப்பு மனைகள், தனிவீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் என மக்கள் தேவைக்கேற்ப வாங்குவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அத்திப்பட்டு, குப்பம், அயப்பக்கம் பகுதிகளில் மனைப்பிரிவுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகளும் வசதிக்கு ஏற்ப கிடைக்கின்றன.       

ஆவடி பகுதி

சென்னையையொட்டி ரியல் எஸ்டேட் துறை ரீதியாக பலரது கவனத்தை கவர்ந்த புறநகரங்களில் வளர்ந்து வரும் ஆவடி பகுதியும் ஒன்றாகும். இதன் சாலை வசதிகள் நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்து பயணத்தை எளிதாக்குகின்றன. பெரம்பூர், தாம்பரம் போன்ற பகுதிகளை துரிதமாக சென்றடையும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆவடி பகுதியில் வளர்ச்சி பெற்ற சமூக கட்டமைப்புகள் சொத்து வாங்குபவர்களை அதிகமாக ஈர்த்து வருகிறது. குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையிலான ஏரிகள் இப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக விலினிஞ்சியம்பாக்கம் ஏரி, ஆவடி ஏரி, தன்துறை போன்ற ஏரிகள் ஆவடியின் புறநகர் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை நிலையாக தக்க வைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இப்பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் நடைபெற காரணமாக அமைந்திருக்கின்றன. ஆவடி பகுதிகளில் வீட்டு மனைகளை விட அடுக்குமாடி குடியிருப்புகளே அதிகளவில் உள்ளன.

அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகள் சூழ்ந்த முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குவதற்கு அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் அருகில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் ஆவடியின்  இடமதிப்பை உயர்த்தும் காரணிகளாக அமைந்துள்ளன. ஆவடி புறநகர் பகுதியாக இருப்பினும் சென்னையின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. அதற்கு ஆவடியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும், கனரக உற்பத்தி நிலையங்களுமே காரணமாக அமைந்துள்ளன.

சென்னை நகரில் கிடைக்கும் அனைத்து கட்டமைப்பு அம்சங்களும் இப்பகுதிகளில் இருக்கின்றன. கல்லூரி வசதிகள், பள்ளிகள் என அனைத்து கட்டமைப்புகளும் அருகாமையிலேயே இருக்கின்றன. அவடி பகுதிகளில் இருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஏதுவாக பேருந்து வசதிகள் உள்ளன. இதனால் எளிதில் இப்பகுதிகளில் இருந்து சென்னை நகர் பகுதிகளுக்கு பயணிக்க முடியும்.

இப்பகுதிகளில் தொழிற்சாலைகள் இருப்பதால் அடுக்குமாடி வீடுகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆவடிக்கு அருகில் உள்ள பகுதியில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதன் கட்டமைப்பு வசதிகளால் ஆவடி மற்றும் அதனை சூழ்ந்திருக்கும் பகுதிகளில் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் முதலீடு நோக்கத்தில் சொத்து வாங்குபவர்களும் ஆவடி பகுதியை நோக்கி கவனத்தை திருப்பி உள்ளனர்.

ஆவடியை சுற்றிலும் திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, கோவில்பதாகை, திருநின்றவூர், வேப்பம்பட்டு, கருணாகரச்சேரி, அன்னம்பேடு, நெமிலிச்சேரி, பொத்தூர், வெள்ளச்சேரி, வெள்ளானூர், பாண்டேஸ்வரம், பாலவேடு, பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகள் இப்பகுதிகளில் அமைந்துள்ளன.

இங்கு 10–க்கும் மேற்பட்ட இந்திய அரசின் பாதுகாப்பு துறை நிறுவனங்களும், தமிழக அரசின் 5 சிறப்பு காவல் படைகளும் உள்ளன. ஆவடி சென்னையிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் அவருக்கு செல்வதால் சிறப்பான பேருந்து வசதி உள்ள பகுதி ஆகும். இங்கு ஆவடி ரயில் நிலையமும் உள்ளது.  இப்பகுதியில் விமானப்படை நிலையம் ஒன்றும் உள்ளதுடன் தமிழக சிறப்பு காவல் படையில் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில்பதாகை, கன்னிகாபுரம், பருத்திப்பட்டு, கன்னபாளையம், மேல்பாக்கம் பகுதிகளில் புது மனை பிரிவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக, கோவில்பதாகை, கன்னிகாபுரம் பகுதிகளில் மனைகள் முதலீடு நோக்கில் வாங்கலாம். இந்தப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளில், உடனடியாக வீடு கட்டி குடியேறவும், முதலீடு நோக்கிலும் மனைகள் கிடைக்கின்றன. கன்னபாளையம், மேல்பாக்கம் பகுதிகளில் புது மனைப் பிரிவுகளைப் பார்க்க முடிகிறது. முதலீடு நோக்கில் இந்த இடங்களை வாங்கலாம். மேலும், இந்தப் பகுதி மனைப் பிரிவுகளில் அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு இருக்கின்றன. இப்பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி உள்ளது.



சென்னை புறநகர் பகுதிகளில் முதலீட்டு பெருக்கத்துடன் குடியிருப்புகளும் பெருகி வரும் பகுதியாக விளங்குகிறது ஆவடி. சென்னை பகுதிகளில் குடியிருப்புகள் பெருக்கத்துக்கு ஈடாக புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புகள் விரிவாக்கம் அடைந்து கொண்டே இருக்கிறது. முதலீட்டு நோக்கத்திற்காகவும் வீட்டு மனைகள் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு முதலீட்டு நோக்கில் வீடு, மனை வாங்குபவர்களை கவரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது ஆவடி.

திருமுல்லைவாயில்

ஆவடிக்கு முன் உள்ள திருமுல்லைவாயில் மக்கள் விரும்பி மனைகள்–வீடுகள் வாங்கும் பகுதியாக இருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால் மக்கள் இங்கு வசிப்பதை விரும்புவதாக சொல்லப்படுகிறது. சூலாம்பேடு, அன்னனூர், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் வீட்டு மனை திட்டங்கள் நிறைய இருக்கின்றன.

ஆவடி–பூந்தமல்லி சாலை

ஆவடியிலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, சீனிவாசன் நகர் போன்றவை ஹாட் ஸ்பாட்டாக உள்ளன. பெரிய கட்டுமான நிறுவனங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளை அம்பத்தூர், ஆவடி சார்ந்து பணியாற்றுபவர்கள் வாங்குவதுடன், பூந்தமல்லி பகுதிகளிலிருந்தும் பெரும்பாலானோர் வீடுகள் வாங்க விரும்புவதாக அறியப்பட்டுள்ளது. ஆவடியை ஒட்டியுள்ள கோவில்பதாகை தாண்டி வெள்ளனூர், வீராபுரம் பகுதிகளில் மனை பிரிவுகள், ஆவடி நகர் பகுதிகளில் அனைத்து வசதிகளும்கொண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பட்டாபிராம்–திருநின்றவூர்

ஆவடியை அடுத்து வீடு அல்லது மனை வாங்க ஏற்ற இடமாக பட்டாபிராம் முதல் திருநின்றவூர் வரை ரயில் மார்க்கத்துக்கு அருகில் உள்ள இடங்கள் கவனத்துக்கு உரியவை. பட்டாபிராம் பகுதிகளில் இந்து கல்லூரி, நெமிலிச்சேரி, ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி பகுதிகளில் அங்கீகரிக் கப்பட்ட மனை பிரிவுகள் உள்ளன. திருநின்றவூர், பெரியபாளையம் சாலை, பலவேடு பகுதிகளில் புதிய மனை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளான மருத்துவம், கல்வி, போக்குவரத்து மற்றும் இதர வசதிகளின் அடிப்படையில் சுற்றுப்புற மக்கள் இந்த பகுதிகளில் சொந்தமாக மனையோ, வீடோ வாங்குவதாக அறியப்பட்டுள்ளது.

மாநகருக்கு அருகாமையில் மற்றும் தொடர்ச்சியாக அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தற்போதைய சென்னை மாநகராட்சிப் பகுதியினை விரிவாக்குவதற்கு போதுமான வாய்ப்புகளும், அவசியமும் உள்ளன என கருதப்படும் நிலையில், அரசு அமைத்த குழு சென்னையை சுற்றி புதிய மாநகராட்சிகள் அமைப்பது குறித்து விரிவான அறிக்கையை அரசிடம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, புதிய மாநகராட்சிகள் அமைப்பது குறித்து தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்கவும், இந்த ஆலோசனைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப் பட்டுள்ளன.

பூந்தமல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்

மேற்கு சென்னைக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், முகப்பேர், போரூர், பூந்தமல்லி, நந்தம்பாக்கம், நொளம்பூர், குன்றத்தூர் போன்ற பகுதிகளில் ஏராளமான கட்டுமானத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேற்கு சென்னையில் அமைக்கப்பட்ட வெளி வட்ட சாலையின் மூலம் அந்த பகுதி வளர்ச்சி கண்டு வருகிறது. இதில் குறிப்பாக பூந்தமல்லியும் அதன் சுற்றுவட்டார பகுதியும் வீடுகளை வாங்கும் அளவுக்கு ஏற்ற வகையில் விலை இருப்பதால் பூந்தமல்லியும் மக்களின் விருப்ப தேர்வாக மாறிவருகிறது.

பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நகருக்குள் நேரிடையாக வர வேண்டுமென்றால் பூந்தமல்லிதான் நுழைவாயில். சென்னை மேற்குப் பகுதிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்துள்ள பூந்தமல்லி ஏராளமான போக்குவரத்து, தொழிற்சாலை வசதிகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். 

சென்னை புறநகர் பகுதியாக இருந்த பூந்தமல்லி, மேற்கு சென்னையின் நுழை வாசலாக மாறி விட்டது. சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கான இணைப்பு சாலையாக பூந்தமல்லி உள்ளது. இங்கிருந்து போரூர் வழியாக தென் தமிழகத்தை இணைக்கும் ஜி.எஸ்.டி. சாலையை எளிதாக கடந்துவிடலாம். சென்னை விமான நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு எளிதான போக்குவரத்து வசதிகள் உள்ளன. பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு சென்னை ரியல் எஸ்டேட் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெளிவட்ட சாலை (அவுட்டர் ரிங் ரோடு) போன்ற திட்டங்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வெளிவட்ட சாலையால் குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்துவருகிறது.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த துணைக் கோள் நகரமான திருமழிசை பூந்தமல்லிக்கு அருகே உள்ளது. ஏராளமான பள்ளிகள், கல்லூ ரிகள், மருத்துவமனைகள் ஆகியவை இப்பகு தியில் நிறைய இருப்பதுடன் குமணன் சாவடி, கரையான் சாவடி, காட்டுப்பாக்கம், வேலப்பன் சாவடி பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங் களும் உள்ளன. தொழிற்சாலைகள் நிறைந்த இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் போன்ற பகுதிகளை அரை மணி முதல் ஒரு மணி நேரத்தில் பூந்தமல்லியிருந்து அடைந்து விடலாம்.

இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட பூந்தமல்லி பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய வீட்டுக் கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு மேற்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 70 சதவீத கட்டுமான திட்டங்களில், குறிப்பிட்டத்தக்க அளவு பூந்தமல்லியில் செயல்படுத்தப்பட்டு, சுற்றியுள்ள குமணன்சாவடி, கரையான்சாவடி, வேலப்பன்சாவடி போன்ற பகுதிகளும் வளர்ச்சி பெற்றுள்ளன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பூந்தமல்லியில் வீடுகள், மனைகளின் விலை உயரலாம் என்பதால் முதலீடாக வாங்குபவர்களுக்கு பூந்தமல்லி நல்ல தேர்வு என்பது ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Next Story