நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு தர நிர்ணயம் அவசியம்


நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு தர நிர்ணயம் அவசியம்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 6:16 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் மற்றும் மனைகளில் அமைக்கப்பட்ட போர்வெல்களில் கிடைக்கும் தண்ணீரை இன்றைய நிலையில் அப்படியே பயன்படுத்துவது உடல் நலனுக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

நிலத்தடி நீரில் கலந்துள்ள ரசாயனங்களின் அடிப்படையில் கடின நீர் மற்றும் மென்னீர் என்று இரு வகையாக குறிப்பிடப்படுகிறது. பூமியின் அசைவு, பருவநிலை மாற்றம், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ மழையால், குடிநீரின் தரம் மாறுபடுகிறது. நாம் குடிக்கும் தண்ணீரில் கரைந்திருக்கும் உப்பு, வேதியியல் பொருட்களின் அளவை, இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்து உள்ளது. 

கடின நீர்

தண்ணீரில் குறிப்பிட்ட அளவுக்கும் மேல் தாது உப்புகள் (விவீஸீமீக்ஷீணீறீs) இருக்கும் நிலையில் அதனை கடின நீர் என தரம் பிரிக்கப்படுகிறது. அதாவது, அரசால் தர நிர்ணயம் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமான மினரல்கள்  தண்ணீரில் இருந்தால் அது கடினநீர் ஆகும். குறிப்பாக, கால்சியம், மெக்னீசியம் ஆகியவை அதிகமாக கலந்திருந்தால் அவை மற்ற தாது உப்புக்களுடன் சேர்ந்து நீரின் தன்மையை மேலும் கடினமாக மாற்றுகிறது.

மேற்கண்ட நிலையில் அளவுக்கு அதிகமாக நீரில் பிற உப்புகள் சேரும்போது ஆக்சிஜன் அளவு படிப்படியாக குறைந்து, அன்ரோபிக் மற்றும் ஏரோபிக் (Anaerobic And Aerobic) தண்ணீராக நீர் மூலக்கூறுகள் மாறி அமைந்து விடுகின்றன.

அத்துடன் ஆக்சிஜன் அளவும் குறைந்து விடும் நிலையில் அந்த தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம். இ–கோலை மற்றும் கோலிபோம் (E.coli and Coliform) பாக்டீரியாக்கள், பாராசைட் (Perasite) போன்ற நுண்ணியிரிகள் அதிகரித்து விடுவதாலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசடைந்ததாக நிலத்தடி நீர் மாறிவிடுகிறது.

மென்னீர்

குடிநீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் ஏற்ற தண்ணீரை மென்னீர் என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவாக, நல்ல தண்ணீரை அளவிட, பி.பி.எம் (PPM  Parts Per Million) என்ற அலகு பயன்படுகிறது. அதன்படி 15 பி.பி.எம்–மில் இருந்து 60 பி.பி.எம் என்ற அளவு வரை தாது உப்புகள் கலந்துள்ள தண்ணீர் மென்னீர் என்று வரையறை செய்யப்படுகிறது.

மேற்கண்ட கணக்கீட்டை விட அளவு அதிகமாக தாது உப்புகள் கலந்துள்ள தண்ணீரின் நீர் மூலக்கூறுகள் சிதைவடைந்துள்ளதாக சொல்லப்படும். அதன் அடிப்படையில் இயற்கை நீர் மூலக்கூறுகள் இல்லாத தண்ணீராக குறிப்பிடப்படும். சரியான முறையில் வடிகட்டப்பட்ட பின்னரே அதை பயன்படுத்த இயலும். அந்த வகையில் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, மொத்த உப்பு கரைசல், புளூரைடு, இரும்பு, அம்மோனியா, நைட்ரைடு, நைட்ரேட், பாஸ்பேட், எஞ்சியுள்ள குளோரின், காரம், காடித்தன்மை ஆகிய 12 வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மழை நீர்

மழை பெய்யும் பொழுது இயற்கை வளம் மிக்க காடுகள், பாறைகள், மலைகள், மரங்கள், மூலிகைச் செடிகொடிகள் போன்றவற்றின் மீது தண்ணீர் விழுந்து ஓடுகிறது. அதன் மூலம் மழை நீர் நல்ல தண்ணீரின் தன்மை அடைகிறது. ஆனால், தற்போதைய சுற்றுப்புற மாசு காரணமாக கிடைக்கும் தண்ணீரானது பயன்பாட்டிற்கு ஏற்றதாக சுத்தமாக கிடைப்பதில்லை. 

நகரங்களில் பெருகி வரும் வாகனப்புகை மாசு, தொழிற்சாலை ரசாயன கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்றைய சுற்றுச்சூழல் மாசடைந்து விட்டது. பசுமை சூழல் முறைந்து விட்டதால் சுத்தமான நீர் கிடைப்பதும் கடினமான ஒன்றாகி விட்டது.

தர நிர்ணயம்

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (BIS  Bearau of Indian Standards) மற்றும், உலக நல்வாழ்வு அமைப்பு (WHO) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள், பண்ணைகள் போன்றவற்றிற்கு தனிப்பட்ட முறையில் தண்ணீரின் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடிநீருக்கு 500 பி.பி.எம் என்ற அளவு வரையறையாக அமைந்துள்ளது. அதாவது, இந்த அளவை விட குறைவான ரசாயனங்கள் கலந்துள்ள தண்ணீரை பயன்படுத்துவதே உடல் நலனுக்கு ஏற்றதாகும். அதன் அடிப்படையில் சென்னை போன்ற பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீரை தக்க முறையில் வடிகட்டப்பட்டு பயன்படுத்துவதை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Next Story