வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் கட்டமைப்பு முறைகள்


வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் கட்டமைப்பு முறைகள்
x
தினத்தந்தி 26 Jan 2019 5:00 AM IST (Updated: 25 Jan 2019 6:54 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய நிலையில் வீடுகளின் கட்டமைப்பில் பிரபலமாக உள்ள வாஸ்து சாஸ்திரம், மக்களுடைய நல்வாழ்வுக்காகவும், அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் செயல்படுவதாக வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கட்டுமான அமைப்புகளை தக்க விதங்களில் அமைத்துக்கொள்வதன் மூலம் மனிதன் இயற்கையுடனும், பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைவாக வாழ வாஸ்து உதவுகிறது. கட்டிடங்கள் வெறும் கல்லாலும், மரத்தாலும், இரும்பாலும், கான்கிரீட்டாலும் அமைக்கப்பட்டதாக இருந்தாலும் அவற்றிற்கு நுட்பமான உயிர் தன்மைகள் இருப்பதாகவும் வாஸ்து சாஸ்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

வாஸ்து புரு‌ஷ மண்டலம்

கட்டமைப்புகளுக்கான நிலம், அவற்றின் அமைவிடம், நோக்கும் திசை மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் அமையும் இடம் ஆகியவற்றை தீர்மானிப்பதில் வாஸ்து புரு‌ஷ மண்டலம் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாக பிரித்து அமைக்கப்பட்ட வரி வடிவம் இந்த மண்டலமாகும். அவற்றில் உள்ள கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். மண்டலத்தின் மைய பகுதிக்கு பிரம்மன் அதிபதி என்ற நிலையில் 81 கட்டங்களை கொண்ட மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்கள் அவருக்கு உரியதாகும். அதனால் அப்பகுதி பிரம்மஸ்தானம் எனப்படும்.

அஷ்ட திக்கு பாலகர்கள்

எட்டு திசைகளுக்கும் அதிபதிகளான தேவர்கள் அஷ்ட திக்கு பாலகர்கள் எனப்படுகின்றார்கள். அவற்றில் வடக்கு திசைக்கு குபேரனும், கிழக்கு திசைக்கு சூரியனும், தெற்கு திசைக்கு எமனும், மேற்கு திசைக்கு வருணனும் அதிபதிகள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசானன், அக்னி, பித்ருக்கள் ஆகியோர் அதிபதிகள் ஆவார்கள்.

பூமி பூஜை

பூமி பூஜை என்ற வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்பது கட்டமைப்பு அமைவதற்கு முன்னர் மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வது என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்துபடி நிலம் என்பது உயிர்ப்புள்ள ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மனையிலும் உள்ள உயிர்ப்பு சக்தியை வாஸ்து புரு‌ஷன் என்று வாஸ்து சாஸ்திரம் உருவகம் செய்கிறது. குறியீட்டு வடிவில் அது அமையும்போது வடகிழக்கில் தலை, தென்மேற்கில் கால்கள் கொண்ட அமைப்பிலான வாஸ்து புரு‌ஷ மண்டலத்தை குப்புற உள்ள உள்ள ஒரு ஆண் உருவமாக வாஸ்து புரு‌ஷன் அடையாளம் காணப்படுகிறது.

வாழ்வியல் பிரதிபலிப்பு

நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திரம் வாழ்வியலின் பல்வேறு அம்சங்களின் பிரதிபலிப்புகளை கட்டுமான அமைப்புகளின் வழியாக தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில் கட்டுமானங்கள் பற்றி விரிவாக விளக்கும் பல நூல்கள் அந்த காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. 

வாஸ்து நூல்கள்

வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதை, மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம், மானசாரர் என்பவரது மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம், விஸ்வகர்ம பிரகாசம், சமாரங்கன சூத்ரதாரா, காஷ்யப சில்ப சாஸ்திரா, பிரமாண மஞ்சரி போன்ற பல நூல்கள் வாஸ்து சாஸ்திரம் பற்றி குறிப்பிடுகின்றன. 20–ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான ஸ்ரீலலிதா நவரத்னம் என்ற நூல் 32 வகை சிற்ப நூல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் பல நூல்கள் இன்று இல்லை. அவற்றில் இன்றும் கடைபிடிக்கப்படும் மானசாரம், மயமதம் போன்றவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தென்னிந்திய நுல்களாகும்.

Next Story