சமையலறையை புதியதாக மாற்றலாம்..


சமையலறையை புதியதாக மாற்றலாம்..
x
தினத்தந்தி 26 Jan 2019 12:00 AM GMT (Updated: 25 Jan 2019 3:31 PM GMT)

இல்லத்தரசிகள் தங்கள் வீட்டில் ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை செலவிடும் இடம் சமையலறை.

இல்லத்தரசிகள் மனதிற்கு ஏற்ற விதத்தில் அங்குள்ள பொருட்கள் மற்றும் அதன் அமைப்புகள் ஆகியவை இருக்கும் பட்சத்தில் உற்சாகமாக செயல்பட இயலும் என்பது உள் கட்டமைப்பு வல்லுனர்கள் கருத்தாகும். அதற்கு ஏற்ப சமையலறையில் எளிதாக மேற்கொள்ளும் விதமாக உள் கட்டமைப்புகளில் மேற்கொள்ளக்கூடிய எளிய மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம். இவை அனைத்தையும் ஒரே தடவையில் செய்யாமல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒவ்வொன்றாகவும் செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வண்ணங்கள்

பல வீடுகளில் சமையலறையின் பெயிண்டிங் என்பது போதுமான பராமரிப்புகள் இல்லாததாகவே உள்ளது என்பது பலரது கருத்தாகும். சமையலறைக்கு ஏற்ற தடாலடியான மாற்றம் என்பது அதன் உள்புற வண்ணத்தை மாற்றுவதாகும். அவ்வாறு வண்ணங்களை தேர்வு செய்யும்போது அடர்த்தியான அல்லது வெளிர் நிறமாக இல்லாமல் இடை நிலை வண்ணங்களை தேர்வு செய்து பூசலாம். அதன் தரைத்தளம், கேபினட்டுகள், சுவர்கள் போன்றவற்றை சுவருக்கு அடிக்கப்பட்ட வண்ணத்துக்கு நேரெதிர் கலர் மூலம் அழகாக அமைத்துக்கொள்ளலாம். 

சமையல் ‘பிளாட்பார்ம்’

வீடு கட்டியபோது போடப்பட்ட ‘கிச்சன் பிளாட்பார்ம்’ அல்லது ‘கவுன்டர்டாப்’ பல காலமாக கண்களுக்கு பழகியிருக்கும். ஆண்டுக்கணக்கான உபயோகம் காரணமாக அவை மங்கலாகவும்ம் கீறல்கள் கொண்டதாகவும் மாறியிருக்கலாம். அந்த நிலையில் புதியதாக கிரானைட், மார்பிள் அல்லது மற்ற நேச்சுரல் ஸ்டோன் வகையை தேர்வு செய்து கிச்சன் டாப்–ஆக பொருத்திக்கொள்ளலாம். அதற்கேற்ப சந்தையில் நிறைய வகைகளில் விதவிதமான வகைகள் கிடைக்கின்றன.

‘கேபினட்’ கைப்பிடிகள்

சமையலறை கேபினட்டுகளின் கைப்பிடிகள், டிராயர்களை இழுத்து திறக்க உதவும் கைப்பிடிகள், ஆங்காங்கே சுவர்களில் பொருட்களை மாட்ட பயன்படும் ‘ஹேங்கிங்’ ஆகியவற்றை புதியதாக பல வண்ணங்கள் கொண்டதாக மாற்றி வித்தியாசமான அழகை தரலாம்.

தலைகீழ் மாற்றம்

சற்றே வித்தியாசமான முறையில் கேபினட்டுகள் கொண்ட சமையலறையின் கதவுகளை அகற்றி விட்டு ‘ஒப்பன் ஷெல்ப்’ அமைப்பாக மாற்றிக்கொள்ளலாம். அதே சமயம் ‘ஒப்பன் ஷெல்ப்’ அமைப்பாக இருந்தால் அவற்றின் அளவுகளுக்கேற்ப தக்க கதவுகளை பொருத்தி கேபினட்டாக மாற்றிக்கொள்ளலாம்.

தரைத்தளம் சீரமைப்பு

தரைத்தளத்தை தற்போதைய ‘டிரெண்டுக்கு’ ஏற்ப மாற்றுவது நிச்சயம் சமையலறையின் தோற்றத்தை வேறுபடுத்தி காட்டும். பழைய டைல்ஸ் அல்லது மொசைக் வகையிலான தரையை லேமினேட் புளோர் அல்லது இதர சிம்பிளான புளோரிங் முறையை பயன்படுத்தி அழகாக மாற்றிக் கொள்ளலாம். 

Next Story