அரசு வீட்டு வசதி திட்ட குடியிருப்புகளை அறிய உதவும் செயற்கைகோள் தகவல்கள்
அனைவருக்கும் வீடு என்ற அரசின் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் குடியிருப்புகளின் வளர்ச்சி நிலையை செயற்கைகோள் புகைப்படம் மூலம் கண்டறிய இயலும். அதற்காக ‘புவன்’ என்ற இணையதள வடிவமைப்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கி அளித்துள்ளது.
37 லட்சம் வீடுகள்
தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின்கீழ் மானியம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த திட்டத்தில் இந்திய அளவில் 2020–ம் ஆண்டுக்குள் 80 லட்சம் வீடுகளை கட்ட முடிவெடுக்கப்பட்டு இதுவரை 12 லட்சம் வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 லட்சம் வீடுகள் பணி முடியும் நிலையில் உள்ளன. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி என்ற நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ–வீட்டு வசதி அமைச்சகம்
இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் கட்டுமான விவரங்களை அறிந்து கொள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அதாவது, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ‘புவன்’ என்ற செயலி மூலம் வீடுகள் அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் தற்போதைய நிலை ஆகியவற்றை விதிமுறைகளுக்கு உட்பட்டு முப்பரிமாண படங்களாக துல்லியமாக காண இயலும்.
ஐந்து நிலைகள்
இஸ்ரோவின் ‘புவன்’ இணைய பக்கத்தில் சம்பந்தப்பட்ட மாநிலம், அதன் மாவட்டம், அதில் உள்ள ஊர் என்ற தகவல்களை உள்ளீடாக அளித்து குறிப்பிட்ட பகுதியில் வீட்டு வசதி திட்டத்தில் அமைக்கப்படும் வீடுகளின் நிலவரத்தை அறிந்து கொள்ள இயலும். அவை பின்வரும் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1) கட்டுமான பணிகள் தொடங்கவில்லை (மஞ்சள் குறியீடு),
2) அஸ்திவார பணிகள் (கருப்பு குறியீடு),
3) சுவர் மட்டம் (பச்சை குறியீடு),
4) கூரை மட்டம் (சிவப்பு குறியீடு),
5) பணி நிறைவு (வெள்ளை குறியீடு)
என்ற வகைகளில் பணிகளின் தரநிலை பற்றிய தகவல்கள் செயற்கைகோள் படங்களாக பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
36 லட்சம் வீடுகள் கண்காணிப்பு
அவை தவிரவும், அங்கீகாரமற்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளையும் தக்க சிவப்பு குறியீடுகளாக செயற்கைகோள் படத்தின் மூலம் அறிய இயலும் என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட பகுதியை விதிமுறைகளுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட 25 மீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைகோள் படமாக அல்லது வரைபடமாக பார்க்க முடியும். மேற்கண்ட முறையில் 29 மாநிலங்களில் உள்ள 36 லட்சம் வீடுகள் மேற்குறிப்பிட்ட 5 வகையான கட்டுமான நிலைகளில் கவனித்து அறியப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் செயலி
‘புவன்’ செயற்கைகோள் படங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சாலைகள், மலைகள், நதிகள், உயரமான கட்டமைப்புகள், ஊர்கள் மற்றும் நகர்ப்புற விரிவாக்கங்கள் மற்றும் வானிலை நிலவரம் ஆகிய பல்வேறு நிலைகளில் ஸ்மார்ட்போன் செயலி மூலமாகவும் தகவல்களை அறிந்து கொள்ள இயலும். அதற்கான இணையதள முகவரி வருமாறு: http://bhuvannoeda.nrsc.gov.in/governance/housing_for_all
Related Tags :
Next Story