குளியலறைகளுக்கு அவசியமான கூடுதல் வசதிகள்
இன்றைய காலகட்ட நகர்ப்புற குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறை காரணமாக குளியலறை அமைப்பிலேயே கழிவறையும் இணைத்து கட்டப்படுகிறது.
சில காலங்களுக்கு முன்னர் குளியலறையும், கழிவறையும் தனித்தனி அமைப்புகளாக கட்டப்படுவது வழக்கத்தில் இருந்தது. நாகரிக மாற்றம் காரணமாக கழிவறையும், குளியலறையும் ஒரே பகுதியில் என்பதை காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு இடப்பற்றாக்குறையும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.
குறிப்பாக வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் வரவேற்பு அறைக்கு அடுத்து அதிகமான பயன்படுத்துவது குளியலறை என்ற அடிப்படையில் அவற்றில் சில முக்கியமான அமைப்புகளை மேற்கொள்வது பல விதங்களிலும் உகந்தது. அதன் அடிப்படையில் அமைந்த சில குறிப்புகளை இங்கே காணலாம்.
* குளியலறை என்பது தொடர்ச்சியாக ஈரப்பதம் இருக்கக்கூடிய இடம் என்பதால் தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் வழுக்காத ‘ஆன்டி ஸ்கிட்’ வகையாக இருப்பது முக்கியம். அவ்வாறு பதிக்கப்பட்டுள்ள ஓடுகளில் கறை படிந்தால் உடனடியாக அதை அகற்றுவதும் முக்கியம்.
* பெரியவர்கள் இருக்கும் வீடுகளின் குளியலறையில் தண்ணீர் தேங்காத அளவுக்கு தரைத்தள அமைப்பு இருக்கவேண்டும். குளியலறையில் ஈரம் இருந்தால் உடனடியாக ‘மாப்’ மூலம் சுத்தப்படுத்துவது நல்லது.
* குளியலறைக்கு வெளியே போடப்பட்டுள்ள ‘மேட்‘ என்ற மிதியடிகள் ஈரத்தை நன்கு உறிஞ்சிக் கொள்வதாகவும், தரையில் நல்ல பிடிப்பு கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
* குளியலறைகளுக்கு மர அலமாரிகள் எப்போதும் ஒத்து வராது. மரப்பலகைகளை ஈரப்பதம் மிக எளிதாக பாதித்து அதனை காலப்போக்கில் அரித்து விடும் என்பதால் பி.வி.சி அல்லது யு.பி.வி.சி வகை அலமாரிகளை பொருத்திக்கொள்ளலாம்.
* சில வீடுகளில் குளியலறையில் மேக்-அப் செய்யும் வசதிகளை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த நிலையில் அங்கே கச்சிதமான ‘லைட் செட்டிங்’ என்பது முக்கியம். காரணம், வெளிப்புற வெளிச்சம் மற்றும் குளியலறை வெளிச்சம் ஆகிய இரண்டுக்கும் உள்ள வெளிச்ச வித்தியாசம் ஒரே மாதிரியாக இருக்காது.
* இன்றைய வில்லா வகை வீடுகளில் உள்ள நவீன குளியலறைகளில் குளிக்கும் பகுதி மற்றும் கழிவறை ஆகியவற்றுக்கு இடையே கண்ணாடி கதவுகள் இருக்கும். அதற்கிடையே திரை (Shower curtain) அமைப்பு இருப்பது முக்கியம்.
* வயதானவர்களுக்கு ஏற்ற விதத்தில் குளியலறை சுவர்களில் சில இடங்களில் கைப்பிடிகள் (Hand railings) பொருத்துவது நல்லது. கைகளில் ஈரத்துடன் அல்லது சோப்பு நுரை நிரம்பிய கைகளாலும் அவற்றை பிடித்து கொள்ள வசதியாக இருக்கும்.
* ‘பாத் டப்’ என்ற குளியலறை தொட்டிகள் நடுத்தர வீடுகளில் பெரும்பாலும் இருப்பதில்லை என்றாலும், வருங்காலத் தலைமுறைக்கு தேவைப்படலாம் என்ற நிலையில் கட்டுமான பணிகளின்போது அதற்கான இடத்தை முடிவு செய்து கொள்வது அவசியமானது.
* குளியலறையில் போதிய காற்று வசதி மற்றும் தேவையான வெளிச்சம் இருக்கும்படி அமைப்பது நல்லது. பகலில்கூட மின் விளக்குகளை பயன்படுத்துவது போன்ற நிலை இல்லாமல் அதை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பொறியாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story