பசுமை வீடுகளை உருவாக்கும் கான்கிரீட் கலவை


பசுமை வீடுகளை உருவாக்கும் கான்கிரீட் கலவை
x
தினத்தந்தி 2 Feb 2019 10:57 AM GMT (Updated: 2 Feb 2019 10:57 AM GMT)

இன்றைய கட்டுமான உலகில் சிமெண்டு பயன்பாடு மூலம் வெளியேற்றப்படும் கார்பன் வகை வாயுக்கள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து உலக அளவில் பரவலாக உள்ளது.

‘செல்லுலர் கான்கிரீட்’

மேற்கண்ட நிலையில் ‘செல்லுலர்’ கான்கிரீட் வெப்பம், நெருப்பு ஆகியவற்றை தடுப்பதில் சிறப்பாக செயல்படுவது ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. பொதுவாக, கட்டுமான பொருட்களில் கார்பன் வெளியேற்றும் தன்மை கொண்ட தயாரிப்புகளை தவிர்த்து, மாற்று தொழில்நுட்ப பொருட்களை பயன்படுத்துமாறு சூழலியல் வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, பசுமை கட்டிட தொழில் நுட்பத்தில் கார்பன் வாயுக்களை வெளியேற்றும் பொருட்கள் பயன்பாடு பெருமளவு தவிர்க்கப்படுவதை அவர் கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

கட்டிடம் அமையும் பகுதிகளில் கிடைக்கும், மரம், கல், மண் சுண்ணாம்பு போன்ற கட்டுமான பொருள்களை பயன்படுத்தி முன்னோர்கள் கட்டிய வீடுகள் பசுமை வீடுகளுக்கான முன் உதாரணம் ஆகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

உலகம் முழுவதும் சிமெண்டு பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாற்று பொருட்களை கண்டறிந்து, தயாரிக்கும் வழிமுறைகள் தீவிரமாக ஆராயும் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு புதிய கட்டுமான பொருட்களை கண்டுபிடித்துள்ளன. அதில் புதிய முன்னேற்றமாக பசுமை கலவை கான்கிரீட் எனப்படும் ‘கிரீன்மிக்ஸ் கான்கிரீட்’ தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் கான்கிரீட் இதுவாகும்.

மாற்று பொருள்கள்

இந்த முறையில் கான்கிரீட் கலவையில் வழக்கமாக சேர்க்கப்படும் சிமெண்டு அளவை குறைத்து, அதற்கு பதிலாக, எரிசாம்பல், தூள் செய்யப்பட்ட பழைய கட்டிட கழிவுகள், அலுமினியம், பைபர்கள் ஆகியவற்றை சிமெண்ட்டுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. சிலவகை நார் இழைகளையும், ஒட்டும் தன்மையுள்ள போஸலோன், பிளை ஆஷ் ஆகியவற்றை கலந்து ‘செல்லுலர் கான்கிரீட்’ தயாரிக்கப்படுகிறது. ஜல்லி, மணல் ஆகியவற்றின் உபயோகம் பெருமளவுக்கு தவிர்க்கப்படுகிறது.

உலக நாடுகளில் விழிப்புணர்வு

சிமெண்டின் நெகிழ்வு தன்மை மற்றும் உறுதி ஆகிய அம்சங்களை இந்த மாற்று பொருட்களும் கொண்டதாக அமைந்து கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கார்பன் அளவை வெகுவாக கட்டுப்படுத்தி, அதன் ஆயுளையும் அதிகரிக்க செய்கின்றன. குறிப்பிட்ட பகுதியின் சுற்று சூழலை அமைப்பை பாதிக்காமல் கட்டிடங்களை அமைப்பதே பசுமை வீடுகளின் திட்டம் என்ற நிலையில் உலக நாடுகளில் இவ்வகை கட்டிடங்களை அமைப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாக உருவாகி வருகிறது.

சோதனை முயற்சிகள்

மேற்கண்ட பொருட்களை ஒன்றாகவும், தனித்தனியாகவும் சிமெண்ட்டுக்கு மாற்றாக பயன்படுத்த இயலும் என்பது ஆய்வு நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது பகுதியிலும் சில ரெடிமிக்ஸ் கான்கிரீட் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் சோதனை முயற்சிகளை தொடங்கியுள்ளன என்பது அறியப்பட்டுள்ளது.

Next Story