இணைய தளத்தில் நிலத்தின் வகையை காட்டும் வரைபடம்


இணைய தளத்தில் நிலத்தின் வகையை காட்டும் வரைபடம்
x
தினத்தந்தி 2 Feb 2019 11:01 AM GMT (Updated: 2 Feb 2019 11:01 AM GMT)

சென்னை பெருநகரின் இரண்டாவது முழுமை திட்டம் (மாஸ்டர் பிளான்) மூலம் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலப்பரப்பு எவ்வகையை சார்ந்தது என்பதை சி.எம்.டி.ஏ இணையதளம் (Land Use Information System) மூலம் அறிந்துகொள்ள இயலும்.

ஒரு மாவட்டமானது குடியிருப்பு பகுதி, தொழில் பகுதி, வணிக பகுதி, நீர் நிலை பகுதி என பிரித்து வகைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அதன் உள் கட்டமைப்பு பணிகள் மற்றும் குடியிருப்பு திட்டங்களுக்கு அரசால் அனுமதி அளிக்கப்படுகிறது.

இரண்டாவது மாஸ்டர் பிளான்

அதன்படி சென்னை பெருநகர பகுதியில், 2026-ம் ஆண்டு வரை ஏற்படக்கூடிய வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கருத்தில் கொண்டு இரண்டாவது முழுமை திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி உறைவிடம், உள்கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, ஒருங்கிணைந்த கழிவு நீர் வடிகால் அமைப்பு, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், நில பயன்பாடு குறித்த திட்டமிடல் ஆகியவற்றின் நிலை மற்றும் 2026-ம் ஆண்டில் அவற்றின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன.

வழிமுறைகள் உருவாக்கம்

மேற்கண்ட பரிந்துரைகளை செயல்படுத்தும் வழிமுறைகளை உருவாக்க பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு குழு, நில பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் குழு, போக்குவரத்து குழு, உறைவிடம் மற்றும் உள் கட்டமைப்பு குழு, திட்ட முதலீடு மற்றும் ஆளுமை குழு என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

நிலப்பகுதி வகைப்பாடு

சென்னை பெருநகர பகுதியானது மொத்த நிலப்பகுதி, ஆதார குடியிருப்புகள், வணிகம், தொழில், நீர் நிலை பகுதிகள், நீர் பிடிப்பு பகுதிகள் என பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீடுகள், அடுக்குமாடிகள் மற்றும் வணிகம் சார்ந்த கட்டமைப்புகளுக்கான புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

வரைபடங்களின் உதவி

சென்னையின் நில அமைப்பு மற்றும் வகைகள் தொகுக்கப்பட்டு, தேசிய தகவல் மைய உதவியுடன் நிலங்களின் தன்மைகள் குறிப்பிடப்பட்டு சி.எம்.டி.ஏ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வரைபடங்களை இணையதளம் மூலம் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் மூலம் தங்கள் பகுதி நிலம் அல்லது வாங்க விரும்பும் நிலம் எந்த வகைப்பாட்டில் பிரிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

மேலும், புதிதாக வீடு அல்லது மனை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள நில வகை மற்றும் நீர் நிலைகள் ஆகியன பற்றி அறிந்து அதற்கேற்ப வாங்குவது பற்றி முடிவெடுக்க இயலும். மேலும், விவரங்கள் அறிய http://www.cmdamaps.tn.nic.in/ என்ற இணைய தளத்தை அணுகலாம்.


Next Story