உயரமான கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள்
கட்டிடங்களுக்கான பணிகள் செய்யப்படும்போதும், கட்டப்பட்டு அவற்றை பராமரிக்கும்போதும் அதற்கென உள்ள தனிப்பட்ட எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
உயரமான கட்டிடங்களில் ஆட்கள் பணி புரியும் வகையில் அமைந்த அத்தகைய எந்திரங்கள் அணுகு கருவிகள் (Access Equipments) என்று கட்டுமானத்துறையில் குறிப்பிடப்படுகிறது. கட்டிட பராமரிப்பு வேலைகளில் உயரத்தில் பணிபுரிதல், உயரமான இடங்களுக்கு பொருட்களை எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை இந்த எந்திரங்கள் மூலம் எளிதாக செய்ய முடியும்.
பல்வேறு வகைகள்
மேற்கண்ட எந்திரங்களில் பெர்சனல் லிப்ட், சிஸர் லிப்ட், பூம் லிப்ட், டெலஸ்கோப்பிங் லிப்ட் போன்ற அணுகு கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இந்த வரிசையில் நகர்த்தக்கூடிய அணுகு பணி மேடை (Mobile Access Equipments) அமைப்புகளும் இருக்கின்றன. மேலும், முற்றிலும் அலுமினியத்தால் செய்யப்பட்ட ‘மொபைல் ஆக்சஸ் பிளாட்பார்ம்’ மற்றும் ‘கஸ்டம் டிசைன் ஆக்சஸ் பிளாட்பார்ம்’ ஆகிய எந்திரங்களும் இந்த வரிசையில் உள்ளன.
வாடகைக்கு கிடைக்கும்
இரண்டு மாடி கட்டிடம் முதல் பல அடுக்குமாடி கட்டிடங்களிலும் மேற்கொள்ளக்கூடிய பராமரிப்பு பணிகளில் மேற்கண்ட அணுகு இயந்திரங்கள் மிகவும் அவசியமானதாக இருக்கும். அந்த எந்திரங்களை அனைவருமே சொந்தமாக வாங்கி பயன்படுத்துவது சாத்தியமில்லை என்ற நிலையில் பல தனியார் நிறுவனங்கள் அவற்றை குறிப்பிட்ட கால அளவுக்கு உட்பட்டு வாடகைக்கு அளிக்கின்றன.
பராமரிப்பு பணிகள்
குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெறும்போதும், அவை முடிந்த பிறகும் மேற்கண்ட இயந்திரங்கள் மற்றும் பணிமேடைகளை பயன்படுத்தி தேவையான வேலைகளை செய்து கொள்ளலாம். மேலும், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் சுவர்கள், தரைகள், கூரைகள், ஜன்னல்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து வகையான பராமரிப்பு பணிகளையும் செய்ய இயலும்.
தக்க பயிற்சிகள்
மேற்கண்ட எந்திரங்கள் மூலம் உயரத்தில் பணியாற்றுதல், பாதுகாப்பாக செயல்படுதல், அணுகு எந்திரங்களை இயக்குதல் போன்ற பயிற்சிகள் கட்டுமானத்துறை பணியாளர்களுக்கு அவசியம். அதற்கான பயிற்சிகளையும் பல நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
Related Tags :
Next Story