கட்டுமான பணிகளை சிக்கனமாக மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பம்


கட்டுமான பணிகளை சிக்கனமாக மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 2 Feb 2019 11:33 AM GMT (Updated: 2 Feb 2019 11:33 AM GMT)

அரசு அறிவித்துள்ள கட்டுமான ஒழுங்கு முறை விதிகள்படி கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும்.

மேலும், கட்டுமானங்கள் தொடர்பான எல்லாவிதமான செயல் திட்டங்களையும் குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிலையில் சிக்கன செலவு கொண்டதாகவும், புதுமையான தொழில் நுட்ப முறையாகவும் உள்ள கட்டுமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.

இயற்கை சூழலின் பாதுகாப்பு

இயற்கை வள ஆதாரங்களான மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருள்களின் பற்றாக்குறை, அவற்றின் விலையேற்றம் போன்ற காரணங்கள் மற்றும் பெருநகர்ப்புற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவையும் கட்டுனர்களுக்கு தொழில் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் சிக்கனமான நடவடிக்கைகளுக்கு உகந்த கட்டுமான துணைப்பொருட்களை காலத்துக்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலர் சுவர் அமைப்பு

மேற்கண்ட முறையில் கட்டுமான பணிகளை சிக்கனமாக செய்து முடிக்க உதவியாக இருக்கும் தொழில்நுட்பம் ‘டிரைபிக்ஸ் சிஸ்டம்’ என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏற்ற நடைமுறை, மணல் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைத்து செலவுகளில் சிக்கனத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியாக உள்ள இந்த தொழில்நுட்பம் பற்றி சில குறிப்புகளை இங்கே காணலாம்.

தண்ணீர் தேவை

பொதுவாக, கட்டுமான பணிகளின்போது ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் கிட்டத்தட்ட 25,000 லிட்டர் தண்ணீர் தேவை இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மீட்டர் சுவரை கட்டமைக்க சராசரியாக 325 லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம் என்பது கணக்கு.

மேற்கண்ட தண்ணீர் தேவையை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் விதத்தில் டிரைபிக்ஸ் சிஸ்டம் என்ற தொழில்நுட்ப முறை உதவியாக உள்ளது. வழக்கமான சுவர் மேற்காரை பூச்சு முறைக்கு முற்றிலும் மாற்று முறையாக இது செயல்படுகிறது. குறிப்பாக, சுவர் கட்டுமானத்தின்போது மேற்காரை பூசிய இணைப்பு பகுதிகளுக்கு நீராற்றல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கழிவுகள் குறைவு

சூழலை பாதுகாக்கும் வகையில் ஆற்று மணல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை வெகுவாக குறைக்க உதவும் இந்த மேற்பூச்சுக்கான ‘சூப்பர் க்ளு’ கேன்களில் அடைக்கப்பட்டு சந்தையில் கிடைக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலைத்தன்மை கொண்ட இந்த ‘க்ளு’ (சுவர் மேற்பூச்சுக்கான பசை) கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் இடத்தில் பணிகளை செய்து முடித்ததுபோக கழிவாக மீதமாவது பெருமளவு குறைவாகவே இருக்கும்.

சிக்கன செலவு

செலவில் சிக்கனம், உயர் தொழில் நுட்ப அம்சம் போன்ற அவசியமான அம்சங்களை உள்ளடக்கிய இந்த டிரைபிக்ஸ் சிஸ்டம் தொழில்நுட்பம் வீட்டின் சுவர்களை நேர்த்தியாக அமைக்க ஏற்றதாகவும், இன்றைய காலகட்டத்திற்கான சிறப்பு தொழில்நுட்பமாகவும் உள்ளது என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story