வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் இருவகை சக்திகள்


வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் இருவகை சக்திகள்
x
தினத்தந்தி 2 Feb 2019 6:12 PM IST (Updated: 2 Feb 2019 6:12 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடங்கள் அனைத்திற்கும் திசை அமைப்பு முக்கியம் என்ற அடிப்படையில் திசைகாட்டி உதவியோடு வீட்டின் திசைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.

எந்த ஒரு வீட்டுக்கும் அதன் பிரதான வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைகின்றன என்பதை வாஸ்து சாஸ்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வீட்டிற்குள் நுழையும் சக்திகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகிய இருவித சக்திகள் உள்ளன. அவை, வீட்டில் உள்ள உள் கட்டமைப்புகளின்படி அவற்றிற்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் வாஸ்து குறிப்பிட்டுள்ளது. அது பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

வடகிழக்கு பகுதி

படுக்கையறையில் தண்ணீர் சம்பந்தமாக அல்லது நீரூற்று ஆகியவை உள்ள படங்களை மாட்டி வைத்திருப்பது தவறானது. நீர் சக்தி என்பது வடகிழக்கு திசைக்கு உரியது என்ற நிலையில் படுக்கை அறை அமைந்துள்ள தென்மேற்கு பகுதி அதற்கு சற்றும் பொருத்தமாக இருக்காது.

பூஜை அறை அல்லது அதன் உள்புறத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அல்லது கடவுள் படங்களை படிக்கட்டுகள் அல்லது பீம்களுக்கு நேர் கீழே வைக்கக் கூடாது. அப்படி வைப்பது அது மன அழுத்தத்தை உருவாக்கலாம். குறிப்பாக, வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களை வைப்பதும் தவறானது.

நேர்மறை சக்திகள்

மாலை நேரங்களில் வீட்டில் ஒலிக்கும் நல்ல இசையின் காரணமாக உருவாகும் அதிர்வுகள் வீட்டில் உள்ளவர்களின் மனதில் எதிரொலித்து மன அமைதியை ஏற்படுத்துவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டின் வடகிழக்கு திசையில் உள்ள பூஜை அறையில் உள்ள தெய்வ சிலைகள் அல்லது படங்களை கிழக்கு நோக்கி அமர்ந்து அல்லது நின்று வணங்கும்போது நேர்மறை சக்திகள் அங்கே ஈர்க்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், வடகிழக்கு திசையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வீட்டின் பிரம்மஸ்தானமான மையப்பகுதி வீட்டிற்2கு சுவாசம் அளிக்கும் இடமாக செயல்படுகிறது. அதனால், அப்பகுதியில் கனமான பொருட்கள் இருப்பது அல்லது குப்பைகளை போட்டு வைப்பது ஆகியவை கூடாது. அறையின் நுழைவாசல்கள் அல்லது நீல வண்ன விளக்குகள் கொண்ட சாண்டலியர்கள் போன்றவை இப்பகுதியில் இருக்கலாம்.

எதிர்மறை சக்திகள்

ஜப்பானிய கலையான ‘போன்சாய்’ முறையிலான மரங்களை வீடுகளுக்குள் வைப்பதை வாஸ்து வல்லுனர்கள் வரவேற்கவில்லை. தனிப்பட்ட நம்பிக்கையின்படி அவற்றை வீடுகளில் வைத்தாலும், வளர்ச்சி நிலையின் குறுகிய வடிவமாக அந்த முறை அமைந்துள்ளதை கவனத்தில் கொள்ளும்படி வாஸ்து வல்லுனர்கள் சுட்டிகாட்டி இருக்கின்றனர்.

எதிர்மறை சக்திகளை அகற்ற வீட்டின் தரைத்தளத்தை அவ்வப்போது கடல் நீர் அல்லது உப்பு நீர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. அதன் மூலம் எதிர்மறை சக்திகள் எளிதாக அகற்றப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

குளியலறை மற்றும் கழிவறை ஆகியவை எதிர்மறை சக்திகளை குறிப்பதாக நம்பிக்கை. அதன் அடிப்படையில் அவை வடகிழக்கு திசையில் அமைவது கூடாது. அப்படி இருந்தால் வீட்டின் பொருளாதார நிலை, உடல்நிலை மற்றும் கல்வி போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை வாஸ்து குறிப்பிட்டுள்ளது.

வெளிப்புற சுவர்கள்

வீட்டின் வெளிப்புற சுவர் அல்லது காம்பவுண்டு சுவர் ஆகியவற்றின் கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளில் வளைவுகள் அல்லது துண்டிக்கப்பட்ட அமைப்பு ஆகியவை இருக்கக்கூடாது. மற்ற திக்குகளில் அதன் மனை அமைப்பை பொறுத்து அதன் சுவர் அமைப்பை கட்டமைத்துக்கொள்ளலாம். 

Next Story