கான்கிரீட் கட்டமைப்புகளை துண்டிக்க உதவும் நவீன கருவிகள்


கான்கிரீட் கட்டமைப்புகளை துண்டிக்க உதவும் நவீன கருவிகள்
x
தினத்தந்தி 2 Feb 2019 6:18 PM IST (Updated: 2 Feb 2019 6:18 PM IST)
t-max-icont-min-icon

கான்கிரீட் கட்டுமானங்கள் கச்சிதமாக திட்டமிடப்பட்டு வடிவாக்கம் பெறுகின்றன. பணிகள் முடிந்த பின்னர் பல்வேறு வசதிகளுக்காக அவற்றில் துளையிடுவது, குறிப்பிட்ட பகுதியை அறுத்து அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

அந்த பணிகளை நல்ல அனுபவம் மிக்க பணியாளர்களை கொண்டு செய்வது அவசியமானது.

காரணம், வலிமையான கான்கிரீட்டின் சரியான பகுதியை தக்க அடையாளங்களை இட்டு அகற்றுவது அல்லது தேவையான அளவில் துளைகள் இடுவது ஆகியவை சரியாக செய்யப்படுவது முக்கியம். இல்லாவிட்டால் அவை இரட்டை வேலையாக அதாவது இடிக்கப்பட்ட பகுதியை மீண்டும் கான்கிரீட் மூலம் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய நவீன முறைகள் இல்லாத காலங்களில் இந்த பணிகளை மேற்கொள்ள ‘ஜாக் ஹாம்மர்கள்’ மூலம் கான்கிரீட் உடைக்கப்படும் அல்லது தேவையான இடத்தில் துளைகள் இடப்படும். இன்றைய நிலையில் அதிநவீன கான்கிரீட் கட்டிங் மெஷின்கள் மூலம் மேற்கண்ட பணிகள் எளிதாக செய்து முடிக்கப்படுகின்றன.

அத்தகைய மெஷின்கள் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

* டயமண்ட் கட்டிங் தொழில் நுட்பம் மூலம் கான்கிரீட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட அனைத்து வகையான உலோகங்களையும் எளிதாக தேவையான அளவுகளில் விரைவாகவும், துல்லியமாகவும் கட்டிங் செய்து கொள்ளலாம். இத்தகைய கருவிகளை பயன்படுத்தும்போது அதிர்வுகள் மற்றும் இரைச்சல் எழுப்பும் சத்தங்கள் போன்ற சிக்கல்கள் அதிகமாக ஏற்படுவதில்லை.

* கான்கிரீட் தரைப்பரப்பின் வேண்டாத பாகங்களை துண்டிப்பதற்கு பிளாட் மற்றும் ‘ஸ்லாப் சாவிங்’ என்ற முறை பயன்படுகிறது. மேலும், கான்கிரீட் இணைப்புகள், சுவரில் குழாய்கள் பதிப்பதற்கான காடிகள் எடுப்பது, பழுதான கான்கிரீட் பாகங்களை அகற்றுவது போன்ற பணிகளில் இந்த முறை பயன்படுகிறது.

* சுவர்களின் கனம் 16 முதல் 36 அங்குலம் வரை உள்ள சுவர்களை தேவைப்படும் பகுதிகளில் வேண்டிய அளவு துண்டிக்க ‘கான்கிரீட் வால் சாவிங்’ மெஷின் பயன்படுகிறது. வட்ட வடிவமான பிளேடுகள் கொண்ட இக்கருவி மூலம் சுவர்களை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் துண்டிக்க இயலும். அதற்கேற்ப தக்க டிராக் மவுண்டடு அமைப்பு அதாவது செங்குத்து அல்லது கிடைமட்ட தண்டவாளங்களுக்கு மத்தியில் பிளேடு இயங்கும் பாதை நிர்ணயிக்கப்படும்.

* மேற்கண்ட கான்கிரீட் துண்டிப்பு முறைகள் எதுவும் பயன்தராத நிலையில் ‘ஒயர் சாவிங்’ என்ற முறை பயன்படுத்தப்படும். அகலமான அல்லது கனமான கான்கிரீட், மார்பிள் அல்லது கிரானைட் போன்றவற்றை வேண்டியவாறு துண்டிக்க இந்த தொழில்நுட்பம் உகந்தது. அதாவது, சைக்கிள் செயின் போன்று இருக்கும் கேபிளை தக்க உருளைகள் பொருத்தப்பட்ட கருவி மூலம் சுழல வைத்து கான்கிரீட் துண்டிக்கப்படுகிறது.

* பிளம்பிங் மற்றும் ஏர்-கண்டிஷனர்களுக்கான குழாய்கள் செல்வதற்கு தேவையான வட்ட வடிவ துளைகளை கான்கிரீட் அமைப்பில் ஏற்படுத்த உதவுவது ‘கோர் டிரில்லிங்’ முறையாகும். இதன் மூலம் கச்சிதமான துளைகளை சேதமில்லாமல் அமைக்க இயலும்.

Next Story