தமிழர் கட்டிட கலையின் சிறப்பம்சங்கள்


தமிழர் கட்டிட கலையின் சிறப்பம்சங்கள்
x
தினத்தந்தி 2 Feb 2019 6:39 PM IST (Updated: 2 Feb 2019 6:39 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடக்கலை நுட்பத்தில் சிறப்பான இடத்தை பெற்ற தமிழர் கட்டிடக்கலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் தென் பகுதியில் முக்கியமான இடத்தை பெற்றிருந்தது.

சமூக அமைப்பில் கோயில்களை முதன்மை கட்டுமானங்களாக கொண்ட அந்த கட்டிடக்கலையில் நுணுக்கமான அம்சங்கள் இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் பரவலாக இன்றும் இருக்கின்றன. மேலும், பல்வேறு காலகட்டங்களில் தமிழக பகுதிகளை ஆட்சி செய்த ராஜ்ஜியங்களின் அடிப்படையில் அவற்றின் தாக்கமும், தனித்தன்மையும் தமிழக கட்டிட கலையின் மீது பதிந்து புதிய அம்சங்களும் உருவாகி இருக்கின்றன.

ஆரம்ப கால கட்டுமான பொருட்கள்

சுமார் 6 நூற்றாண்டுக்கு முன்னர் சுடு மண், மரம், சுதை, மூங்கில், வைக்கோல், புல் மற்றும் செங்கல் ஆகியவை கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு அனைக்கப்பட்ட வீடுகளும், மன்னர் மாளிகைகளும், வணிக நிறுவனங்களும், பொது இடங்களும் இருந்ததற்கான அடையாளங்கள் இன்று பல இடங்களில் உள்ளன. கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டிற்கு பின்னர் கட்டுமான பணிகளில் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டு கட்டிடங்கள் உருவாயின.

கட்டமைப்பு முறைகள்

வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் அமைப்ப தில் ‘பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து..’ என்ற சங்க பாடலுக்கேற்ப மக்களின் தேவைகள் மற்றும் வசதி ஆகியவற்றை அனுசரித்து கட்டிடங்களை மக்கள் அமைத்துக்கொண்டனர். வீடுகள் கட்டுவதற்கு முன்னர் தேர்வு செய்த நேரத்தில் கடைக்கால் அமைக்கும் வழக்கமும் இருந்தது. தமிழர் கட்டிடக்கலையில் பொதுவான அம்சங்கள் அஸ்திவாரம், சுவர்கள் மற்றும் மேற்கூரை, விமானம் அல்லது கோபுரம் ஆகியவை. எந்தவொரு கட்டிட அமைப்பும் அவற்றின் அடிப்படையிலேயே கட்டப்பட்டன. அவ்வாறு அமைந்த வீடுகளின் நிலைகளில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. காற்று வசதிக்காக வீட்டின் சுவர்களில் விதவிதமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டன.

பாறைகளில் கட்டுமானங்கள்

தமிழக கட்டிடக்கலையில் பல்லவர்கள் காலம் புதிய பார்வையை உண்டாக்கியது. அவர்களது கட்டிடக்கலை அமைப்புகள் குடைவரை, கற்றளி மற்றும் கட்டுமான கோவில் என்று மூன்று விதங்களில் அமைந்தன. குடைவரை என்பது குறிப்பிட்ட பாறையின் ஓரிடத்தில் தொடங்கி கட்டுமான வடிவமைப்புக்கு ஏற்ப பாறையை சரியாக செதுக்கிச்செல்ல வேண்டும். அந்த நிலையில் பாறையில் விரிசல்கள் உருவானால் பணி கைவிடப்படும் என்ற நிலையில் தக்க ஒலியியல் சோதனைகள் செய்து கற்களின் உறுதி கண்டறியப்பட்டது.

தமிழர் கட்டிடக்கலையில் கற்றளி என்பது நிலத்திலிருந்து துருத்தி கொண்டிருக்கும் பாறை அல்லது குன்று பகுதியை வெளிப்புறமாக மேலிருந்து கீழாக குடைந்து அமைக்கப்படும் கோயில் அமைப்புகள் ஆகும். பின்னர், ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கற்கள் கொண்டு கட்டுமான கோயில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது மாமல்லபுர கடற்கரை கோவில் ஆகும். யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 45 அடி உயரத்தில் கட்டுமான கோவில்களுக்கும், தமிழர் கட்டுமான நுட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக இன்றும் அது போன்ற கோவில்கள் உள்ளன.

தொழில் நுட்ப அம்சங்கள்

பின்னர், சோழர்கள் காலத்தில் தமிழர் கட்டிட கலை வளர்ச்சி பெற்று, பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. அவை பல்லவர்களின் கட்டுமான பாணியை பின்பற்றியிருந்தாலும், அவற்றிலிருந்து பல்வேறு நிலைகளில் வேறுபட்டிருந்தன. கருங்கற்களை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கோயில்களை சோழர்கள் அமைத்தனர். அவர்கள் பல்வேறு பொது கட்டமைப்புகளையும் வடிவமைத்து கட்டிடக்கலையை வளர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தென்னகத்தில் சிறப்பான கட்டிடக்கலை வல்லுனர்கள் கொண்ட விஜயநகர அரசின் கட்டிட கலை அம்சங்கள் பொருந்திய கோவில்கள் அமைக்கப்பட்டன.

இன்றைய கட்டிடக்கலை

பின்னர் போர்த்துக்கீசியர்கள் மற்றும் ஆங்கிலேய கட்டிட கலை பாணிகளின் தாக்கம் சென்னை, தூக்குக்குடி போன்ற கடலோர நகரங்களின் பொது கட்டமைப்புகளில் வெளிப்பட்டன. அதன் பின்னர் வட்டார வழக்குகள் மற்றும் மக்களின் வாழ்வியல் நடைமுறைகளுக்கேற்ப வெவ்வேறு இயற்கை பொருட்கள் பயன்படுத்தி குடியிருப்புகள் உள்ளிட்ட பொதுக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்றைய கட்டுமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டமைப்புகளை விரைவில் உருவாக்கும் ‘பிரி-பேப்ரிகேட்டடு’ கட்டுமான யுக்தி மூலம் சில வாரங்களில் வீடுகளை அழகாக உருவாக்கி குடியேற இயலும் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story