காவலர் வீட்டு வசதி கழகத்தின் புதுமை கட்டமைப்பு
இன்றைய கட்டுமானத்துறையின் பன்முகப்பட்ட வளர்ச்சிகள் காரணமாக வீடுகள் அமைப்பதில் விதவிதமான கட்டுமான பொருட்கள் மற்றும் அதற்கான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நாள் தோறும் அறிமுகமாகி வருகின்றன.
இன்றைய கட்டுமானத்துறையின் பன்முகப்பட்ட வளர்ச்சிகள் காரணமாக வீடுகள் அமைப்பதில் விதவிதமான கட்டுமான பொருட்கள் மற்றும் அதற்கான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நாள் தோறும் அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக, ‘மாடுலர் பேனல்கள்’ மூலம் ஒரு வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை தொழிற்சாலைகளில் தக்க அளவுகளின் அடிப்படையில் தயாரித்து எடுத்து வந்து சிக்கன செலவில் வீடாக அமைத்துக்கொள்ளலாம்.
அஸ்திவாரம் மட்டுமே கான்கிரீட் அமைப்பாக இருக்கும். மற்ற சுவர்கள் அனைத்தும் ரெடிமேடுதான். எதிர்காலத்தில் குடியிருப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பமாக இந்த முறை கவனிக்கப்படுகிறது.
‘ரீ–இன்போர்ஸ்டு தெர்மாகோல்’
முற்றிலும் ‘ரீ–இன்போர்ஸ்டு தெர்மாக்கோல்’ அமைப்பின் மூலம் சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ் விடுதியில், தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழகம் (Tamil Nadu Police Housing Corporation- TNPHC) கிட்டத்தட்ட 40 நாட்களில் மேற்கண்ட மாடுலர் பேனலை பயன்படுத்தி இரண்டு மாடி கட்டிடத்தை அமைத்துள்ளது. கர்நாடகா, ஐஐடி–ஜம்மு மற்றும் இந்திய ரயில்வே ஆகியவற்றில் இவ்வகை கட்டமைப்புகளை அமைத்த தனியார் நிறுவனம் இதன் கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு செய்திருக்கிறது. அதன் கட்டமைப்பு பற்றி வீட்டு வசதி கழக தலைமை பொறியாளர் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.
பட்ஜெட் குறைவு
கடந்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2017–மே மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. செங்கல் பயன்படுத்தாமல் ரீ–இன்போர்ஸ்டு தெர்மாகோல் மூலம் முதல் பரீட்சார்த்த முயற்சியாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சுமார் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் வழக்கமான கட்டுமான முறையினை பயன்படுத்தினால் ஆகும் செலவை விடவும் 30 சதவீதம் குறைந்த பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டது. மேலும், இதே அளவுள்ள கான்கிரீட் கட்டுமானத்தை விட கிட்டத்தட்ட 25 சதவிகிதம் எடை குறைவானது என்பதும் கவனிக்கத்தக்கது. அதன் காரணமாக, தூண்கள் அல்லது பீம்கள் தேவையில்லாமல் வீட்டை அமைத்துக்கொள்ளலாம்.
வெற்றிகரமான புது முயற்சி
இவ்வகை கட்டுமான தொழில் நுட்ப முறையில் வீட்டின் சுவர்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகளில் ரெடிமேடாக தயாரித்து எடுத்து வந்து தேவையான இடத்தில் பொருத்தி வீடாக அமைத்துக்கொள்ளலாம். கட்டுமான துறையில் மணல் தட்டுப்பாடு இருந்த சமயத்தில் தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் இந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக பணியை முடித்துள்ளது.
அனைத்தும் பேனல்கள்
இவ்வகை கட்டமைப்புகளின் தொடக்க நிலையில் வழக்கமான கான்கிரீட் அஸ்திவாரம் அமைக்கப்படும். பின்னர், கட்டிடத்தின் வடிவமைப்பு திட்டத்தின்படி தேவையான செங்குத்து பேனல்கள் பொருத்தப்படும். அந்த பேனல்களானது முன்னும், பின்னும் கம்பி வலை கொண்டு பிணைக்கப்பட்ட தெர்மோகோல் வைத்து சுற்றிலும் கான்கிரீட் அமைத்து கச்சிதமாக உலர வைக்கப்பட்டதாகும்.
40 நாட்களில் கட்டிடம்
அவற்றை கொண்டு தேவையான அளவுகளில் பக்கவாட்டு சுவர்கள் அமைத்து, சிமெண்டு மேற்பூச்சு கொடுத்தால் பேனல்கள் தயாராகி விடும். அவற்றை கான்கிரீட் அடித்தளங்களில் அமைத்து சுவர்கள் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை பொருத்திக்கொள்ளலாம். இந்த பணிகளை மேற்கொள்ள எட்டு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு கட்டுமான பொறியாளர்கள் கொண்ட குழு செயல்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பின்னர் கட்டமைப்பின் உட்புற காரை பூச்சு வேலைகள் தொடங்கப்பட்டன. அடுத்த வந்த 15 நாட்களுக்குள் உட்புற சுவர் மேற்காரை பூச்சு, பிளம்பிங், மின்னணு மற்றும் இதர உள் கட்டமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. ஒட்டு மொத்த கட்டமைப்புக்கான பணிகளை பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட 40 நாட்களே ஆனது.
உள்புற வெப்பம் குறைவு
பொதுவாக, கட்டிட அமைப்புகளுக்கான சுவர்கள் 250 மிமீ கனம் கொண்டவையாக இருக்கும். ஆனால், இவ்வகை தெர்மாகோல் அடிப்படையில் அமைக்கப்படும் கட்டிடங்களின் சுவர்கள் 125 மி.மீ முதல் 130 மி.மீ கனம் மட்டுமே கொண்டுள்ளன. அதன் காரணமாக, கட்டிடத்தின் உட்புற அறைகளின் பரப்பளவு அதிகமாக கிடைக்கும். குறிப்பாக, தெர்மாகோல் என்பது வெப்பம் கடத்தாத பொருள் என்பதால், கோடை காலங்களில் வெப்பத்தை உள்ளிழுத்து வீடுகளுக்குள் விடாது. அதனால், வீட்டின் உட்புறம் சற்றே குளிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கான்கிரீட்டை விட எடை குறைவானதாக இருப்பதால் பூகம்பம் போன்ற நில அதிர்வுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இந்த தொழில்நுட்பம் மூலம் பெருமளவு தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
முன்கூட்டியே திட்டம் அவசியம்
இவ்வகை கட்டமைப்புகளில் குழாய்கள் பதிப்பது, ஸ்விட்ச் பெட்டிகளை பொருத்துவது உள்ளிட்ட பணிகளை முன் கூட்டியே சரியாக திட்டமிடுவது அவசியம். வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் தேவையான இடங்களில் துளை இடுவது உள்ளிட்ட பணிகளை செய்வது சிரமமானது. திட்டமிடப்பட்ட இடங்களில் பொருத்தப்பட வேண்டிய பொருட்களை மட்டுமே அதற்குரிய இடங்களில் அமைக்க இயலும் என்றும் தலைமை பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story