சமையலறை பாராமரிப்புக்கு அவசியமான குறிப்புகள்
சமையலறை பராமரிப்பு என்பது இல்லத்தரசிகளுக்கு எப்போதுமே சலிப்பை தருகிறது என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர். அந்த பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.
சமையல் ‘பிளாட்பார்ம்’
வீட்டின் கட்டுமான பணிகளின்போதே டிசைனர் மூலம் மாடுலர் கிச்சனில் அமைக்கவேண்டிய ‘கன்சீல்டு’ அதாவது சுவருக்குள் பொருத்த வேண்டிய பகுதிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே பெறுவது நல்லது. கட்டுமான பணியின்போதே மாடுலர் கிச்சன் வைக்க முடிவெடுக்கும் நிலையில் முதலிலேயே கிச்சன் மேடை அமைப்பது கூடாது. கப்போர்டுகள் மற்றும் கேபின்கள் ஆகியவற்றை அமைத்த பின்னரே கிச்சன் மேடை அமைக்கப்பட வேண்டும்.
கியாஸ் சிலிண்டர்
ஸ்டோரேஜ் அமைப்புக்கான பிளைவுட் கேபின்களை ஒன்றரை அங்குல அளவுக்கு வெளிப்புறம் நீண்டிருக்குமாறு சமையலறை கிரானைட் மேடையை அமைத்தால், சுத்தம் செய்யும்போது கசியும் நீர் காரணமாக பாதிப்புகள் உருவாகாது. மேலும், ‘கியாஸ் ஹப்புக்கு’ வரும் இணைப்பு குழாய் அடிக்கடி செக்-அப் செய்யும் வகையில் இருக்கவேண்டும். ஹப்புக்கு கீழ்ப்புறத்தில் கூடுமானவரை கேபின்களை வைக்காமலும், கியாஸ் சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது பாதுகாப்பானது.
‘சிங்க்’ கவனம்
பொதுவாக, மாடுலர் சமையலறை அமைப்புகளில் பூச்சிகள் மற்றும் எலிகள் நுழைவதற்கான வாய்ப்பு ‘சிங்க்’ மூலம் ஆரம்பிக்கிறது. அதனால், சமையலறை சிங்க் அமைப்பிலிருந்து வெளிப்புறம் செல்லும் பைப்புகளை கொசு வலை கொண்டு மூடிவிடலாம். அதன் குழாய் மூலமாக சாக்கடையில் இருந்து பூச்சிகளும் எலிகளும் சமையலறைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அனுபவமிக்க பிளம்பர் மூலம் ‘சிங்க் ஹோஸ்களில்’ கசிவுகள் ஏதும் இல்லாதவகையிலும், வெளிப்புற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கும்படியும் கச்சிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாக சிங்க் அமைப்புக்கு கீழ்ப்புறம் உள்ள குப்பை தொட்டியை தினமும் அகற்றுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மூடிய ‘டஸ்ட்பின்’ கேபின் வழியாக நுண்கிருமிகள் உருவாகி ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைய வாய்ப்பு உண்டு. பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளில் பலரது மாடுலர் சமையலறைகளை ‘டிஷ் வாஷர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. உள் அமைந்த ‘இன் பில்ட்’ வகை ‘டிஷ் வாஷர்’ பொருத்தும்போது சமையலறையின் பராமரிப்பு எளிதாக இருப்பதுடன் தண்ணீர் கசிவையும் தவிர்க்க இயலும்.
சிம்னி பாராமரிப்புகள்
சமைக்கும்போது பெரும்பாலானோர் சிம்னியை இயக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால், உருவாகும் பிசுபிசுப்பு சிம்னியில் படிந்து அழுக்காக மாறுகிறது. அதனால், ‘கேஸ் ஹப்புக்கு’ மேற்புறம் உள்ள சிம்னியை சுத்தம் செய்வது சிக்கலாக மாறி விடுகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது சந்தையில் ‘ஆட்டோ கிளன் சிம்னி’ (Auto Clean Chimney) வகைகள் கிடைக்கின்றன.
பொதுவாக, சிம்னியில் இருக்கும் ‘பில்டர்களை’ வாரம் ஒரு முறை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இரவில் பில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலையில் சோப் கொண்டு கழுவிய பின்னரும், அவற்றில் பிசுபிசுப்பு இருக்கும் பட்சத்தில் திரவ கிளனர் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.
பிளைவுட் அலமாரிகள்
சமையலறையில் உள்ள கேபின்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அமைப்பாக இருந்தால், பாத்திரங்களை கழுவிய பின்னர் அவற்றை உலர்வதற்கு முன்னரே அடுக்கி வைப்பதால் அவை துரு ஏற்படலாம். அதனால், பிளைவுட் கப்போர்டுகளை அமைப்பதே நல்லது. கேபின் கதவுகளுக்கு பொருத்தப்படும் கைப்பிடிகளை கழன்று போகாத அளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே கைப்பிடிகளின் தரத்தையும், பொருத்திய விதத்தையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். நீரின் ஈரப்பதம் காரணமாக கைப்பிடியில் துரு ஏறாமல் இருக்க, வாரம் ஒருமுறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.
சமையலறை வடிவமைப்பின்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர்த்தியான நிறத்திலும், மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.
Related Tags :
Next Story